Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரிற்கு போய் வந்து ஒரு பதிவு

Featured Replies

இருபது நாட்கள் இலங்கையில் களித்து கனடா மீண்டதும் இந்தப் பதிவு.
 
முதலில் ஒரு Flashback -- சில வருடங்களிற்கு முன்னர்...
 
ஈழத்தை விட்டு விலகி 23 வருடங்கள் நகர்ந்து விட்டன. இந்தப் பயணத்திற்கு முன்னர் சமாதான காலத்தில் இருவாரம் ஊரிற்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் இருந்து வெளிவந்து அவர்கள் அனுப்பிய வாகனத்தில் ஏறியது முதல் மீண்டும் விமான நிலையத்திற்கு அவர்கள் அனுப்பிவைத்த வாகனத்தில் வந்திறங்கும் வரை, அவர்களுடன் மட்டுமே அப்பயணத்தில் நின்றிருந்தேன். எனது சொந்த ஊரிற்குக் கூடச் செல்லவில்லை, முழவதும் அவர்களுடனேயே களிந்தது. புளியந்தோப்பை அடுத்த 'தமிமீழம் வரவேற்கிறது' தொடங்கி முகமாலை முன்னரண் வரையான பிரதேசத்திற்குள் எங்கெல்லாமோ அவர்களுடன் திரிந்தேன். அவர்களின் ஏகப்பட்ட பாத்திரங்களில் அவர்களைப் பார்த்தேன். நெஞ்சு நிமிர்த்திக் கால் மிதந்து திரிந்தது. ஒவ்வொரு மண் துகளும் உயிர்கொண்டிருந்தது. இரணைமடு தென்னிந்திய இலக்கியம் சித்தரித்த காவிரியை விஞ்சி நின்றது. எமது மக்கள் நான் வெளியேறிய போது இருந்ததிலும் பாhக்க அதிகம் அன்போடும் மெருகோடும் இருந்தார்கள். துயிலும் இல்லங்களில் அறியாதவர்களைக் காணவும் உணரவும் முடிந்தது. பண்டிதரும் வாகீசனும் மட்டுமல்ல, ஒவ்வொரு குறியீடுகள் கொண்டிருந்த ஒவ்வொரு பாசறைகள். எத்தனை முகங்கள்...
 
குறிப்பாக ஒரு முகம். ஆட்டி பிரிவின் மிகப்பெரும் பொறுப்பாளர். ஆட்டியினை மட்டும் அன்றி அந்தப் படையணிகளையே வேப்பங்குச்சியினால் பல்லுக்குத்துவது போல் மிகச் சாதாரணமாகக் கையாளக்கூடிய அந்த மாபெரும் ஆழுமை. விடுப்புப் பாக்கப்போன என்னைப் போன்ற கொஞ்ச வெறும் பயல்களிற்கு, ஒரு மாலைப் பொழுதில், அந்த உபகரணத்தையும் அது சண்டைகளில் எவ்வாறு நகர்த்தப்படும் என்றும் விளக்கிக் காட்டும் படி அந்த மனிதரிடம் கூறப்பட்ட போது, இயல்பில் வெக்கறையான அவரின் குழந்தைத் தனம் மனதில் பதிந்தது. புதிய மனிதர்கள் முன் கதைக்க முடியாது அவரிற்கு நாக்கு ஒட்டி வியர்த்து. அம்மாவின் பின்னால் ஒளியும் ஒரு குழந்தை போல் ஆகிப்போனார். உயரம் குறைவான அவர், பேசமுடியாத பதற்றத்தில் எங்களின் மூக்குவரை அண்மித்து வந்து பேசமுடியாது அண்ணாந்து நின்ற படி, ஆட்டியினை 'இவர்' என்று மட்டும் திருப்பத்திருப்பக் குறிப்பிட்டமை நெகிழச்செய்தது. அந்த மாபெரும் வீரன் என்றைக்கும் மனதில் மறையாதபடி பதிந்தது போல் ஏராளம் பதிவுகள் உள்ளேறிய பயணம் அது. பாண்டியனும் சேரனும் உண்பதெல்லாம் அமுதம் என்றுணர்த்திய படி துரை அண்ணையின் சமையலோடு போட்டிபோட்ட பயணம் அது. அந்தப் பயணத்தில், ஊரில் நடந்தேன் என்பதைக் காட்டிலும் மிதந்தேன் என்று தான் சொல்லவேண்டிய வகையில் கட்டுப்படுத்தமுடியாத ஒரு பெருமை உள்ளுரப் பிரவாகித்துக்கொண்டிருந்தது.
 
அந்தப் பயணம் முடிகையில், கனடா சென்று துரிதமாய் சில விடயங்களை முடித்துக் கொண்டு ஊரிற்கு நிரந்தரமாய் மீளவேண்டும் என்று முடிவெடுத்து விமானம் ஏறினேன். இங்கு வந்த பின்னரும் தேனிசைச் செல்லப்பா தமிழீழம் கிடைத்த நாளைப் விபரித்துப் பாடிய பாடல் தேயும்வரை திருப்பத்திருப்ப வாகனத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.
 
இந்தப் பயணம்.
 
சாரதி
 
எத்தனையோ தடவை பகுத்தறிவிற்குக் கட்டுப்பட்டு நிற்பாட்டிய பிரயாணம். இறுதியில், இம்முறை போவதென்று முடிவெடுத்த பின்னர், குறைந்தபட்சம் சில விசாரணைக் கேள்விகளைத் தன்னும் கட்டுநாயக்கா குடிவரவுப் பகுதியில் எதிர்கொள்ள நேரிடும் என்று பதற்றத்துடன் இருந்தேன். விமானத்தில் இருந்து இறங்கியபோது, இற்றைக்கு 23 ஆண்டுகளின் முன்னர் கனடாவில் அகதியாக இறங்கிய போதிருந்த மனநிலையில், முளங்கால்கள் பக்கிள் அடிக்க, கண்களை நேராக மட்டும் பார்த்தபடி நடந்து போனேன். ஆனால் குடிவரவு மேசையில் எனது முறை வந்தபோது, ஏன் வருகிறாய் என்ற கேள்வி கூட அங்கிருக்கவில்லை. விமானத்தில் இருந்து இறங்கிய இருபது நிமிடத்திற்குள் பொதிகளையும் சேகரித்து வெளிவந்துவிட முடிந்தது. 
 
கொழும்பில் ஒரு நாள் நின்று விட்டு யாழ் செல்ல வாடகைக்கு அமர்த்திய வாகனச்சாரதி 'கிளிநொச்சி சிங்கப்பூர் மாதிரி இருக்கும் பாருங்கோ' என்று ஏகப்பட்ட பில்டப் தந்தார். கிளிநொச்சி நிச்சயம் எனக்குச் சிங்கப்பூராகத் தெரியப்போவதில்லை என்பதை அவரிற்குச் சொல்லத் தோன்றவில்லை. மிகவும் வயது குறைந்த அந்தச் சாரதியிடம் எங்கள் இனத்தவன் அவன் என்ற பரிவு எழுந்தது. தம்பி ோன்று ஒரு உணர்வு. மிகச் சாதாரணமாக ஏகப்பட்டதைப் பேசிக்கொண்டு போனோம். அந்த சில மணிநேர பயணத்துள் அவனிற்கு வந்த தொலைபேசி அழைப்புக்களில் எல்லாம், 'வெளிநாட்டுக் காரரை ஏற்றிக் கொண்டுபோகிறேன்' என்றே அவன் சொல்லிக் கொண்டிருந்தான். கரைந்த ஒவ்வொரு நொடிப்பொழுதும் சகஜமான உரையாடல் வழியாக அவனுடன் எனக்கு ஒரு அன்னியோனியத்தை உருவாக்கியதாக நானுணர்ந்த போதும், அவனைப் பொறுத்தவரை நான் ஒரு வெளிநாட்டுக் காரன் மட்மே. தெருவோரமாய் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வெள்ளைக் காரனிற்கும் எனக்கும் இடையே அந்தச் சாரதித் தம்பி கண்ட ஓரே வித்தியாசம் எனக்குத் தமிழ் கதைக்கத் தெரியும் என்பது மட்டுமே. அதுவும் ஈழத்தில் நான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தில் அவனும் வளர்ந்திருந்தான். ஆனால் அவனைப் பொறுத்தவரை நான் ஒரு தமிழ் தெரிந்த வெளிநாட்டுக் காரன். ஏதோ ஒரு நெருடல் உள்ளுர உணரப்பட்டது. இதைப் பற்றி பின்னரும் சில சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன்.
 
தமிழீழம் வரவேற்கிறது 
 
புளியந்தோப்பிற்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட ஏ-9 பாதையோரத்தில் எங்கெல்லாம் எம்மைப் புல்லரிக்க வைத்த விடயங்கள் முன்னர் இருந்தனவோ அங்கெல்லாம் இப்போ நாம் தோற்றுப் போனதை முகத்தில் அறைந்து சொல்லும் சித்தரிப்புக்கள் நிறைந்து கிடக்கின்றன. இறந்த சிங்கள இராணுவத்தினரின் கட்டவுட்டுக்கள் அங்கங்கே அவர்களின் இராணுவ தரத்துடன் நமிர்ந்து நிற்கின்றன. மகிந்தரை வாழ்த்தும் செந்தமிழ் கவிதைகள், ஸ்த்தூபிகள் என அங்கு நாங்கள் இருந்தோம் என்பதே தெரியாதபடி அந்தச் சித்திரத்தை அவர்கள் முற்றாக அழித்து எழுதியிருக்கிறார்கள். எங்கள் காலம் என்று ஒன்றிருந்ததற்கான ஆதாரம் எதுவும் அங்கில்லை. கண்கள் நப்பாசையில் பாண்டியனையும் சேரனையும் கட்டுமானங்களையும் வரியுடைகளையும் காவற்துறையினையும் தேடத்தான் செய்தன. பண்டிதர் ஒழுங்கையோரம் கண் போகத் தான் செய்தது.
 
