Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல் அப்பா சொல்: நிழலி

Featured Replies

சொல் அப்பா சொல்:

வெள்ளை பனி உருகி

வீட்டின் முன் வழிகின்றது

வளைந்து செல்லும் வீதியெங்கும்

பனியின் சிதறல்கள்

காற்றின் திசையெங்கும்

குளிரின் வாசம்

பனி பார்க்க விரும்பும்

மகனை கூட்டிச்

சென்று காட்டுகிறேன்

குவியலாக இருக்கும்

பனிக்குள் குளித்தெழும்புகிறான்

சறுக்கி வீழ்ந்து சிரித்து

எழும்புகிறான்

வெண் நுரை அள்ளி

வீசி விளையாடுகிறான்

இப்படித் தானே அப்பா நீயும்

ஊர் முழுதும் மழை

நிரம்புகையில்

சைக்கிளில் என்னை வைத்து

வெள்ளம் காட்டுவதும்

மழையில் நனைவதின் சுகமும்

வெள்ளத்தை கூறு கிழித்து

சைக்கிள் ஓட்டுவதன்

பரவசமும் அப்பா

நீ காட்டியது தானே

எனக்கும்

பின்பு

பனை வெளிகளினூடு போகையிலும்

மலைக் குன்றுகளினூடு நடக்கையிலும்

நீர் வெளிகள் தோறும் கூட்டிச் செல்கையிலும்

உன் விரல்களுடன் என்

விரல்களை இறுக

பிணைந்து கொள்வாய்

யமனால் கூட

பிரிக்க முடியாது நம்

விரல்களை

ஆயினும் அப்பா

என்று உன் விரல்களை

நான் பிரித்தெடுத்தேன்?

என்னையும் உன்னைபோல் ஆணாக

புரியும் போதா

உன் விரல்களை

நான் பிரித்தேன்?

அல்லது

அப்பாக்களுக்கும்

மகன்களுக்குமான

பெரும் இடை வெளியிலா

உன்னை தொலைத்தேன்

உன்னில் இருந்து என்னை

பிரிக்கையில்

உன் விரல்களின் நோவை

நான் அறியவில்லை

உன் மனதின் ஓரத்தில்

இருந்த கண்ணீரின் துளிகளை தானும்

நான் காணவில்லை

நீ கவலைப்படுவாயா

என்பதில் கூட எனக்கு

அக்கறை இருக்கவில்லை

ஒவ்வொரு முறையும்

நான் வீழ்கையில்

தூக்கிவிட்ட உன்

தோள்களை கூட நான்

மறந்து இருந்தேன்

என் காதல் தோற்று

நான் உடைந்திருக்கையில்

மெளனமாக என்னை

அடை காத்ததை கூட

விரும்பாது இருந்தேன்

இன்று

என் மகனை கொஞ்சுகையிலும்

அவனின் மொழியை காண்கையிலும்

உன் ஞாபகம் ஏன் வருகின்றது..

அவனது சின்ன

தவறுகளை திருத்துகையில்

எப்படி உன் மொழி

என் நாவில் ஒட்டியது

சில வேளைகளில்

என் குரலில் கூட

உன் சொற்களின்

வாசம் எப்படி

வருகின்றது

உன்னை கொடும் நோயில்

பார்த்த நிமிடங்களில்

வராத அழுகையும்

உனக்கு சிதை மூட்டுகையில்

எழாத பெரும் துயரமும்

எப்படி

இப்போது மட்டும் எனக்கு

வருகின்றது

சொல் அப்பா சொல்

யுகம் யுகமாய் தொடரும்

அப்பன் மகன் உறவின்

எல்லாக் கண்ணிகளும்

இப்படித் தானா இருக்கும்

நீ கூட இப்படியா

உன் அப்பாவையும்

எல்லாம் முடிந்த பின்

உணர்ந்து கொண்டாய்

என்று சொல்

எனது மகனாவது

இதன் நுட்பத்தை புரிந்து

கொள்ளட்டும்

எனது இன்றைய

தவிப்பு அவனுக்கும்

வராது போகட்டும்

சொல் அப்பா சொல்

-நிழலி--

December 31, 2008

இந்த கவிதை என்னை போல் வாழும் போது அப்பாவை புரிய விரும்பாது, அவரை சாவுக்கு கொடுத்த பின் புலம்பும் என்னை போன்ற எல்லா மகன்களுக்கும் சமர்ப்பணம்

