Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெல்ல இறங்கிச் சென்றது - சிறுகதை: நிழலி

Featured Replies

அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன்

 

நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது

 

நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது

மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின்  வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது

காதுகள் இருந்த இடம் தெரியவில்லை.

 

நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம்.

 

கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம்.

 

அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தது. காணாமல் போய் 30 நாட்களின் பின் தான் அவன் உடலை கண்டு பிடிக்க முடிந்திருந்தது. காணாமல் போய் அவனை தேடும் பொழுது அவன் ரயிலால் மோதுண்டு இறந்து இருப்பான் என்று நாம் நினைக்கவில்லை.

 

கொழும்பின் கனத்தை மயானம் அருகில் இருக்கும் ரேய்மன் மலர்சாலையில் எம்பார்ம் பண்ணுவதற்காக வளர்த்தி இருந்தது.

 

எம்பார்ம் பண்ணுகின்றவர்கள் அறைக்குள் வருகின்றார்கள். சாராயம் குடித்து இருந்தார்கள், அது குடிக்காவிடின் அவர்களால் இந்த வேலையை செய்ய முடியாது. நானும் நண்பன் ரஜீசும் பிரேத அறைக்குள் நின்று கொண்டு இருந்தோம். நாமும் குடித்து இருந்தோம்.

 

எம்மை வெளியே போகச் சொல்லிக் கேட்கின்றார்கள்

 

அண்ணனின் உடலில் இருந்து வெளியேறிய பழுப்பு நிற புழுவொன்று என் கால் பெருவிரலில் தன் உடலின் முன் பக்கத்தினை உயர்த்தி பின் பக்கத்தினை நகர்த்தி ஏறிக் கொண்டது.

 

----------------

 

அண்ணா கானாமல் போன அந்த இரவில் அவனை இறுதியாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையம் அருகில் தான் கண்டேன். ரோட்டில் பெடியங்களுடன் நிற்கும் போது "கெதியன வீட்டை போ...அம்மா தேடுவா" என்று சொல்லிப் போட்டு வந்த பேருந்தில் ஏறி போய்விட்டான். நானும் இரண்டு மணி நேரம் கழித்து வீட்டை போய் பார்க்கும் போது அவன் வீட்டுக்கு வந்து இருக்கவில்லை.

 

"என்னை கெதியன வீட்டை போகச் சொல்லிவிட்டு ஆள் நல்லா ஊர் சுத்துறான்' என்று நினைத்து விட்டு அம்மாவிடமும் எதுவும் சொல்லாமல் படுக்கப் போய் விட்டேன். உண்மையில் அம்மாவிடம் சொல்லுவதற்கு எமக்கு எந்த வார்த்தைகளும் இருக்கவில்லை. அல்லது நெஞ்சுக்குள் அடை காத்துக் கொண்டு இருந்த வார்த்தைகள் நெருப்பாக பொழிந்து விடுமோ என்று பயத்தில் கொஞ்ச நாட்களாக அம்மாவிடம் எதுவும் கதைப்பதும் இல்லை.

 

அம்மாவும் எம்முடன் அதிகமாக கதைப்பதை நிறுத்தி விட்டார். அப்பா தனக்குள் அமுங்கி போய் பல வருடங்களாகி விட்டமையால் அவரும் யாருடனும் அதிகம் கதைப்பது இல்லை. ஊரில் இருக்கும் போது, பல வருடங்களுக்கு முன்னர் வெளியே போனவரை  ஆமி பிடிச்சு வைச்சு அடி அடியென அடிச்சு துவைச்சு போட்டு ஒரு உடுப்பும் இல்லாமல் ரோட்டில் போட்ட பின் அவர் தனக்குள் நொருங்கி கடும் அமைதியாக போய் விட்டார். அப்பர் அதுக்கு முதல் வெறுமேலுடன் கூட விறாந்தைக்கு வராதவர். கண்ணியம் உடுப்பிலும் இருக்க வேண்டும் என்று நினைச்சவர்.

 

அம்மாதான் பாவம், அப்பா நொருங்கிய பின் எம்மை தாங்கி நின்றவர்.  எங்கள் இருவரில் அண்ணாவையாவது முதலில் லண்டனில் இருக்கும் அண்ணரிடம் அனுப்பினால் அங்கு அவன் போய் என்னையும் கூப்பிட்டு விடுவான் என்ற நினைச்சு ஓடுப்பட்டு திரிந்தவர்.