புளியந்தோப்பிற்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட பயணம் எந்த உரையாடலும் இன்றி நிகழ்ந்தது. வாகனத்தின் சத்தம் பின்னணியில் இருக்க எனது மனம் ஆளவந்தான் திரைப்படத்தில் கமலகாசன் கண்ட காட்டூண்களாக் குளம்பிக் கிடந்தது. நான் அறிந்திருந்த, இப்போது இல்லாத முகங்கள் அந்தரத்தில் தொங்கிக் கதைத்துக் கொண்டிருந்தன. நான் கண்ட இப்போது இல்லாத எங்கள் படையணிகள் இலக்கின்றி வியூகத்தில் நகர்ந்த படி என்னைப் பார்த்துச் சிரித்த முகங்களாய்க் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. எனது சனங்கள் ஊர்விட்டு ஊர் பொதிகளுடன் ஏதிலிகளாக நடந்துகொண்டிருந்ததும் சிதறிக்கிடந்ததுமான காட்சிகள், ற்றான்சிசன் சீன்களாக,  எரிந்த மண்ணையும் வியூகத்தில் நகரும் படையணிகளையும் அந்தரத்தில் தொங்கும் முகங்களையும் மாற்றிமாற்றிக் காட்டுவதற்காக வந்து போய்க்கொண்டிருந்தன. 
 
அங்கங்கே எழுந்து நின்ற திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புச் சின்னங்கள் கண்ணில் பட்டபோதெல்லம் நிஜத்தில் யாரோ எனது நெஞ்சில் குத்தியதுபோல பௌதீகமாக என்னால் நோவினை உணர முடிந்தது. நத்தார் மரத்தில் பூட்டிய சோடனைகள் போல் தொங்கிக் கொண்டிருந்த முகங்கள் எமது வாகனத்தின் மீது என் மனத்திரையில் தொடர்ந்தன. வலி வலுப்பெற்றுக்கொண்டிருந்தது. 
 
சாரதிக்கு வந்த தொலைபேசியில் அவன் 'வெளிநாடடுக்காரரை ஏத்திப் போய்கொண்டிருக்கிறேன்' என்று மீண்டுமொருமுறை ஆருக்கோ சொன்னபோது சுயநினைவு மீண்டது. 
 
ஊரில் ஒருவருடன் இது பற்றிப் பேசியபோது அவர் கூறினார். முதற்தரம் அப்பிடித்தான் எனக்கும் இருந்தது. எல்லோரிற்கும இருக்கும். பிறகு பழகிரும் என்று. 
 
முறுகண்டி
 
முறுகண்டியில் வாகனம் நின்றதும் நலிந்த உடல் கொண்ட தமிழர் ஒருவர் அண்மித்தார். தான் போரில் பாதிப்புற்றதாயும் உதவுமாறும் கேட்டார். வாழ்வேமாயம் கமலகாசன் றேஞ்சிற்கு இருமிக்காட்டினார். சுhரதி கண்ணைக் காட்டி அழைத்து அவர் ஒரு வழமையான குடிகாரர், இப்போதும் பையிற்குள் சிறுபோத்தலோடு வெறியில் தான் நிற்கிறார், என்றார். அவரிற்கு வெறியோ இல்லையோ, அவர் பாதிக்கப்பட்ட மனிதர் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தெரிந்தது. ஆனால் சாரதி என்னோடு கதைப்பதைக் கண்ட அவர் தனது குட்டு வெளிப்பட்டதாய் நினைத்து நான் திரும்பும் முன்னர் அப்பால் சென்று விட்டார். அவரது உருவம் தொடர்ந்து உறுத்திக்கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை குடிக்கு அடிமைத்தனம் என்பது ஒரு நோய் தான். அந்த நோய் வருவதற்கும் நிலைப்பதற்கும் ஏகப்பட்ட பின்னணிக்க காரணிகள் உள்ளன.
 
ஊரில் நின்றுவிட்டு ஊரை விட்டு வருகையில் முறுகண்டியில் வேறு ஒருவர் வந்து மேற்படி அதே ஸ்க்கிறிப்ற்றைச் சொன்னபோது, முன்னைய உறுத்தல் நீங்க அவரிடம் கையில் இருந்த ஐந்நூறு ரூபாய்த் தாழைக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அவர் தொடர்ந்து தனது ஸ்க்றிப்ற் பிரகாரம் பேசிக்கொண்டிருந்தார்.
 
இலங்கையில் புலம்பெயர்ந்தவர்களை வெளிநாட்டுக்காரர் என இலகுவில் அடையாளப்படுத்தி விடுகிறார்கள்.
 
விருந்தோம்பல்
 
ஊரிற்குப் போன உணர்வினை ஒருவன் தந்தான். தடுப்பில் இருந்து மீண்டிருக்கும் ஒரு போராளியிடம் தான் அந்த உணர்வை முதன்முதலில் உணர முடிந்தது. அவனிற்கு ஏகப்பட்ட பணப்பிரச்சினை. நான் போனவுடன் தேத்தண்ணி போடத் தேவையான சாமான் வாங்க கடைக்கு வெளிக்கிட்டான். எவ்வளவோ தடுத்தும் கேட்காது கடைக்கு அவன் வெளிக்கிட, சரி நானும் வருகிறேன் எனக் கூடிச் சென்றேன். கடையில் நான் கடைக்காரிடம் பில்லிற்கான தொகையினைக் கொடுக்க எவ்வளவோ பிரயத்தனம் செய்தேன். அடம்பிடித்துத் தடுத்தவன் இறுதியில் வெகுண்டுபோய் சொன்னான், 'அண்ணை, என்னை நீங்கள் தேத்தண்ணி கூடத் தரமுடியாதவன் என்று பாக்கிறியள் என்ன' என்று. எனது கண்கள் சுரந்ததை என்னால் அடக்கமுடியவில்லை. 
 
வெளிநாட்டில் இருந்து போகும் எவரும் விருந்து வேண்டி அங்கு போவதில்லை.  தடுப்பில் இருந்து வந்தவன் தந்த தேத்தண்ணியினை மிஞ்சும் விருந்தினை எந்தக் கொம்பனாலும் எத்தனை லட்சம் செலவளித்தும் தர முடியாது. ஆனால் அங்கிருப்பவர்களிற்கு இப்போது புலம் பெயர்ந்தவர்கள் 'வெளிநாட்டுக் காரார்கள்'. செஞ்சிலுவைச் சங்கம் போன்று ஒரு கட்டமைப்பினர். நிவாரணம் தருபவர்கள்.  பெரும்பாலும் அவ்வளவு தான். 
 
வைத்தியர் ஒருவர்
 
பல்வேறு காரணங்களால் உளவியல் பாதிப்பிற்குள்ளாகி—பொதுமைக்காகப் பேரிழப்பைச் சம்பாதித்த அர்ப்பணிப்பு மிக்க குடும்பப் பின்னணி--அதனால் குடிக்கு அடிமைப்பட்டுப்போன ஒரு இளைஞன். அங்கு இப்போதெல்லாம் வீட்டில் இருந்தபடி தொலைபேசி அழைப்பின் மூலம் கடனிற்குச் சாராயமோ கசிப்போ பலரிற்குப் பெற முடிகிறதாம். ஆதனால் குடிக்கு அடிமையாதல் இலகுவாக இருக்கிறது. புலத்தில் எந்தப் பதார்த்தத்திற்கும் அடிமைப் படல் ஒரு நோயாகவே பார்க்கப் படுகிறது. ஆனால் ஊரில் குடிகாரனைத் திட்டும் மனநிலை மட்டும் தான் இன்னமும் இருக்கிறது. பொதுமக்கள் அவ்வாறு நடந்து கொள்வது எதிர்பார்க்கக்கூடியது, ஆனால் உளவியல் வைத்தியரே பொறுப்பற்றுப் பேசின்?
 
மேற்படி இளைஞனின் வீட்டிற்கு நான் சென்றபோது, அந்த இளைஞன் சுயநினைவின்றி இருந்தான். இந்நிலையில் அந்த இளைஞனைப் பார்த்துவிட்டு சும்மா வரமுடியவில்லை. அவன் நினைவு பெறும்வரை காத்திருந்து அவனுடன் இயன்றவரை உரையாடி வைத்தியரிடம் வருவதற்கு அவனைச் சம்மதிக்க வைத்து மறு நாள் ஒரு உளவியல் வைத்தியரிடம் அழைத்துச் சென்றேன். அந்த இளைஞன் முன்னரும் அந்த வைத்தியரிடம் சென்றிருந்தமையால் அது சாத்தியப்பட்டது. 
 
யாழ்ப்பாண ஆஸ்ப்பத்திரியில் வைத்தியர்கள் என்பவர்கள் பயப்படவேண்டியவர்களாகக் கொம்பு முளைத்தவர்களாக நடந்து கொள்கிறார்கள். தாதிகள் முதற்கொண்டு அத்தனை ஊழியர்களும் சேர் சேர் என்று வைத்தியரைப் பயந்து நடுங்கி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ வைத்தியர் முழுங்கிவிடுவார் போன்று அந்த ஊழியர்கள் நடுங்குகிறார்கள். இது ஊழியரின் நிலை என்றால் நோயாளிகள் நிலை சொல்லத் தேவையில்லை. 
 