  • கருத்துக்கள உறவுகள்

வலி உணர்ந்து வரைந்த கவி வரிகள் அழகோ அழகு

. "அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பை தான்

அடியேனும் அந்நாளில் செயதேனப்பா "

அது என்ன தப்பு ? .........(.நினைவிருக்கா ) :rolleyes:

Edited by nillamathy

அடடா.. நான் நினைத்துப் பார்ப்பதைப்போலவே உள்ளது தங்கள் கவிதை.. இப்படித்தான் ஒவ்வொருவருள்ளும் உணர்வுகள் இருக்கும் என நினைக்கிறேன். யதார்த்தத்தை சொல்லும் வரிகளுக்குப் பாராட்டுக்கள்! :rolleyes:

ஒவ்வொரு மகன்மாரும் மனதுக்குள் புழுங்கும் வலிகளை

யதார்த்தமாக அழகாக கவியில் படைத்துள்ளீர்கள்

பராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் ஏதோ வைகையில் சுயநலவாதிகள் தான் என யாரோ சொன்ன ஞாபகம். எப்போது அனுபவங்கள் பிந்தியே தகவலை தருகிறது. சொந்த அனுபவங்களை யதார்த்த பூர்வமாக பகிர்ந்த

நிழலிக்கு நன்றி. அத்தோடு எழுத வேண்டும் என்ற உங்களின் முடிவுக்கு ஒரு பலே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதோர் உணர்ந்து எழுதப்பட்ட கவிதை பழைய நினைவுகளை ஈட்டிப்பார்க்க வைக்கிறது பாராட்டுக்கள் உங்களின் வேதனை புரிகிறது

"[ என்னையும் உன்னைபோல் ஆணாக

புரியும் போதா

உன் விரல்களை

நான் பிரித்தேன்?

அல்லது

அப்பாக்களுக்கும்

மகன்களுக்குமான

பெரும் இடை வெளியிலா

உன்னை தொலைத்தேன்

உன்னில் இருந்து என்னை

பிரிக்கையில்

உன் விரல்களின் நோவை

நான் அறியவில்லை

உன் மனதின் ஓரத்தில்

இருந்த கண்ணீரின் துளிகளை தானும்

நான் காணவில்லை

நீ கவலைப்படுவாயா

என்பதில் கூட எனக்கு

அக்கறை இருக்கவில்லை"

இதில் உங்களின் தவறு மட்டுமல்ல...மகன் உறவுக்கப்பால் தோழமையுடன் தன்னை வெளிப்படுத்தத் தெரியாத அப்பாக்கள் எங்கோ ஒரு பொழுதில் தன் மகனைத் தொலைத்து விடுவது என்பது தவிர்க்க முடியாதது தான்... இப்போது அப்பாவாக இருப்பவர்கள் இதனைப் புரிந்து கொண்டால் இந்தத் தவிப்பு உங்களுக்கோ உங்கள் மகனுக்கோ நாளை வராது....என் அப்பா பற்றி நான் இன்னும் கவலைப் படுவது ...ஒன்றும் செய்யவில்லை என்றல்ல ...இன்னும் செய்ய அவர் உயிருடன் இருக்கவில்லையே என்று...அத்தனை தூரம் நல்ல நண்பனாய் ..நல்லாசிரியனாய்...எனக்கு உலகம் சொல்லித்தந்து இன்று நான் நானாக இருக்க்ச் செய்தவர்....

இன்று என் மகனை நண்பனாய்..பார்ப்பதற்கும் தான்....

அது சரி நிலாமதி அக்காவிற்கு எப்போதும் தப்புத் தான் கண்ணுக்குப்படுகின்றதே..... அது என்ன மாயம்.... :rolleyes:<_<

. "அப்பாக்கள் சில பேரு செய்கின்ற தப்பை தான்

அடியேனும் அந்நாளில் செயதேனப்பா "

அது என்ன தப்பு ? .........(.நினைவிருக்கா ) :unsure:

Edited by எல்லாளன்

  • கருத்துக்கள உறவுகள்

பாசமென்றும் நேசமென்றும்

வீடுஎன்றும் மனைவிஎன்றும்

நூறு சொந்தம் வந்தபின்பும்

தேடும் அந்த உறவு இருக்கிறதே...