 

-------------------------------------

 

வெளியில் நிற்கின்றோம்.

 

பிணவறைகளின் அருகே இருந்து வரும் நாற்றம் கொடியது. மூக்கினில் ஏறி மண்டையின் உச்சி வரைக்கும் போய் வாழ் நாள் முழுதும் நிலைத்து இருக்கும் நெடி அது. மணத்தினை விரட்டுவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக சிகரெட் குடித்துக் கொண்டு இருந்தோம்.

 

பெருவிரலில் ஏறிய புழு எங்கு போய் விட்டது என தெரியவில்லை. ஆனால் அது ஊரும் போது இருந்த வழுவழுப்பு  இன்னும் பெருவிரலில் ஊர்ந்து கொண்டே இருக்கு என்ற பிரமையைத் தந்தது.

 

அண்ணாவின் உடலை அணு அணுவாக புசித்து கொழுத்த புழு அது.

 

அண்ணாவை 30 நாட்களாக இதே பிணவறையில் தான் வைத்து இருந்து இருக்கின்றார்கள். அவனை காணவில்லை என்று தேடத் தொடங்கி இரண்டாம் நாளே கொழும்பாஸ்பத்திரியின் இதே பிணவறைகளில் வந்து தேடியிருக்கின்றேன். இன்று காலை அவன் உடலை எடுத்து வெளியே காட்டிய அதே லாச்சியை (பிணங்களை வைத்திருக்கும் லாச்சி) திறந்தும் பார்த்து இருக்கின்றேன்.

 

அண்ணா போட்டு இருந்த வெளிர் நீல ஷேர்ட்டுடனும் கருப்பு டெனிமுடனும் முகத்தின் கீழ் பகுதி இரண்டாக பிளந்து இருந்த ஒரு உடலையும் கண்டும் இருந்தன்.

 

---------------------------------------------

 

இரண்டு தடவைகள் அண்ணா லண்டனுக்கு வெளிக்கிட்டு இடையில் பிழைத்துப் போய் மீண்டும் இலங்கைக்கே திரும்பி வந்து இருந்தான். இரண்டு தரமும் கூட்டிக் கொண்டு போன கணேசன் அண்ணா இடையில் ஏமாற்றிப் போட்டார் என்று பிறகு தான் தெரிந்தது. 

இரண்டாம் தரமும் பிழைச்சுப் போன நாளில் அம்மா பெரிய குரல் எடுத்து கத்தி அழுதுகொண்டு இருந்தவர். அப்பா வழக்கம் போல மெளனமாக இருந்து கொண்டு இருந்தார். கண்களின் ஓரப் பகுதியில் ஈரமாக இருந்த மாதிரி எனக்கு இருந்தது. ஆனால் சரியாக தெரியவில்லை. பிறகு அப்பா எழும்பிப் போய் கோப்பையை எடுத்து இரவுச் சாப்பாட்டை போடப் போகும் போது அம்மா பொறுக்க முடியாமல் 'சனியனே நான் ஒருத்தி கிடந்து அழுது குளறுறன் .. ஒரு கவலையும் இல்லாமல் சாப்பிடப் போறியா நாயே" என்று பேசி கோப்பையை தட்டி விட்டார்.

 

அதுக்குப் பிறகு அப்பா இரவில் சாப்பிடுவதும் இல்லை, பசிக்குது என்று கேட்பதும் இல்லை. அம்மா போட்டு வைச்சால் சாப்பிடுவார் இல்லாட்டி பேசாமல் படுத்து விடுவார். நானோ அண்ணாவோ சாப்பிடுங்கோ என்று எவ்வளவு கெஞ்சினாலும், இல்லை சாப்பாட்டை போட்டுக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்.

 

சில இரவுகளில் அவர் வயிறு அழும் சத்தம் மெதுவாகக் கேட்கும். அதைக் கேட்ட பிறகு எனக்கு நித்திரை வராது.

 

-----------------

 

எம்பார்ம் பண்ணி முடிச்சாச்சு என்று சொன்னார்கள்.

 

எங்களை உள்ளே பார்க்க விடவில்லை. நாங்களும் போக விரும்பவில்லை.

 

மனம் மிகவும் வெறுமையாக இருந்தது. பெருவிரலில் அந்தப் புழு ஊர்வது போன்று இருக்க இடைக்கிடை காலை பலமாக உதறி விட்டுக் கொண்டு இருந்தன்.