வைத்தியரைப் பார்க்கும் முறை வந்ததும் அந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். நாங்கள் இருந்ததும் வைத்தியர் கூறிய முதல் வாசகம் 'இவைக்கு ஆட்டம்' என்பதாக இருந்தது. உளவியல் வைத்தியரின் சம்பாசனை இவ்வாறு ஆரம்பிக்கும் என்று நான் எதிர்பார்க்காததால் சற்றுச் சுதாகரித்துகொள்ள வேண்டியிருந்தது. அதன் பின்னர் இயலுமான நிதானத்தோடு விளங்கவில்லை என்றேன். வைத்தியர் சொன்னார், 'ஆட்டம் என்பது தமிழில் ஒரு சரியான vulgarறான பதம். அதைத் தான் இவர்களை நோக்கிப் பிரயோகித்தேன்' என்று. எனக்குள் கோவம் பிரவாகிக்கத் தொடங்கியது. ஆனால் இந்தக் கட்டத்தில் எனது தேவை அந்த இளைஞனிற்கான மருத்துவ சேவையினைப் பெறுவது மட்டுமே. மேலும் நான் அங்கு நிற்கும் சொற்ப நேரத்தில் வேறு வைத்தியரைக் கண்டு பிடிப்பதோ, சந்திப்பிற்கான நேரம் பெறுவதோ சாத்தியமில்லை. மேலும் மற்றைய வைத்தியர்களும் ஒருபானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இவரைப் போலவே இருப்பதற்கான சாத்தியம் அதிகம். கோபத்தைக் கட்டுப்படுத்தி சொல்லவேண்டியதைக் காத்திரமாக ஆனால் நிதானம் தப்பாது சொல்வதற்கு எனக்குத் தோன்றிய ஒரே உத்தி எங்கள் உரையாடலை ஆங்கிலத்தில் நிழத்துவது என்பதாக இருந்தது. எனவே எனது மூச்சைக் சீர்ப்படுத்திக் கொண்டு, அந்த இளைஞனோடு முன்னைய நாள் இரவில் நான் கதைத்தவற்றின் சாராம்சத்தையும் அவன் எனக்குக் கூறியவற்றையும் ஆங்கிலத்தில் வைத்தியரிடம் கூறினேன். அவனது சரித்திரம் தனக்குத் தெரியும் நான் சொல்லத் தேவையில்லை என்பது போல் வைத்தியர் ஆரம்பித்தாலும் சில நொடிகளில் அவரது நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டது. தனது கோபத்தின் காரணம் அந்த இளைஞனோ அவனது குடும்பத்தவரோ ஒழுங்காகத் தொடர்ந்து தன்னிடம் வருவதில்லை என்று வைத்தியர் சொன்னார். ஆங்கிலத்தில் உரையாடல் நகர்கையில் முன்னைய சொறித்தனம் மாறி வைத்தியரும் நாகரிகத்துடன் பேசமுனைந்தார்.  அந்த இளைஞனை வாட்டில் அனுமதித்துத் திரும்பினேன்.
 
ஊரில் வைத்தியர் மட்டுமல்ல அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலை ஊழியர்கள் வரை பணியாளர்கள் கதைக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். காட்டுமிராண்டித் தனமான கத்தல்கள் தான் அவர்களிற்குத் தெரிகிறது. இதற்கு முதற்காரணம் துறைசார் விடயங்களை தொழில் சார் நிபுணர்கள் பொதுமக்களிடம் மறைத்து வைக்கிறார்கள். தமது துறைசார் அறிவை அஸ்த்திரமாகப் பிரயோகிக்கிறார்கள். ஒரு மெக்கானிக் ஒன்றைத் திருத்தும்போது தான் திருத்திய பிழையினை விபரிக்க மறுக்கிறார் 'திருத்தியாச்சு, இனிப் பிரச்சினை தராது, தந்தால் கொண்டு வாங்கோ' என்று மட்டும் தான் கூறுகிறார். இதுபோல் தான் வைத்தியர் முதற்கொண்டு அங்கு அனைவரும் இருக்கிறார்கள். காட்டுமிராண்டிகள் தேசமாகக், கத்துவதற்கு மட்டுமே கற்று வைத்திருக்கிறார்கள். உரையாடத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். பொது மக்களும் தலையைச் சொறிந்தபடி குனிந்து நின்று சேவைபெற்றுக்கொண்டு காலத்தை ஓட்டுகிறார்கள், ஏனெனில் அவர்களிற்குத் தெரியும் ஒரு இடத்தில் தாம் கத்து வாங்கினாலும் தாமும் கத்துவதற்கான சந்தர்ப்பம் தம்மிடம் உள்ளதென்று. 
 
முதலில் மேற்படி வைத்தியரைப் படம் எடுத்து அவரது பெயருடன் இவ்விடயம் பற்றி விரிவாக நடவடிக்கை எடுக்கத் தான் நினைத்தேன். ஆனால் பின்னர் புரிந்தது அங்குள்ள பணியாளர்கள் அனைவருமே அப்படித் தான் இருக்கிறார்கள். அந்தக் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் தான் அவர்களது தொழிற்கலாச்சாரம். அந்த வைத்தியர் அந்தக் கலாச்சாரத்திற்குள் ஒருவர். அவ்வளவு தான். அந்தக் கலாச்சாரத்தில் இருந்து பல்லாயிரம் மைல் தொலைவில் கனடாவில் வாழ்வதற்காக உள்ளுர நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
 
தலைமைத்துவ வெற்றிடம்
 
அரசியலலை விட்டுவிடுவோம். சமூகத்தின் அன்றாட இயக்கம் என்பது மாலுமித் தலைவன் இல்லாத கப்பல் போல் அங்கு சென்று கொண்டிருக்கிறது. புலிகள் ஏகப்பட்ட கட்டமைப்புக்களை வைத்திருந்தார்கள். புலிகளிற்குப் பின் சமூகம் சார்ந்து கற்பனையுடனும் பெட்டிக்கு வெளியேயும் சிந்தித்துச் செயற்படும் தலைமைத்துவம் அங்கு மறைந்து போயுள்ளது. அவரவர் தத்தமது விடயங்களைப் பற்றி மட்டும் சிந்திக்கிறார்கள். ஊரிற்குள் கோயில் சார்ந்தும் இதர பொதுமைகள் சார்ந்தும் கன்னைகட்டி கட்டிப்புரண்டு சண்டை செய்கிறார்கள். அதிகாரத்தை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று தத்தமது மட்டத்தில் தமக்குத் தெரிந்த வகைகளில் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் தமக்காக மட்டும் தான் பிரயோகிக்கிறார்களே அன்றி சமூகம் என்ற சிந்தனை அங்கு அறவே இல்லை. இன்னமும் சொல்வதானால் அணைவுகள் அங்கு அஸ்த்திரங்களாக மட்டுமே பிரயோகிக்கப்படுகின்றன.
 
தமிழர் தேசியக்கூட்டமைப்பு அல்ல எந்த தற்போதைய தலைமைகளும் (அது கிராம மட்டமாகினும் மாகாண மட்டமாகினும்) கற்பனை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். சமூக இயந்திரம் ஏதோ தொழிற்படுகிறது.
 
பிரச்சினைகள்
 
யாருடன் கதைதாலும் நாளாந்த வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றி ஓயாது கதைக்கிறார்களே தவிர எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் புதிய தீர்வையும் அவர்கள் கண்டடைய முனைவதாகத் தெரியவில்லை. வயலில் அரிவி வெட்டும் இயந்திரம் முதலாக அங்கங்கங்கே தொழில் நுட்பங்கள் பாவiனியில் உள்ளபோதும் பெரும்பாலும் பழைய வழிகளிற் தான் தொழிற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஊரில் இப்போது எல்லாம் கூலிக்கு ஆட்கள் பிடிப்பது மிகக் கடினம். இதை நேரடியாக ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க முடிந்தது. ஒரு கூலியாளிற்கு நாளிற்கு 1000 ரூபாய் ஊதியமும், ஒரு நேர மீன் சாப்பாடும், மூன்று தேனீரும், மிக்ஷர் புகையிலை வெற்றிலை முதலியனவும் கொடுத்தால் தான் வருகிறார்கள். அப்போதும் ஒரு நாளினை ஓட்டுவதில் தான் குறியாக இருக்கிறார்களே அன்றி வேலையினைப் பொறுப்பெடுத்து முடிக்கும் மனநிலை வேலையாட்களிற்கு இல்லை. நேரம் என்பது அங்கு ஒரு பொருட்டே இல்லை. இது பற்றி அங்குள்ளவர்களுடன் கதைத்தபோது இது பற்றி அவர்களும் ஏகப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர், ஆனால் அனைவரும் பிரச்சினைகள் பற்றித் தான் பேசுகின்றார்கள் அன்றி எவரும் தீர்வு பற்றிச் சிந்திப்பதாய் இல்லை. 
 
கூலிக்கு வேலை செய்யும் ஒருவரிடம் ஒருநாள் சிறிது நேரம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்போது இதுபற்றிக் கதைக்கையில் நான் அறிந்து கொண்டது என்னவெனில், கூலி வேலை என்பது அப்பப்போ தான் வருகிறது. அதில் வரும் ஊதியம் சேர்த்துவைப்பதற்குப் போதுமானதாக இல்லை. இதனால் கூலி வேலை செய்யும் அனைவரும் வாழ்வினைக் கொண்டுசெல்லப் பல தொழில்கள் செய்கிறார்கள். உதாரணமாக நான் கதைத்த மனிதர் காலையில் சீவல் தொழில் முடித்துத் தான் கூலி வேலைக்கு வருவாராம். அத்தோடு மரம் வெட்டும் வேலைக்கும் போவாரம். கூலி வேலைக்கு யாரிடமேனும் வருவதாகத் தான் ஒத்துக் கொண்டாலும் திடீரென மரம் வெட்டும் வேலை வரின் தான் அங்கு சென்று விடுவாராம் ஏனெனில் அதில் வருமானம் அதிகமாம். 
 