"நீ கூட இப்படியா உன் அப்பாவையும்

எல்லாம் முடிந்தபின் உணர்ந்து கொண்டாய்"

என்ற வரிகளில் ஒவ்வொரு மகன்களினதும்உள்ளத்தின் தவிப்பை உணர்கிறோம்

நன்றி நிழலி பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவம் நிசமாய் வந்த கவிதை அழகு.

தந்த ஒவ்வொரு வரியும் அற்புதம்.

இன்று

என் மகனை கொஞ்சுகையிலும்

அவனின் மொழியை காண்கையிலும்

உன் ஞாபகம் ஏன் வருகின்றது..

அவனது சின்ன

தவறுகளை திருத்துகையில்

எப்படி உன் மொழி

என் நாவில் ஒட்டியது

சில வேளைகளில்

என் குரலில் கூட

உன் சொற்களின்

வாசம் எப்படி

வருகின்றது

இந்த கவிதை என்னை போல் வாழும் போது அப்பாவை புரிய விரும்பாது, அவரை சாவுக்கு கொடுத்த பின் புலம்பும் என்னை போன்ற எல்லா மகன்களுக்கும் சமர்ப்பணம்

என்னைப்போன்ற மகன்களுக்கு கிடைத்த சாட்டையடி தான் உங்கள் கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது.. அப்பா அப்பாவாகவும், ஆசானாகவும், தோழனாகவும், பின்னர் குழந்தையாகவும் மாற்றம் பெறலாம்.

என்னைப்போன்ற மகன்களுக்கு கிடைத்த சாட்டையடி தான் உங்கள் கவிதை.

ம்.ம்.ம்.ம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்போன்ற மகன்களுக்கு கிடைத்த சாட்டையடி தான் உங்கள் கவிதை.

நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கை என்பதே இப்படித்தான் போலும் தப்பின் தவறை உணர்ந்து திருந்தும்போதுதான் அதிகம் வலிக்கும் அதுவும் அந்த உறவுகள் நமக்கருகில் இல்லா நிலமையில் மனம் இன்னும் கனக்கும்.

தாய் மகள் உறவுபோல் தந்தை மகன் உறவு அமைவதில்லை ஏனோ தெரியவில்லை.

உங்கள் ஒவ்வொரு வரிகளிலும் உங்கள் வலியின் உணர்வை வேதனைக் கனத்தை அறிய முடிகின்றது அண்ணா.

'காலம் தான் கற்பிக்கின்றது வாழ்க்கைப்பாடத்தை'...

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உணர்வு பூர்வமாக எழுதிய உங்கள் கவிதையை இரசித்தேன். பொதுவாக கவிதை பக்கம் வாறது குறைவு. உங்களின் பெயரை பார்த்ததும் அப்படி என்னதான் எழுதியிருக்கிறீர்கள் என பார்க்க வந்தேன். வாழ்த்துகள். தொடர்ந்தும் இப்பிடியான (எனக்கும் விளங்கிற மாதிரியான) கவிதைகளை தாருங்கள்.

எனது அப்பாவும் எங்களின் இம்சை தாங்கேலாத நேரங்களில் "உப்பில்லா விட்டால் தெரியும் உப்பின் அருமை, அப்பன் இல்லா விட்டால் தெரியும் அப்பன் அருமை" என கூறுவார். எனக்கு அப்போது பெரிதாக விளங்கவில்லை. சில காலங்களுக்கு முன்னர் வரை இதைபற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. ரொறன்ரோ வரும் போதும் ஏதாவது கிண்டுப்பட்டு மனம் நோகிற மாதி ரி கதைத்து விட்டு வருவதுண்டு. ஆனால் இப்ப அப்படி முடிவதில்லை. அப்படி ஏதாவது கதைத்தாலும் இங்கு வந்தவுடன் 2-3 தடவை தொலைபேசி எடுத்து சமாதான படுத்துவேன். உங்களுக்கு தற்போது அப்படி செய்ய முடியாது என்பது மிகவும் கடினமான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை கொடும் நோயில்