 

----------------------------

 

அண்ணா காணாமல் போய் விட்ட நாட்களில் கொழும்பில் இருக்கக் கூடிய பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், ஈபிடிபி முகாம்கள் என்று எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டு இருந்தன். அப்பா என்னுடன் எல்லா இடங்களுக்கும் வந்தாலும் ஒரு வார்த்தை கூட கதைக்க மாட்டார். யாரோ தனக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை தேடுகின்றேன் என்ற மாதிரி முகத்தை வைத்து இருப்பார்.

 

இடையில் ஒரு இரவு அண்ணாவை எங்கும் காணவில்லையே என்று நான் மெதுவாக அழும் போது கிட்ட வந்து தலையை தடவி விட்டார். கூர்ந்து பார்த்தேன் அவர் கண்களில் சலனம் இருக்கவில்லை. என்ன நடந்து இருக்கும் என்று அப்பாவுக்கு தெரிந்து இருக்குமோ என்று அவர் முகத்தைப் பார்க்கும் போது லேசாக சந்தேகம் வந்தது.

 

அம்மா அண்ணாவை தேடும் இடங்களுக்கு வரவில்லை. எப்பவும் கண்ணீர் விட்டுக் கொண்டு ஒரு மூலைக்குள் முடங்கியிருந்தார். மனசால் மிகவும் அடிபட்டு போயிருந்தார்.

 

---------------------------------------

 

அண்ணாவை மீண்டும் லண்டனுக்கு அனுப்ப மூன்றாவது தடவையாக முயன்று கொண்டு இருந்தார் அம்மா. லண்டனில் இருக்கும் மாமாவோ, இது தான் கடைசி தரம் இனி தன்னால ஒரு சதமும் தர முடியாது என்று சொல்லிப் போட்டார். அவர்தான் பாவம் முதல் இரண்டு தரமும் காசு அனுப்பினது.

 

இந்த முறை ஏஜென்சி வேலை செய்கின்ற ரவிந்திரன் நல்ல கெட்டிக் காரன் என்று சொல்லிச்சினம். வீட்டை வரும் போதெல்லாம் சிரிச்சு சிரிச்சு கதைப்பார். அப்பாவுக்கு வருத்தம் வந்த பிறகு அம்மா சிரிச்சது அவர் சொன்ன கதைகளைக் கேட்டுத்தான். அம்மா சின்ன வயதிலேயே கலியாணம் முடிச்சவர். அப்பா தனக்குள் அமுங்கிப் போகும் போது தன் முப்பதின் ஆரம்பத்தில் இருந்தவர். இப்ப தான் கன நாட்களுக்கு பிறகு சிரிக்கின்றார்,

 

கொஞ்ச நாட்களாக அப்பா மத்தியான நேரங்களில் வீட்டை இருக்காமல் வெளியே போய்விடுவார். அண்ணா கம்யூட்டர் கிளாசுக்கு போனார் என்றால் பின்னேரம் தான் வருவார். நான் ஏ லெவல் செய்கின்றபடியால ஒரே கிளாஸ் கிளாஸ் என்று போய்விடுவன்.

 

மூன்று நாட்களுக்கு முதல் மத்தியானம் அண்ணா வீட்டை வந்து உள்ளே போன போது அம்மா நிறைய சிரிச்சுக் கொண்டு இருந்து இருக்கின்றார்,

 

அதுக்கு பிறகு அண்ணா அம்மாவுடன் கதைப்பது இல்லை.

 

நாலாம் நாளில் இருந்து அவனைக் காணவில்லை.

 

----------------------------------------------------------------------

 

மீண்டும் காலை உதறி விடுகின்றேன்.

 

திரும்பத் திரும்ப புழு ஊருகின்றமாதிரியே இருக்கு.

 

அண்ணாவின் உடம்பை அவர் காணாமல் போய் இரண்டாம் நாளே பிணவறைக்குள் கண்டு இருந்தன். ஆனால் என் புத்தி அதனை ஏனோ அண்ணாவென்று ஏற்கவில்லை. முகம் நெற்றியின் கீழ் சிதைந்து இருந்ததால் அவனை மாதிரி இருக்கு என்று மனம் சொன்னாலும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியும் உயிருடன்  வருவான் என்று நினைச்சு இந்த 28 நாளும் ஒவ்வொரு கணமுமாக தேடியிருக்கின்றன்.