மேற்படி விபரத்தைக் கேட்கையில் இந்தப் பிரச்சினை பின்வருமாறு தான் எனக்குப் புரிந்தது. அதாவது. கூலியாட்களிற்கு வருமான உத்தரவாதம் தான் பிரச்சினையாக இருக்கிறது. கூலிக்கு ஆட்கள் தேடுபவர்களிற்கு நிர்ணயிககப்பட்ட விலையில் குறித்த நேரத்தில் வேலை முடிப்பதற்கு ஆட்கள் தேவைப் படுகிறார்கள். ஆனால் கூலியாட்கள் எந்தவொரு நிறுவனமாகவோ கட்டமைப்பாகவோ இயங்கவில்லை. மேலும், இன்றையத் தேதிக்கு உள்ள தொழில் நுட்பங்கள் பெரிதாக அங்கு பாவனையில் இல்லை. மரத்தைக் கோடரியால் தால் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள், வேலிக்குக் கம்பிக்கட்டை கோடரியால் தான் தறித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் வேலி அடைக்கையில் அலவாங்கால் தோண்டி சிரட்டையால் தான் மண் அள்ளுகிறார்கள்.
 
பிரச்சினையினையும் தேவையினையும் பார்க்கையில் தீர்வு மிக இலகுவானதாக இருந்தது. அங்குள்ள ஒரு பெருங்காணிக்காரரிடம்--அவர் பல லட்சங்களைக் காணி வேலைகளிற்காகத் தொடர்ந்து செலவளித்துக்கொண்டிருப்பவர். அத்தோடு ஓயாது தினமும் கூலியாட்கள் பிடிப்பதில் உள்ள தலையிடி பற்றி நொந்து பேசிக்கொண்டிருப்பவர்--மேற்படி பிரச்சினையினை உடடினடியாகத் தீர்கக்கூடிய, முதல் நாளில் இருந்து பணம் ஈட்டக்கூடிய ஒரு வியாபாரத் திட்டத்தை விளக்கமாகக் கூறினேன். ஆனால் அதை அவர் நடைமுறைப்படுத்துவார் என்று தோன்றவில்லை. அனைத்துப் பிரச்சினைகளும் அவ்வாறே தொடரும் என்றே தோன்றுகிறது.
 
சிறு முதலீடுகளுடன் (15 ஆயிரம் டொலர்கள் அளவில்) மேற்படி கூலியாட்கள் பிரச்சினை தொட்டு ஏகப்பட்ட  பிரச்சினைகள் அங்கு தீர்க்கப்படக்கூடியன. அவை பிரச்சினை என்பதைக் காட்டிலும் வியாபார சந்தர்ப்பங்கள். அரசியல் முதலான பிரச்சினைகளைச் சந்திக்காது, றாடாரிற்குக் கீழாக இயங்கக்கூடிய முதலீட்டுச் சந்தர்ப்பங்கள் இவை. ஆனால் வெளிநாட்டில் இருந்தபடி அவற்றைச் செய்யமுடியாது. அங்கிருப்பவர்களிற்கோ கற்பனை போதவில்லை.
 
நான் பார்த்தவரையில் மக்களின் சிந்தனை விரியவில்லை. பல கட்டுப்பட்டித் தனங்களும் காலதிகாலமான தழைகளும் அப்படியே இருக்கின்றன. எந்தப் பிரச்சினையினையும் தீர்ப்பதற்கு வரையறுக்கப்பட்டவர்களைத் தான் பார்க்கிறார்களே அன்றித் தம்மால் பிரச்சினைகள் தீர்க்கப்படலாம் என்ற சிந்தனையினை அங்கு அறவே காணமுடியவில்லை.
 
சாதி
 
நான் நின்ற வீட்டின் குடும்பத்தாரிற்குப் பாரம்பரியமாகச் சாதி சார் தொழில்கள் புரிந்து வரும் பலரும் அவர்களது சந்ததியினரும் வெளிநாட்டுக் காரரைப் பார்க்க வந்தார்கள். 23 வருடங்களின் முன்னர் நான் பார்த்த நடைமுறைகள் சற்றும் மாறாது அப்படியே இருந்தன. ஒரு வயதான சலவைத்தொழிலாளி. அவர் வந்து வெளியில் நிலத்தில் அமர்ந்தார். அப்போது கதிரையில் அமர்ந்திருந்த ஒரு வெளிநாட்டுச் சிறுவன், எழுந்து தன் கதிரையினைத் தூக்கிச் சென்று அவர் அருகில் போட்டு, தனக்குத் தெரிந்த கொன்னைத் தமிழில் 'இந்தாங்கோ இருங்கோ' என்று சொன்னான். வீட்டுக்காரர் முகம் இறுகி இருந்தது. அந்த முதியவர் 'ஐயா கதிரை போடுது' என்று சிரித்துச் சமாளித்து விட்டு, எழுந்து சென்று வேலியோரமாகத் தனது வெற்றிலையினைத் துப்பி விட்டு மீண்டும் வந்து நிலத்தில் அமர்ந்து கொண்டார். கதிரை காலியாகவே இருந்தது.
 
லீசிங்
வாகனங்கள் வீடுதோறும் நிற்கின்றன. எல்லோரும் லீசிற்குத் தான் வாகனம் எடுக்கிறார்களாம். ஒரு காலத்தில் சேமிப்பு மற்றும் வட்டிவீதம் முதலிய விடயங்களில் அடிப்படை அறிவினை இயல்பாகக் கொண்டிருந்த எமது மக்கள் இன்று வெற்றிகரமாக குருட்டு நுகர்வோர் ஆக்கப்பட்டுள்ளார்கள். சிந்திக்க முடியாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். தாயும் தந்தையும் அன்றாடச் செலவிற்கு அல்லாடும் குடும்பங்களிலும் குழந்தைகள் கைப்பேசியினை புதிய மொடல்களிற்குக் கடன்பட்டு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுத்தொகை கட்டமுடியாது போய் பறிமுதலாகும் சொத்துக்கள் சார்ந்து தற்கொலைகள் தினம் நிகழ்கின்றன. பத்திரிகைகள் சொல்கின்றன.
 
பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள்
 
சக்தி, வசந்தம் முதலிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பத்திரைகைகளைப் பார்த்தபோது புலத்தில் இருக்கும் சிந்தனை வங்குறோத்தான தமிழ் ஊடகங்கள் போலத் தான் அவையும் இருக்கின்றன. இளம் பெண்களையும் ஆண்களையும் கவர்ச்சியாகக் கதைக்க வைத்துப் பொழுதுபோக்கு நிகழ்வுகள் மட்டும் தான் நிகழ்கின்றனவே அன்றி சிந்தனை என்பது மருந்திற்கும் காணவில்லை. பத்திரிகைகளில் காலதிகாலமாக இருந்து வந்த நொண்டிக் கவிதைகளும் நொடிகளும் கட்டுரைகளும் மட்டமாகவே தொடர்கின்றன. 
 
ஞாபக வீதி
 
எல்லோரையும் போல, 23 வருடங்களின் பின்னர் நான் பிறந்து வழர்ந்த ஊரிற்குச் செல்கையில் அங்கு ஞாபக வீதியில் பயணிப்பதும் இழந்தவற்றை மீள வாழ்வதும் தான் எனதும் முதற்குறியாக இருந்தது. பிரிந்தபின் ஊர் மீழல் என்பது சாத்தியமற்றது என்பதை அறிவு அறிந்திருந்தபோதும் ஆசை அடம் பிடித்தது.
 
கொத்துரொட்டியில் ஆரம்பித்தேன். கனடாவில் தமிழர்களுடன் கொத்துரொட்டி உண்ணும் போதெல்லாம் நானும் அவர்களும் சொல்வது ஊரில் இருந்த கொத்துரொட்டிக்கு இதெல்லாம் கிட்டவருமா என்பது தான். கொத்து ரொட்டி என்பது வாழை இலையில் சுற்றப்பட்டு பத்திரிகைத் தாழில் வெளியே பொதிசெய்யப்பட்டதாகவே எனது மனதில் இருந்தது. ரொட்டி பேபர் போல மெல்லிதாக மனதில் இருந்தது. ஆனால் ஊரிலும் கொழும்பிலும் இம்முறை கொத்துரொட்டி உண்டபோது, கனடாக் கொத்துரொட்டி தான் நான் முன்னர் இரசித்த கொத்துரொட்டிக்குக் கொஞ்சமேனும் கிட்ட நிற்பதாய்த் தோன்றியது. கனடாவின் கொத்துரொட்டி றெசிப்பி நான் புலம்பெயர்ந்த காலத்தில் புலம் பெயர்ந்தது. அதனால் அது ஓரளவிற்கு என் ஞாபகத்தோடு ஒத்துப் போகிறது. ஊரில் இப்போது கொத்துரொட்டி வாழை இலையில் சுற்றப்படுவதில்லை. பொலித்தீனில் சுற்றப்படுகறது. நான் பிரிந்த கொத்துரொட்டியினை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 
 
கருப்பணி குடித்தேன். அது அன்று போல் இல்லை. பலாப்பழம் உண்டேன் அது வாடல் பழமாக இருந்தது. சீசன் முடிந்து விட்டது என்றார்கள். பழங்களைப் பொதுவில் இப்போதெல்லாம் பிஞ்சில் பறித்த மருந்தடித்துப் பழுக்க வைக்கிறார்களாம். அதனால் சுவையில்லை என்பது மட்டுமல்ல கலியாண வீடுகள் முதலியவற்றில் வாழைப்பழத்தை மக்கள் உண்பதில்லையாம். அவை சோடனைக்கு மட்டும் தானாம்.
 