பார்த்த நிமிடங்களில்

வராத அழுகையும்

உனக்கு சிதை மூட்டுகையில்

எழாத பெரும் துயரமும்

எப்படி

இப்போது மட்டும் எனக்கு

வருகின்றது

நிழலி, அனுபவித்து எழுதியிருக்கீற்கள்.அதிலும் மேலுள்ள வரிகள் ரொம்ப கனமானது.எனது அசட்டுத்தனமான கேழ்விகளுக்கு கூட பொறுமையுடன் பதில் சொன்ன அருமைநன்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, நிறையவே உணர்ந்து, அமிழ்ந்து வரிகளுக்குள் வார்த்தெடுத்திருக்கிறீர்கள

  • கருத்துக்கள உறவுகள்

வலியின் வரிகள் அழகு நிழலி வாழ்த்துக்கள் <_<

வணக்கம் நிழலி,

அழகான கவிதை.

அம்மா புகழ் பாடும் ஆக்கங்களுடன் ஒப்பிடும் போது அப்பா குறித்தான படைப்புகள் மிகவும் அரிதாகவே வெளிவருகின்றன.

சில பல காரணங்களால் ஆண்பிள்ளைகள் தாயிடம் காட்டும் அன்னியொன்யத்தை தந்தையிடம் காட்டுவதில்லை. கருத்து முரண்பாடுகள் அதிகம் ஏற்படுவதும் தந்தையுடன் தான்.

இருந்தாலும் உப்பில்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை என்பது போல பின்னர் அந்த இழப்iபை உணர்வதுண்டு.

நல்ல கற்பனை என்பதற்குமப்பால் உள்ளத்து உணர்வை படைப்பாக்கியிருக்கிறீர்கள்.

மிகவும் அருமையான கவிதை நிழலி. நானும் கவிதைப் பக்கம் வருவது குறைவு. இன்றுதான் உள்நுழைந்தேன். நாம் நேசிப்பவர்கள், உயிருடன் இருக்கும்போது உணர்ந்தால், நாம் ஏதாவது செய்யலாம். ஆனால், அவர்கள் இல்லாதபோது உணர்வது மரணத்திலும் பார்க்கக் கொடியது. இழப்பின் வேதனைகளை எதனாலும் நிவர்த்தி செய்துவிட முடியாது. கவிதை வரிகளின் ஆழம் அற்புதம்.

அழகிய கவிதை நிழலி. எனக்கு அப்பா இருக்கிறார். நானும் இதேபிழையை செய்யாமல்.. எனது அப்பாவுடன் தினமும் அன்பு செலுத்தி, மரியாதை செலுத்தி வருகிறன். ஒருநாளைக்கு அம்மா, அப்பா இல்லாதநேரத்தில கவலைப்படாமல் இப்பவே அவர்களோட அன்புடன் இருந்தால் எதிர்காலத்தில வேதனை கொஞ்சம் குறைவாக இருக்கும் எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணர்வுகள், தவறுகள், அதனால் கற்ற பாடங்களுடன் இன்று நீங்கள் விடும் கண்ணீர் அனைத்துமே அப்பன் மகன் பிள்ளை என்று தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து செல்வதுதான் நியதி. அது ஒரு இன்பமான துன்ப அனுபவம், அனைவருமே வாழ்வில் அனுபவிக்கவேண்டிய ஒன்று. தயவு செய்து அதற்கு தடைபோட வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளை மேல் உள்ள பாசத்தால் இந்த நிலை உங்களுடன் முடிவடையவேண்டும் என்று எண்ணுவது எனக்குப் புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உன்னில் இருந்து என்னை

பிரிக்கையில்

உன் விரல்களின் நோவை

நான் அறியவில்லை

உன் மனதின் ஓரத்தில்

இருந்த கண்ணீரின் துளிகளை தானும்

நான் காணவில்லை

நீ கவலைப்படுவாயா

என்பதில் கூட எனக்கு

அக்கறை இருக்கவில்லை

ஒவ்வொரு முறையும்

நான் வீழ்கையில்

தூக்கிவிட்ட உன்

தோள்களை கூட நான்

மறந்து இருந்தேன்...

காலம் கடந்தே ஞானம் பிறக்கிறது. எம்மையெல்லாம் தோழில் நெஞ்சிலும் சுமந்த தந்தையை, இறுதியாகக் கூடச் சுமக்க முடியாதவாறு அன்னிய நாட்டு வாழ்க்கை. அர்த்தமற்ற இருண்ட......... மனங்கள் கணத்து கண்களோ நீர்திவலைகளால்...