 

என் அண்ணா, எனக்கே எனக்கான அண்ணா. உயிரும் உணர்வுமான அண்ணா.

 

செத்தே போயிருந்தான்.

 

நேற்று மீண்டும் வெள்ளவத்தை பொலிசுக்கு போய் விவரம் ஏதும் தெரிந்ததா என்று கேட்கும் போதுதான் ஒரு மாசத்துக்கு முதல் இரவு ரயிலில் ஒருவர் மோதுண்டு செத்தவர் என்றும் அவரது உடைந்து போன மணிக்கூடு இது தான் என்றும் காட்டிய போதுதான் என் புத்தி அந்த உடம்பு அண்ணாவினது என்று உணர்த்தியது.

 

உடம்பை அடுத்த நாளே எரிக்கச் சொல்லியிருந்தார்கள். அவசர அவசரமாக இறுதிக் கிரியைகள் எல்லாம் செய்தோம்.

 

அம்மா ஒவ்வொரு அரை மணித்தியாலத்துக்கும் ஒரு முறை மயங்கி மயங்கி விழுந்து கொண்டு இருந்தார். அழக்கூட பலம் இருக்கவில்லை.

 

அப்பா நிலை குத்தின விழிகளுடன் தேவாரம் பாடிக் கொண்டு இருந்தார்.

 

------------------

 

நான் இப்ப லண்டன் வந்து விட்டேன்.

 

அண்ணா வர இருந்த லண்டன் எனக்கு மட்டும் வாய்த்தது.

 

இங்கு வந்த பிறகும் கூட காலை அடிக்கடி உதறி விட்டுக் கொண்டே இருந்தன். இன்னும் பெரு விரலில் உயிர்ப்பாக அந்த புழுவின் ஊரல் இருந்தது.

 

பிறகு ஒரு நாள் மத்தியானம் தொலைபேசி அழைத்தது

 

மறுமுனையில் இருந்தவர்  அம்மா ஊரில் தவறிவிட்டதாகச் சொன்னார்.

 

என் கால் பெருவிரலில் இருந்து ஒரு புழு கீழே இறங்கிச் சென்றது.

 

அண்ணாவை புசித்த புழு.

 

---------------------------------------------

 

மார்ச் 18, 2014

Edited by நிழலி
ஒவ்வாமல் இருந்த ஒரு சிறு வரியை நீக்கிவிட

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் நகர்வு அந்த சம்பவங்களின் பின்னால் நடந்து அவற்றையெல்லாம் கடந்து வருவது போல இருக்கிறது. மரணம் மனித மனங்களில் தரும் தாக்கமானது காலங்களுக்கும் மாறாத துயரம் நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதம் நன்று. வசித்து முடிக்கும் வரை வேறு யாரோ எழுதியதுதான் என்று நம்பிக்கொண்டுதான் வாசித்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்திய விதம் நன்று. வசித்து முடிக்கும் வரை வேறு யாரோ எழுதியதுதான் என்று நம்பிக்கொண்டுதான் வாசித்தேன் .

 

நிழலியின் எழுத்துக்களிலோ, கவிதைகளிலோ  எப்போதுமே, ஒரு விதமான,'ஏக்கம்' இழையோடிய படியே இருக்கும்!

 

ஒருவேளை, 'போர்க்காலங்களின் 'முழுத் தாக்கத்தின்' வலிகளையும், நேரடியாக உணர்ந்ததனாலோ, என்னவோ என்று பல சந்தர்ப்பங்களில், சிந்தித்துப் பார்த்திருக்கிறேன்!

 

நிழலியின், 'அப்பாவின் மரணம்' பற்றிய 'கவிதை', யாழில் எங்கோ இருக்கின்றது. தேடிப்பிடித்து வாசித்துப் பாருங்கள்.

 

அவரது 'மகளின் பிறப்பு' பற்றிய இன்னொரு கவிதையும் இருக்கின்றது. அதையும் தேடிப்பிடித்து வாசித்துப் பாருங்கள்.