ஆலங்கொழுக்கட்டையும் பனங்காய்ப் பணியாரமும் அருமையாக இருந்தன. அள்ளி அடைந்து கொண்டேன்.
 
பசுப்பால் குடித்தபோது முன்னைய சுவை தெரியவில்லை. ஊரில் இப்போதெல்லாம் மாடுகள் பெரும்பாலும் எருவிற்காக மட்டும் தான் வளர்க்கப்படுகின்றன. இதுபற்றிப் பேசும் போது ஒருவர் சொன்னார் 'இங்கத்தே மாடுகள் ஒரு போத்தல் கறக்கும்' என்று. பறவாயில்லைத் தானே வீட்டுத் தேவைக்கு என்றேன். அவர் சிரித்துக்கொண்டு சொன்னார் 'ஊரில் உள்ள மாடுகள் எல்லாத்தையும் கறந்தால் மொத்தமாய் ஒரு போத்தல் வரும்' என்று. 
 
எடுத்து வளர்க்க ஆட்கள் இன்றி வன்னியிலும் தீவுப்பகுதிகளிலும் அலையும் மாடுகள் பற்றி பத்திரிகையில் செய்தி வந்திரிருந்தது. அது பற்றி பால் மா பிரச்சினை பற்றிக் கதைத்த ஒருவரிடம் கூறிய போது அவர் சொன்னார்: ' அப்பிடி நாங்கள் அவற்றை கொண்டு வந்து வளர்த்தால் மாடுகள் தேறியதும், ஓரிரு மாத்தத்தில் அவை தங்கள் மாடென்று கேஸ் போடப் பலர் வருவார்கள் என்று. பிரச்சினை விளங்கிக் கொள்ள முடிந்தது.
 
ஊரில் திருட்டுக்கள் அப்பப்போ நடக்கின்றன. மக்கள் பொலிசில் முறையிடுகிறார்கள். நான் செல்வதற்குச் சில நாட்கள் முன்னர் நடந்த ஒரு திருட்டினை நான் அங்கு நிற்கும் போதே பொலிஸ் திருடனைப் பிடித்து தீர்த்திருந்தது. சிங்களப் பொலிஸ் தான் அதிகம் இருக்கிறார்கள். தமிழர்கள் பிரச்சினை சார்ந்து சிங்களப் பொலிசிடம் நம்பிக்கையுடன் முறையிடுவது, ஈழத்தில் பொலிசைக் காணாது வழர்ந்த எனக்கு விந்தையாக இருந்தது.
 
வீதிகள் சிறுத்துப் போய்த் தெரிந்தன. கண் பழகப்பழகத் தான் ஞாபகம் சற்று மீண்டது. ஆனால் நான் பிரிந்த வீதிகளிற்கு என்னைப் பரிட்சயமில்லை எனக்கும் அவற்றை உணரமுடியவில்லை. பல்வேறு அபிவிருத்திகள் வீதிகளையும் ஒழுங்கைகளையும் உருமாற்றிவிட்டன.
 
நான் பிரிந்த மரங்களை ஆரத்தழுவவேண்டும் என்று ஆசையோடு சென்றேன். பல மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. மீதம் உள்ள மரங்களும் நானும் இந்த இருதசாப்த்தத்தில் பிரிந்து வளர்ந்ததால் பிணைப்பு கிடைக்கவில்லை. என் மரங்களிற்கு என்னைத் தெரியவில்லை. எனக்கும் அவற்றோடு ஒட்டவில்லை. மாமரங்களில் குருவிச்சகைள் பெரும்பான்மை ஆட்சி நிகழ்த்திக் கொண்டிருந்தன. பெரிய காடுகளாக எனது மனதில் பதிவாகியிருந்தவை இப்போது பற்றைகளாகத் தெரிந்தன.
 
எனக்குத் தெரிந்த ஊரவர்கள் ஏறத்தாள அனைவரும் புலம் பெயர்ந்து விட்டார்கள். அதனால் நானறிந்தவர்கள் ஊரில் இல்லை. அருமையாக ஒரு சிலரைக் கண்டபோது மகிழ்வாகத் தானிருந்தது. குளங்கள் கிணறுகள் கூட காணாமல் போயுள்ளன அல்லது வற்றிக் கிடக்கின்றன.
 
வல்லிபுரக்கோயில் பிரமாண்டமாக மாறிவிட்டது. சன்னதி பெரும்பான்மைக்கு அப்படியே தான் இருக்கிறது. எரிக்கப்பட்ட தேரினை நினைவூட்டி பெரிய தேர்முட்டி சிறிய தேரை உள்ளடக்கி உயர்ந்து நிற்கிறது. நல்லூர் அப்படியே இருக்கிறது. திருவிழா கோலாகலமாக நடக்கிறது. சன்னதியில் சாமி காவப்படுகையில் நிகழும் ஒலிகள் அறிவைக் கடந்து ஏற்படுத்தும் உணர்வு உடலிற்கு ஞாபகம் இருந்தது.
 
கோயில்களும் பள்ளிக் கூடங்களும் பிரமாண்டமான கட்டிட வளர்ச்சிகளை அடைந்துள்ளன. பள்ளிக் கூட மதில்களில் பும்பெயர் நாடுகளின் ஊர்ச்சங்கங்களின் பெயர்கள் உபயகாரராகப் பதிவாகி இருக்கின்றன. கனேடிய தமிழ்ச் சங்கங்களின் பங்களிப்புக்களையும் காண முடிந்தது.
 
மொத்தத்தில் ஊரில் என்னால் ஞாபகவீதியில் அதிவேகத்தில் ஓடமுடியவில்லை. கனடாவில் பொங்கலிற்கு முதல் நாள் தமிழ்கடையில் கிடைக்கின்ற ஞாபகவீதி ஓட்டம் ஊரில் கிடைக்கவில்லை. ஊர் மீழல் என்பது சாத்தியமற்றது என்பது தெரிந்தது தான். இலக்கியங்கள் இம்முனையில் நிறைந்து கிடக்கின்றன. எமது ஞாபகங்கள் நாம் குறித்த நேரங்களில் பிரதி எடுத்தவை தான். அந்தப் பிரதிக்கான காட்சிகளைத் திருப்பச் சென்று தேடுவது சாத்தியமற்றது, ஏனெனில் ஊரும் நாமும் பிரிந்து வழர்கிறோம். எமது அனுபவங்கள் மாறுபட்டவை. எத்தனையோ பிரமிப்புக்களையும் கிழர்ச்சிகளையும் புலப்பெயர்பில் அனுபவித்துவிட்டோம். விடயங்களை உள்வாங்கும் எமது அறிவு நாம் ஊiரைப் பிரிந்தபோது இருந்ததைக் காட்டிலும் பலதூரம் மாறிவிட்டது. ஒரே விடயத்தை அன்றைக்குப் பார்த்தது போல் இன்றைக்குப் பார்க்க முடியாது என்பது ஒரு புறம். மறுபுறத்தில் எமக்குள் முன்னர் பதிவான விடயங்கள் கூட எம்மால் பெருப்பித்துப் பார்த்துப் பழக்கப்பட்டு மறுபதிவாகிவிட்டன. இதனால் எமது ஒறிஜினல் பதிவுகள் எமக்குள் இப்போது இல்லை. அதாவது ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம் எமது ஊர் நினைவுகளை நாம் மனதில் மீள ஓட்டிப்பார்ப்போம். அவ்வாறு நாம் ஓட்டிப் பார்க்கும் போதெல்லாம் எமது பிரிவின் வலி முதலிய உணர்வுகளின் ஆதிக்கத்திலும் எமது அனுபவம் மற்றும் அறிவின் வளர்சியிலும் எம் மனத்திரையில் பழைய காட்சிகள் மருவிப் புதிதாக ஓட்டப்படும். பின்னர் அந்த மாறிய காட்சி தான் நான் நமது சிறுபராயத்தில் ஊரில் கண்ட ஒறிஜினல் காட்சி என்று மனம் நம்பத் தொடங்கி மருவிய காட்சி தொடர்ந்து மருவியபடி ஒறிஜினல் தொலைந்து போகும். இதனால் ஊரிற்குப் போய் ஞாபகங்களைத் தேடுகையில் அவை ஊரில் இல்லை.
 
இது நாம் பிறந்த ஊரில் மட்டுமல்ல. உதாரணத்திற்கு ஐந்தாம் வகுப்பில் எனது பெற்றோரோடு நான் ஜால சரணாலயத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது தூரத்தில் ஒரு யானைக் கூட்டத்தைக் கண்டு அதனால் பயந்து எனக்கு காய்ச்சல் கூட வநதிருந்தது. 28 வருடங்களின் பின்னர் இம்முறை யாலவிற்கு மீண்டும் சென்றேன். மிக அருகில் சிறுத்தைப் புலி யானை உள்ளிட்ட பலவற்றைப் பார்த்தும் உணர்வு அன்றுபோலில்லை. காரணம் இடைப்பட்ட இந்த 28 ஆண்டுகளில் பல சரணாலங்களிற்குச் சென்று விட்டேன். பார்வை மாறிவிட்டது. தூரத்தில் கண்ட யானைக் கூட்டத்தால் காய்ச்சல் வந்த சின்னப்பொடியன் இறந்து விட்டான். இன்றைய பார்வைக்கு ஏற்ப புதிய அனுபவம் தான் இன்று சாத்தியமே தவிர இறந்துபோன சின்னப்பையனின் பார்வை சாத்தியமில்லை. கொத்து ரொட்டி ருசிக்காததன் காரணமும் இது தான்.
 