  • 2 years later...
  • தொடங்கியவர்

இன்றுடன் அப்பா இறந்து ஆறு வருடங்கள் ஆகுகின்றன

ஆற்றமுடியா துயரம் எனக்கு வந்த போதும் தோள் கொடுத்த தோழனாய் வழி நெடுக நடந்தவரின் அருகாமை இன்றி தவிக்கின்றது மனம். ஒவ்வொரு வருடமும் கழிய கழிய அவர் நினைவு மட்டும் பெருகி வழிகின்றது.

மகன் என்பது அப்பனின் இன்னொரு வடிவம். அம்மா மாதிரி உடலால் உயிர் தொடாமல் உணர்வுகளால் உறவு வளர்க்கும் ஒரு சீவன். வளரும் பருவத்தில் அப்பன் தான் எம் முன்னோடி. ஒரு அடி அவரை விட எடுத்து வைக்கும் போது அவரையே மிஞ்சி விட்டோம் என வரும் உணர்வு ஆணின்; மகனின் ஆதிக்க புத்தி...ஆனால் அதுவே அப்பனின் வெற்றி.

இரவில் தனிய இருக்கும் போது, இடை தெரியும் நிழலில் அப்பா ஒளிந்து இருப்பது போலவும், எனக்குள் நானே கதைக்கும் போதும் கேள்விகளை எழுப்பும் போதும் அவர் அருகில் இருந்து கேட்டுக் கொண்டு இருப்பது போலவும் உணர்கின்றேன்

நான் நீண்ட வீதி ஒன்றில் தட்டத் தனிய நடந்து போகும் போது ஒரு கவசம் போல் தொடரும் முகில் என் அப்பாவாக இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் என் அப்பா இறந்து சரியாக 11 வருடங்கள்...அப்பா இறந்த துயர் எனக்கு பெரிதாக தெரியவில்லை அம்மா இருக்கிறார் என்பதாலோ தெரியவில்லை ஆனால் அண்மையில் நடந்த அம்மாவின் மரணம் என்னைப் ஆயுள் பூரா பாதித்துக் கொண்டே இருக்கும்...கவிதை தந்த நிழலிக்கு எனது பாராட்டுகளும்,ஒரு பச்சையும்.

இன்று தான் பார்த்தேன், நல்லதொரு பதிவு நிழலி!

அம்மாவில் பாசம் இருந்தாலும் அப்பாவில் உயிரையே வைத்திருந்தேன். அவர் போகும் போது பாதி உயிரை எடுத்து சென்றது போல் என்னுள் ஓர் உணர்வு... :( அப்பாவின் பிரிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக என்னை நானே தேற்றி வருகிறேன்... ஆரம்பப் பிரிவில் என்னோடு ஒருவர் கூட வருவது மாதிரியே உணர்ந்து கொள்ளுவேன்... எனது தந்தையின் வயது ஒத்த அவரது நண்பர்களோ அல்லது யாரேனும் பார்த்தால் என்னை அறியாமலே கண்ணகள் நிரம்பி விடும்...

பிள்ளைகளைக் கண் கலங்க வைத்து பார்ப்பது எந்த தகப்பனுக்கும் பிடிக்கததொன்று தெரியும், அதனால் முடிந்தளவு அவர் சந்தோசமாக இருந்த நினைவுகளையே நினைத்துப் பார்ப்பது வழக்கம்.

பாசமான உறவுகளைப் பிரிந்து வாழும் உங்களுக்கும் உங்கள் உறவுகள் உங்களுள் இருந்து வழிநடத்துவார்கள்!!

இந்தக் கவிதையை முன்பு நான் காணவில்லை.

கண்ணீர் துளிகள் என்னில்.

நான் அம்மாவின் செல்லப்பிள்ளை

தடம் மாறிப் போகையில் என்னை தட்டிதிருத்திய வழிகாட்டி அப்பா.

வாழ்க்கைக்கான பாதையை வகுத்துத் தந்தவர்.

இன்றும் கூட காலை எழுந்தவுடன் அப்பாவின் படத்தை பார்த்தது விட்டுத்தான் வெளியே செல்வேன்.

நன்றி அப்பா

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.