 

நீங்களே, அந்த மரண வீட்டில், அல்லது ' ஆஸ்பத்திரி வாட்டில்' நிற்பது போல உணர்வீர்கள். :D

அருமை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதை இறுக்கிய கதை.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அவர்களின் கதைசொல்லும் வார்த்தைகளை நான் வாசித்துச் செல்லவில்லை. என்னைத் தன்னூடாகக் கதை கொன்டுசென்று முடிவில் நிறுத்தியது. செல்லும்போது அது என் அண்ணனின் ஞாபகத்தை எனக்கு ஊட்டியபடியே கொண்டுசென்றது. அண்ணனின் சாவும் அவலச்சாவு ஆனால் உடல்அழுகவில்லை. அச்சம்பவம் அம்மாவை ஐந்து வருடங்களாக தொடர்ந்து இரவில் விளக்குவைக்கும்போது அழவைத்தது. அந்தத் துயர நினைவு  இன்றும் என்னை வருத்துகிறது.     

  • தொடங்கியவர்

பின்னூட்டங்கள் இட்ட சாந்தி, மெசோ அக்கா, புங்கை, இன்னுமொருவன்,கு.சா அண்ணா, பாஞ்ச் மற்றும் விருப்புகளை தந்த அனைவருக்கும் என் நன்றி.

 

முந்த நாள் சாமம் கனவில் ஒரு பெரிய புழு தெரிய திடுக்கிட்டு முழித்து விட்டேன். இந்தப் புழுவை எங்கேயோ கண்டு இருக்கின்றேன் என்று யோசிக்கும் போதுதான் 19 வருடங்களுக்கு முன் பார்த்த புழு என்று நினைவு வர மனசுக்குள் அழுத்திக் கொண்டிருந்த நினைவுகள் விரிய தொடங்கின.

 

இக் கதையில் கதை சொல்லியுடன் சிகரெட் குடித்துக் கொண்டு இருக்கும் நண்பன் நான் தான்.

 

இக் கதையினை எழுதிய பின் நேற்று முழுதும் ஏதோ ஒரு பெரிய மனச்சோர்வுக்கு ஆட்பட்டு இருந்தேன்.

 

 

-----

 

பி.கு:

நேற்று எழுதிய இக் கதையில் ஒவ்வாமல் இருக்கும் ஒரு சிறு வரியை நீக்கிவிடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கதைபகிர்வுக்கு நன்றி ..இந்த சோகம் என்னால்  தாங்க முடியாதது.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்கள் கதை ஒரு இனம்புரியாத இடத்துக்கு இழுத்து செல்கிறது.

 

இவ்வளவு நாளும் கதை எழுதாமல் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்.

 

உண்மையை சொன்னால், அந்த கதையில் புழு இறங்கி சென்றுவிட்டது. ஆனால் அந்த கதை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் புழுவாக நெளிந்து கொண்டிருக்கிறது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனது மிக நெருங்கிய உறவுக்காக யாழ் வைத்தியசாலைப் பிணவறையில் ஒருநாள் முழுதும் காத்திருந்து போஸ்ட்மார்டத்தையும் பார்த்த அனுபவம் எனக்குண்டு  உங்களின் கதையின் வீச்சு கன காலத்தின் பின் கண்ணீரை வரவழைத்து விட்டது. நான் இங்கு வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்.

இணைப்புக்கு நன்றி நிழலி...!

பெற்றோரின் பிழையான செய்கைகள் தான் பிள்ளைகளை பெரிதளவு பாதிக்கின்றது .கதையை நகர்த்திய விதமும்  பாவித்த பல சொற்களும் தான் எம்மையும் அங்கு இழுத்து சென்றது .

யாழில் ரமணி சந்திரன் தொடங்கி புதுமை பித்தன் வரை இருக்கின்றார்கள் .அதுவே யாழின் சிறப்பு .

 

(இப்ப தண்ணியடிக்க மகனுக்குதான் அதிகம் பயப்படவேண்டியுள்ளது )

  • கருத்துக்கள உறவுகள்

சிறுகதையின் வெற்றி வாசிப்பவரை வசியபடுத்துவது காலையில் வாசித்தது வேலையை செய்யவிடாமல் நிழலியின் கதை புழு மூளையின் ஓரத்தில் நெழிந்து கொண்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

பிணவறைக்குள் புழு வருமா சின்ன டவுட்டு

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

பிணங்களுடன் வரும். நாள்பட்ட மையம் (பிணம்) என்றால் 10 மீற்ரருக்குள் நிக்கவே முடியாது.

 

அனில் , முயல் போன்றவைகளை அடித்தால் அரை மணிக்குள் சட்டிக்குள் போட்டுட வேண்டும். தவறினால் புழுக்கள் தாவிக் கொண்டு நிக்கும்.