மொத்தத்தில் ஞாபகவீதி என்பது எனக்குள் தான் இருக்கிறதே அன்றி ஊரில் இல்லை. புலம்பெயர் தேசங்களில் எம்மோடு புலம்பெயர்ந்தவர்களைச் சந்திக்கையில் தான் ஞாபவீதி ஓட்டம் பொதுமைப்படும். ஊரில் நான் பழயதை உணரவேண்டின் கற்பனையில் பார்வையினை மாத்தித் தான் காணமுடியும். அதைச் செய்வதற்கு ஊர் செல்வது அவசியமற்றது!
 
திருகோணமலை மற்றும் சிங்கள தேசம்.
 
ஹபறண, கந்தளாய், திருகோணமலை, தம்புள்ள, சிகிரியா, கண்டி, நுவரேலியா, கதிர்காமம், திசமாறகம, ஹிக்கடுவ, பெந்தோட்டை என்று திரிந்தபோது மனம் அமைதியாக இருந்தது. ஏனெனில் கதிர்காமத்தையும் திசமாறகமவையும் தவிர மற்றைய பிரதேசங்கள் நான் முன்னர் சென்றிராதவை. அதனால் ஞாபகவீதி ஓட்டம் ஒப்பீடு போன்ற தொல்லைகள் இல்லை. இன்றைய நான் இன்றைய பார்வையில் முதற்தடவையாகப் பார்க்கும் பார்வை பிரச்சினையற்று இருந்தது. 
 
கோணேச்சரம் என்னைக் கட்டிப்போட்டது. என்னவொரு இடம் அது. சம்பந்தர் மானசீகமாகப் பாடினாரோ ஆரோ சொல்லிப் பாடினாரோ, அல்லது எப்படியோ வந்துபோய்ப்பாடினாரோ தெரியாது. ஆனால் எவரிற்கும் பாட்டுவரும் இடம் தான் அது. அப்படியே இருந்துவிடலாம் என்று தோன்றியது.
 
நிலாவெளி தொட்டு இலங்கையின் அத்தனை "பீச் றிசோட்டுக்களும்" கரிபியனோடு ஒப்பிடுகையில் சிறுத்துத் தான் எனக்குத் தெரிந்தன. ஆனால் கடல் பெரிதாக இருந்தது. றிசோட்டைத் தாண்டி கடலை அதன் பிரமாண்டத்தில் உள்வாங்க இலங்கையில் தான் முடிந்தது. இந்து சமுத்திரம் சற்று உயிர்ப்பு அதிகமானதாகத் தான் தோன்றியது. 
 
வெள்ளவத்தை பீச்சில் மூன்று வயதுப் பையனின் ஞாபகவீதி ஒட்டமும் சற்றுச் சாத்தியப்பட்டது. அந்த ஞாபகம் நான் இரைமீட்டுப் பார்க்காததாய் இருந்ததால், ஒறிஜினல் பிரதி இருந்தது. அது இன்றைய நிலையோடு ஒத்துப் போனதால் மகிழ்வாய் இருந்தது.
 
சிங்கள தேசத்தின் செழிப்பு செழிப்பாகத் தான் இருந்தது. மனம் குளிர்ந்தது. கந்தளாயில் எருமைத் தயிரும் கித்துள் பனியும் அமிர்தமாய் இருந்தது.
 
சிகிரியா ஓவியங்களை அள்ளிப் பருக முடிந்தது மட்டுமன்றி காசியப்பன் என்னமா வாழ்ந்திருக்கிறான் என்று பெருமூச்சு விடவும் முடிந்தது. அருமையான இடம் சிகிரியா.
 
கண்டி எசலபெரகராவால் மக்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. தலதா மாளிகையின் உள்ளே செல்லமுடியவில்லை. சுற்றித் திரிந்து விட்டு பெரதேனியா பூந்தோட்டத்தில் அலைந்துவிட்டு நுவரெலியா சென்றேன். 
 
புசல்லாவில் கதிர்காமத்தைக் காட்டிலும் களுதொதல் நன்றாக இருந்தது.
 
நுவரெலியாவில் குளிரிற்குள் அம்மக்களின் சோகத்தை உணரமுடிந்தது. ஒரு சிறுவனுடன் பேசமுடிந்தது. சைவ உணவகம் ஒன்றில் உணவு அருமையாக இருந்தது. நுவரெலியாவின் சீதா கோவில் அமைதியாக இருந்தது. நுவரெலியாவின் பூங்கா அழகாய் அமைதி தந்தது.
 
பண்டாரவளையில் ஒரு பள்ளத்தாக்கில் நான் கற்பனையிலும் நினைத்திருக்கமுடியாப் பெருப்பத்தில் தேன்கூடுகள் பார்த்தேன். பிரமிப்பாய் இருந்தது. ஏதோ சாகசக் கதைப்புத்தகத்தின் அல்லது ஸ்டீபன் ஸ்ப்பீல்பேர்க்கின் கற்பனைப் படம் பார்ப்பதுபோன்ற பிரமிப்பை நிஜத்தில் அந்தத்தேன்கூடுகள் தந்தன.
 
கதிர்காமத்தில் முருகன் ஓரங்கட்டப்பட்டுள்ளார். முற்றுமுழுதான சிங்கள மயம். ஆனால் பாற்செம்பெடுத்து வந்த ஒரு மூதாட்டி அரோகரா என்று ஒரு பிரத்தியேக ஆவர்த்தனத்தில் கத்தியபோது புல்லரிக்கத்தான் செய்தது. செல்லக்கதிர்காமமும் மாணிக்க கங்கையும் மக்களால் நிரம்பி வழிந்தன. எதிர்பாரா விதத்தில் பிள்ளையாரைக் கும்பிட முடிந்தது.
 
வெள்ளைக்காரரும் பல்வேறு மக்களும் சர்வசாதாரணமாக பஸ்சிலும் சைக்கிளிலும் திரிகிறார்கள். மகிந்தவின் கட்டவுட்டுகள் வடமுனை தொடங்கித் தென்முனை வரை ஏகப்பட்ட போசுகளில் நிறைந்து குப்பையாகக் கிடக்கின்றன. 
 
மக்கள் புனரமைக்கப்படும் வேகவீதிகள் பற்றியும் ஏற்கனவே மெருகூட்டபட்ட தெருக்கள் சார்ந்தும் தான் வடக்கிலும் தெற்கிலும் பேசுகிறார்கள். பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுக்குறியாக அனைவரிற்கும் இருப்பது மட்டுமன்றி வேகமாக அந்த முன்னேற்றத்தை அடைய அனைவரும் துடிப்பதால் வேகவீதிகள் பற்றி அவர்கள் ஓயாது பேசும் உளவியல் புரிந்துகொள்ளும் படி இருந்தது.
 
தங்கல்லவை அண்டிய ஒரு குக்கிராமத்தில் சிங்களக் குடிசை ஒன்றில் நடக்கும் உணவகத்தில் மண்பானையில் உணவு உண்டேன். உணவு சுவையாக இருந்தது. தமிழர் அங்கு வந்து உண்பது அவர்களிற்கு மகிழ்ச்சி கொடுப்பதாக முகம்மலர்ந்து சொன்னார்கள்---சிங்களம் தெரிந்த சாரதி மொழிபெயர்த்தார்.
 
துவேசம்
 
நான் துவேசத்தைக் கண்ட ஒரே ஒரு இடம் திரும்பி வரும் போது குடியகல்வு மேசையில் இருந்த சிங்களவனில் தான். பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பான் என்று நினைக்கிறேன். மிக மட்டான ஆங்கிலத்தில் பிறந்த ஊர் போனாயா என்றான். ஆம் என்ற போது மாறியிருக்கிறதா என்றான். நிறைய மாறிவிட்டது என்று நான் சொன்னபோது, 'பலத்தால் கட்டாயப்படுத்தி மாத்தினோம்' என்று விட்டு நக்கல் சிரிப்புச் சிரித்தான். உள்ளிற்குள் ஏகப்பட்ட ஆத்திரம். ஆனால் அவனுடன் நான் சண்டை பிடிப்பது சாத்தியமில்லை. மேலும் இனமொழி மத வித்தியாசங்களிற்கு அப்பால் இலங்கையில் அதிகாரிகள் அனைவருமே கதைக்கத்தெரியாத காட்டுமிராண்டிகளாகத் தான் இருக்கிறார்கள். அந்தவகையில் அந்த சிறிய சிங்களவனோடு விவாதிக்க வேண்டிய தேவை எனக்குள் மறைந்து போனது.
 
முடிவாக
 
சமாதானகாலத்தில் ஊர் சென்று மீள்கையில் அவசரமாக நிரந்தரமாக மீளவேண்டும் என்று நினைத்தேன். இம்முறை, கனடா தான் எனது நாடு என்ற முடிவோடும், இலங்கை என்பது இனிமேல் மெக்சிக்கோ இந்தோனேசியா வியட்நாம் தாய்லாந்து போன்று ஒரு சுற்றுலா நாடு மட்டுமே என்ற எண்ணத்தோடும் வெளிக்கிட்டேன். அதுவும் சுற்றுலா செல்வதற்கு இலங்கையினைக் காட்டிலும் ஏகப்பட்ட தெரிவுகள் உள்ள நிலையில் இனிமேல் நான் இலங்கை போகப் போவதில்லை என்றே நினைக்கிறேன். 
 
கனடாவைக் காட்டிலும் நுகர்வோரிசம் அங்கு தலைவிரித்தாடுகிறது. அரசியல் அபிலாசை என்று அவர்கள் அலட்டிக்கொள்வதை என்னால் காணமுடியவில்லை. புத்தகக் கடைகளில் காத்திரமான நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழ்க் கிராமங்களும் கிராமங்களின் தன்மை குறைந்து பேராசையிலும் பணம் பறிப்பிலும் பொருளாதாரத்திலுமே குறியாக இருக்கிறார்கள். திருப்த்தியினை அதிகம் காணமுடியவில்லை. முன்னர் மிகச் சிறு கிராமங்களாக என்னுள் பதிவாகியிருந்த குக்குக்கிராமங்கள் எல்லாம் நகரங்கள் போன்று தான் தெரிகின்றன. தங்களிற்குள் மக்கள் போட்டி போட்டு வீடு கட்டுகிறார்கள். பொறாமைப் படுகிறார்கள், கோவில் வைத்து அடிபடுகிறார்கள். வெளிநாட்டுக் காரரைக் கண்டால் குறியாகப் பணம் கேட்கிறார்கள். 
 
புலிகளின் மறைவோடு எனது ஞாபகவீதியும் இல்லாது போனதை உணர முடிந்தது. அதாவது தமிழீழம் என்ற சிந்தனையிலும் அதற்கான முயற்சியிலும் தான் நாம் தமிழர்களாக இருந்தோம். பொதுமை உணரக்கூடியதாக இருந்தது. புலிகள் எவ்வாறோ அந்தப் பொதுமையினைக் கயிற்றில் கட்டி வைத்திருந்தார்கள். புலிகளின் மறைவோடு என்னைப் பொறுத்தவரை எனது ஞாபக வீதியும் மூடப்பட்டுவிட்டது. இன்று அங்கு நுகர்வோர் மட்டும் தான் இருக்கிறாhகள். நுகர்வோரிற்கு இன மொழி மற்றும் பாரம்பரி அடையாளங்கள் அர்த்தமற்றவை. அன்றைய சந்தையின் கட்டழைகளிற்கு ஏற்ப ஓடுபவர்கள் நுகர்வோர். உலகமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் நுகர்வோரைச் சந்திப்பதற்காக இலங்கை செல்வது அவசியமற்றது. அந்த மக்களின் அபிலாசை பொருளாதாரம் மட்டுமாக இருக்கிறது. அவர்களிற்கும் எனக்கும் இடையில் தொடர்பு அறுந்துபோன உணர்வுடன் கனடா மீண்டேன். 
 
எனது ஆத்ம திருப்த்திக்காக இப்பயணத்தில் நான் செலவிட்ட மொத்த தொகையில் 70 வீதத்தை பல்வேறு மனிதர்களிற்கும் குழந்தைகளிற்கும் என்னால் இயன்ற தொகையாகப் பிரித்துக் கொடுத்துவிட்டு மீண்டேன். 
 
என்னைப் பொறுத்தவரை இந்தப் பயணம் கங்கைக்குச் சென்று அப்பாவின் அஸ்த்திகரைத்து மீண்ட ஒருவரின் பயணம் போன்றே அமைந்தது. ஒரு நிரந்தர வெற்றிடத்தை எனக்குள் உணர்கிறேன்.
  • Replies 88
  • Views 13.7k
  • Created
  • Last Reply

மீண்டும் ஓர் நெருடிய நெருஞ்சி மனதில் ஆழ இழுத்து இரத்தம் சுவைத்தது . நீங்கள் கூறிய அனைத்து அனுபவங்களும் கற்பனை கலவாத நிஜங்கள் இன்னுமொருவன் . அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்
மாமரங்களில் குருவிச்சகைள் பெரும்பான்மை ஆட்சி நிகழ்த்திக் கொண்டிருந்தன

 

 

 

அனுபவ பகிர்வுக்கு நன்றி, இன்னுமொருவன்.

  • கருத்துக்கள உறவுகள்
வாசித்து முடித்ததில் இருந்து பலமணிநேரமாக வார்த்தை தொலைத்து ஊமையாக மனவெளி எங்கும் இன்னமும் இந்த பதிவின் அதிர்வுகள்..
 
அண்மைக்காலங்களில் நான் வாசித்து கரைந்த பதிவுகளில் ஒன்று என்றால் இது கண்டிப்பாக இருக்கும்... எங்கள் ஒவ்வொருவரதும் தொண்டைவரை வந்து நிற்பவைகளை எழுதி இருக்கிறீர்கள்..அதனால்தான் அந்த பிரமிப்பில் இருந்து அவ்வளவு இலகுவில் வெளிவரமுடியவில்லை போலும்..
 
வாசித்து முடிக்கையில் என்னவோ ஒன்றை இழந்துவிட்டதற்கான வலி.. தொண்டைவரை வருகிறது என்னவொன்று சொல்ல முடியவில்லை...மறுபடி இந்த பதிவை வாசித்தபோது அதுதான் அங்கிருக்கிறது....
 
 

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான, ஆழமான ஒரு பதிவு..

 

மனித மனம் மாயங்களைச் செய்வதற்கு சில வருட இடைவெளியே போதுமானது.. இந்தியாவில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்ட ஞாபகம் வருகிறது.. அதாவது கொழும்பின் காலி வீதி, சென்னை அண்ணாசாலையை விட அகலமானது என்று சொன்னதுதான் மிகவும் கலவரமான நகைச்சுவை.. பல ஆண்டுகள் கழித்து கொழும்பு திரும்பியபோது கேவலமாகப் போய்விட்டது.. :lol:

 

எனது நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வல்லிபுரக்கோயிலில் ஒரு பெட்டிக்கடை தேனீரும், தோசையும் அந்தமாதிரி இருக்கும் என்று சொல்லியிருந்தேன்.. சில வருடங்களுக்கு முன் அங்கு சென்று வந்தவன் அதையா நல்லாயிருக்கும் என்றாய்? அந்த குவளைகளைப் பார்த்தாலே குடிக்கமாட்டாய் என்றான்.

 

 

*எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டது.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

முகப்புத்தகம் வருவதற்கு முன்னர் hi5 இருந்தது..அதில் போட்ட பதிவுகள்;அரட்டைகள்..ஏத்திய படங்கள்..நண்பர்கள் என்று ஒருகாலம்..இப்ப அதன் கடவுச்சொலையே மறந்துவிட்டேன்.. இப்பொழுது முகப்புத்தகம்.. நாளை யாரறிவார்.., இணையவெளியே இப்படி மாறிக்கொண்டு போகையில் இலத்திரனியல் ஊடகங்களால் வழிநடத்தப்படும் ஊர்களும் தேசங்களும் அப்படியே இருக்கும் என்று நினைக்க முடியாதுதானே.. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களின் அபாரமான பாய்ச்சல்தான் எமது ஊர்களிலும் விரைவான மாற்றங்களை கொண்டு வர பெரும் பங்காற்றியவையாக கண்டிப்பாக இருக்கும்.. முட்டிமோதிக்கொண்டிருக்கிறார்கள் அவர்கள் வெளிநாட்டு வாழ்க்கை வசதிகளைப்பார்த்து அவற்றின் மேல் ஆசைகொண்டு.. நாங்கள் இங்கு சலித்துப்போய் எமது பழைய வாழ்க்கையை தேடுகிறோம்.. மனிதமனம் விந்தையானது.. எதையும் இல்லாதபோதுதான் அதை தீவிரமாக நேசிக்கும்..அதற்காக ஏங்கும்.. இதுவும் கடந்துபோகும் என்று எமது ஏக்கம்களின் வடிகாலாக எழுத்தை கொஞ்சப்பேர் பாவிக்கிறோம்.. சும்மா ஊரைப்பற்றிய ஏக்கத்தை கவலைகளை மறந்துபோய் இருக்கிறவனின் ஏக்கம்களையும் தூண்டிவிடும் பெரும்பாவத்தையும் செய்கிறோம்.. :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பதிவுக்கு எனது அக்கா ஒருவர் எழுதியது:

 

நான் போனா எப்பிடி இருக்குமோ அப்பிடியே இருந்தது இது. ஞாபகவீதி திறந்து மூடியது. குழந்தையாய் புலம்பெயர்ந்தது, இடைக்கால வன்னிப்பயணம்..எல்லாம். அதே ஞாபக வீதி... அருமையான பதிவு. யதார்த்தம் கொட்டும் எழுத்து. but as we are all the displaced by 'body', not by heart, we would love to continue this inception, and force us not to wake up. as that's the only thing that makes us happy. the article didn't even give the feeling that it is a long one. its as if I am walking back in gnabaga veethi. thanks for the share subes.

Edited by சுபேஸ்

இன்னுமொருவன்,

 

உங்களின் பயணம் ஈழத்தமிழரின் தற்கால வாழ்நிலையை படம்பிடித்து காட்டியிருக்கிறது. அங்குள்ள மக்கள் வேறு என்னதான் செய்யமுடியும்? போர் வேறு எதைத்தான் தரும்?

 

நீண்ட காலமாக போருக்குள் ஜீவித்த மக்கள், சாதாரண வாழ்க்கை முறையில் இருந்து விலகி நீண்ட காலமாகி விட்டது. சிக்கல்களை தீர்க்கும் மிகச் சிறந்த முறையாக, வன்முறையை (பேச்சிலும், செயலிலும்) தெரிந்தெடுக்கிறார்கள். அவர்களை வழிநடத்த ஒரு நபர்கூட இல்லை. இது எமது இனமல்லவா?

 

இந்த மக்களை பற்றி எனக்கு நிறையவே மனவருத்தமும் நெருடல்களும் உள்ளது. நம்மால் முடிந்த அளவு நிலமைகளை நேர் செய்ய நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். இது எமது கடமையும் கூட. வெறுமனே கைகழுவி விடுவது சரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பிறந்து வளர்ந்த தங்கை ஒருவர் அண்மையில் இலங்கை சென்று வந்தார். அவர் சொல்கிறார் இப்படி. I would love to go to Sri lanka. I like their hospitality. people are so relaxed.