சில மீன்களிளும்  தலைக்குள் இருக்கும்...! :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிணங்களுடன் வரும். நாள்பட்ட மையம் (பிணம்) என்றால் 10 மீற்ரருக்குள் நிக்கவே முடியாது.

அனில் , முயல் போன்றவைகளை அடித்தால் அரை மணிக்குள் சட்டிக்குள் போட்டுட வேண்டும். தவறினால் புழுக்கள் தாவிக் கொண்டு நிக்கும்.

சில மீன்களிளும் தலைக்குள் இருக்கும்...! :)

ஆடு தும்மும்போது மூக்கில் இருந்து புழு வந்ததை பாத்திருக்கிறேன்
  • தொடங்கியவர்

மேலும் பின்னூட்டங்கள் இட்ட நிலாமதி அக்கா, முதல்வன், சுவி, அர்ஜுன், நந்தன் ஆகியோருக்கும் என் நன்றி.

 

நந்தன், ஒரு சிறு கதையில் எல்லாவற்றினையும் எழுத முடியாது; எழுதினால் அது கட்டுரையாகிப் போய்விடும்.

இலங்கையில் உள்ள பெரியாஸ்பத்திரிகளில்  'இனம் தெரியாத' உடல்களை போட்டு வைத்திருக்கும் அறைகளுக்குள் ஒரு முறை போய் வந்தால் புரியும் அதன் அவல நிலை. இங்கு  கதையில் இருக்கும் அண்ணாவின் உடல் 12 உடல்களின் கீழாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த 12 இல அநேகமானவை போரில் கொல்லப்பட்டு சிதைந்து போயிருந்த இராணுவத்தினரின் உடல்கள்.

ஒழுங்கான பராமரிப்போ அதற்கான தேவையோ உணரப்படாத நிர்வாக சீரழிவு நிறைந்து இருக்கும் ஒரு நாட்டில் சுத்தத்தினை எதிர்பார்க்க முடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியண்ணா நிறைய எழுத முடிந்தும் எப்பவாவது இருந்துட்டு எழுதுவதை தவிர்த்து அடிக்கடி எழுதனும்.

  • கருத்துக்கள உறவுகள்

இச் சிறுகதையை, சீன மற்றும் கொரிய மொழியில் எழுதியிருந்தால்! நிழலி ஐயாவுக்குச் 'சிறுகதை மன்னன்' பட்டம் அளிக்கப்பட்டுப் பொற்கிளியும் வழங்கப்பட்டிருக்கும்!!. 

  • தொடங்கியவர்

இச் சிறுகதையை, சீன மற்றும் கொரிய மொழியில் எழுதியிருந்தால்! நிழலி ஐயாவுக்குச் 'சிறுகதை மன்னன்' பட்டம் அளிக்கப்பட்டுப் பொற்கிளியும் வழங்கப்பட்டிருக்கும்!!. 

 

விளங்குது விளங்குது.. .அடுத்த முறை கரப்பாத்தானை பற்றித் தான் எழுதப் போறன்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிழலி

இன்று தான் வாசித்தேன்

 

என்ன  சொல்வது என்று தெரியவில்லை

எம்மீது உள்ள  பலவற்றை  கழுவிச்சென்றது போலிருக்கு...

ஒரே மூச்சில் வாசிக்கத்தூண்டியது உங்கள் திறமையைக்காட்டுகிறது

இது மீனுக்கு நீந்தத்தெரியும் என்று நான்(மனிதன்) சொல்வதாக எடுத்துக்கொள்ளவேண்டாம் :D

 

தொடர்ந்து படையுங்கள்

(நல்ல சாப்பாடு)சாப்பிட  நாங்கள் தயார்

  • கருத்துக்கள உறவுகள்

முழுக்கதையின் சம்பவத்தையும்... வெவ்வேறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும்... என்று ஆவலுடன் வாசிக்கத் தூண்டிய கதை. ஆக்கத்திற்கு.. நன்றி நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

படைப்புக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

மேலும் பின்னூட்டங்களை தந்து உற்சாகப்படுத்திய யாயினி, தமிழ் சிறி, விசுகு மற்றும் புத்தன் ஆகியோருக்கு என் நன்றி. அதே போன்று விருப்புகளைத் தெரிவித்து ஊக்கப்படுத்திய நெஞ்சங்களுக்கும் என் நன்றி.

கதைக்கு வாழ்த்துக்கள் நிழல் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.