மனதை கிளறும் பதிவு இன்னுமொருவன். 
 
 
****************
 
 
ஞாபக வீதியில் இருக்கும் பிரச்சனை, மறுபடியும் அந்தக்காலத்துக்குப் போகமுடியாதே என்ற ஏக்கம் + கவலை.
 
 
ஞாபக வீதியில்*  ஓர் அழகான வீடு இருந்தது. சைக்கிளில் அந்த வீட்டைத்தாண்டும் போதெல்லாம் பாரதிராஜாவின் "கொடியிலே மல்லிகைப் பூ மணக்குதே மானே.. " மூளைக்குள் கேட்கும்.
 
அங்கு போய் இருந்த போது ஞாபக வீதியில் சைக்கிளில் ஓடிப் பார்த்தேன். ஆட்கள் தான் இல்லை.. வீடுமா !!  :(
 
 
 
* * * * * * * ** * * * * 
 
பிரச்சனைகள் பெரிதாக முன்னமே என் ஊரில் மாலை வேளைகளில் ஒரு வித தனிமை ஊடுருவிக் காணப்படும். இது பெரிய பெரிய வளவுகளில் வீடுகள் தள்ளித்தள்ளி இருப்பதால் ஏற்பட்டிருக்கலாம். 
 
இயற்கையின் ஓசைகளும், எளிமையான வாழ்வும், இதமான வெக்கையும், இந்த மெல்லிய தனிமையும் சேர்ந்து மாலைவேளைகளில் ஒர் ரம்மியமான உணர்வை ஏற்படுத்தும்.
 
இரண்டு நாட்கள் ஊரில் இம்முறை தங்கிய போது, அதே உணர்வைப் பெறக்கூடியதாக இருந்தது.
 
அப்பாச்சி வீடு..
 
பிள்ளைகள் வெறுங்காலோடு மணலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
 
பொழுது மெதுவாகச் சாய்ந்தது.. காவோலைகள் மரத்தில் தேய்க்கின்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது...
 
 
 
*Memory Lane

இன்று இந்தப்பதிவுடன்தான் விடிந்தது. உடனே பொழுதுபட்டதுபோல் இருந்தது. ஏற்கனவே எமது வாழ்வு சூனியத்துள் தான் இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள சற்றுநேரமெடுத்தது.

 

அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவரீதியாக உண்மையை எழுதிஉள்ளீர்கள்....புலத்தில் இருந்து சென்று அரிதாரம் பூசி நாடகம் ஆடிவிட்டு இங்குவந்தபின் ...பணத்திற்கு ------ விமர்சனம் செய்பவர்களுக்கு அருமையான சவுக்கடி....இழந்தவையாவும் திரும்ப பெறுவதென்பது...இனி கற்பனையில்தான்.....இங்கிருந்து ..கொண்டு செல்லும் டொலர்.பவுண்களை(அகதிக்காசோ...கஸ்டப்பட்டதோ) அள்ளி எறிந்து நாடகம் ஆடும் வடிவேலு...சரளாக்களுக்கு...நல்ல பதில்...

Edited by நிழலி
ஒரு அநாகரீக வார்த்தை நீக்கப்பட்டுள்ளது

நன்றாக எழுதி உள்ளீர்கள்.  அனைத்தும் மறுக்கமுடியாத உண்மை. 

இதை வாசித்த பின் கொஞ்சம் ஆழமாக ஒரு குறிப்பை எழுதுவம் என்று பல முறை முயன்றும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் எழுத முடியுது இல்லை.

 

சமூக பிரக்ஞையும், தன் உணர்வும், ஊர் பாசமும் கொண்ட ஒருவரால் இதனை விட சிறப்பாக எழுத முடியாது.

 

பொறுமையும் நேரமும் இருந்தால் இந்த பதிவு பற்றி சிறு குறிப்பை எழுதுகின்றேன்.

 

என்னால் முடிந்தளவு இப் பதிவை அனைவருக்கும் பகிர்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் எதோ வலிக்கின்றது ...கவலையாக இருக்கு....................... :(

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது அனுபவப் பகிர்வுக்கு மிகவும் நன்றி  இன்னுமொருவன் !

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றிகள், இன்னுமொருவன்!

 

நீண்ட காலங்களின் பின்பு, ஒரு முறை சென்றபோது, நானும் பல எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொண்டேன்! எனது 'கடவுச்சீட்டு' வெளிநாட்டுக் கடவுச்சீட்டு எனினும், நான் பிறந்த ஊர் அதில் போடப்பட்டிருக்கும். எந்த பெற்றோர், தொழில் நிமித்தம் மலையகத்தில் இருந்த போது, நான் அங்கு பிறந்தேன்! அங்கிருந்த 'விசா' தருபவரால், யாழ்ப்பாணத்தில், அல்லது மட்டக்களப்பில் பிறக்காத ஒருவர், வெளிநாட்டுக் கடவுசீட்டுடன் வந்திறங்கியது, நம்பமுடியாமல் இருந்திருக்க வேண்டும்! 

 

மேல்நிலயாளரை அழைக்கும்படி கூறினேன்! அவரும் மேல்நிலையாளரும் சிங்களத்தில் உரையாடியது அவ்வளவும் எனக்குத் தெளிவாக விளங்கியது! இறுதியில் வெளியில் விட்டார்கள்! அவ்வளவு நேரமும், எனது இதயம், எனது 'வாய்க்குக் கிட்ட' வந்து நின்று துடித்துக்கொண்டிருந்தது போல ஒரு பிரமை!

 

எனது கருத்துப்படி இலங்கைக்கு, இனப்பிரச்சனையச் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள, மிகவும் அருமையான சந்தர்ப்பமொன்று போரின் பின்பு கிடைத்திருந்தும், அதைப்பயன்படுதிக் கொள்ளவில்லை என்றே நினைக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

நானே அங்கு சென்று அனுபத்த வலிகளாக உங்கள் அனுபவப் பதிவு இருந்தது. இனிமேல் என்ன இருக்கு எமக்கு என்றுதான் ஏமாற்றத்துடன் எண்ணத் தோன்றுகிறது.

இந்தப் பதிவை முழுதாக வாசித்து முடிக்கையில், ஊரில் இருந்து வரும் பொழுது மின்சார விளக்கை அணைத்து விட்டு வந்து, 23 வருடங்களின் பின்பு மீண்டும் அங்கு போய் விளக்கை எரித்து அங்குள்ள மாற்று நிலை கண்டு ஏமாந்து போகும் சிறுவனின் மனநிலை போலுள்ளது.

 

மிகவும் கனதியான பதிவு. நன்றி  

என்னவோ ஒன்றை இழந்துவிட்டதற்கான வலி

புலத்தில் வாழ்ந்தாலும், நாம் பிறந்து வாழ்ந்த மண்ணை மறவாது வாழும் உங்களது இந்த கட்டுரையை வாசிக்கும் போது விடைகளுக்கு பதிலாக பல கேள்விகள் முளைவிடுகின்றன.

 

இறுதியாக "சமாதானகாலத்தில் ஊர் சென்று மீள்கையில் அவசரமாக நிரந்தரமாக மீளவேண்டும் என்று நினைத்தேன். இம்முறை, கனடா தான் எனது நாடு என்ற முடிவோடும், இலங்கை என்பது இனிமேல் மெக்சிக்கோ இந்தோனேசியா வியட்நாம் தாய்லாந்து போன்று ஒரு சுற்றுலா நாடு மட்டுமே என்ற எண்ணத்தோடும் வெளிக்கிட்டேன்..." என்ற உங்களது முடிவுரை

 

"நாங்கள் ஒரு தொலைந்து போன சமூகமாய்ப்போய் விட்டோமா? ஈழம் என்ற உன்னத இலக்கிற்க்காக இத்தனை உயிர்களும் வீணாகிப் போய்விட்டனவா?" என்ற உள்ளக் குமுறலுக்கு விடை தேடி நிற்கிறோம்.

 

நன்றி

இப்போ தான் படித்து முடித்தேன்...  நாலுவருடத்துக்கு முதல் படித்து இருந்தால் ஒருவேளை பாதிப்புக்குள்ளாகி இருப்பனோ என்னவோ...  அண்மை சிலகாலமாக  எனக்கு தனிப்பட நடந்த சம்பவங்களும்,  தெரிந்து கொண்ட விடயங்களும்,  புரிந்து கொண்டவைகளும்  மீண்டும் மீண்டும் என்னை ஒரு கேள்வியை கேக்க தூண்டும்...     " நாங்கள் இப்போது இருக்கும் நிலையை விட நல்ல நிலையில் இருந்து இருக்க தகுதியானவர்களா...??? "   விடை எப்போது இல்லை எண்றே தோண்றுகிறது... ! 

 

ஒரு விடயத்தை மட்டும் தெளிவாக சொல்ல முடியும்...  எங்களால் தாயகத்திலும் எதையும் காப்பாத்த முடியவில்லை அதற்கு பின்னர் வெளியிலும் எதையும் காப்பாத்த முடியாதவர்கள்... !  எங்களின் ஒற்றுமை அப்படி... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி, இன்னுமொருவன்

இதை படிக்க ஊருக்கு போகவேணும் போல இருக்கு. ஆனால் சிறுபான்மை இனங்களை இலங்கை அரசாங்கம் சமமாக நடத்தும் வரை இலங்கைக்கு சுற்றுலா போவதில்லை என்று முடிவு எடுத்தாயிற்று. :(

நான் தற்போதைய நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து வைத்து இருந்தேனோ...அதனுடன் ஒத்து போகிறது உங்களது அனுபவம்...

இலங்கைக்கு போகும் எனது எண்ணமும் வலு குறைகிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.