Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ச.அ.டேவிற் ஐயா (11.10.2015 ) இன்று கிளிநொச்சியில் காலமானார்..

Featured Replies

ச.அ.டேவிற் ஐயா (11.10.2015 ) இன்று கிளிநொச்சியில் காலமானார்..

தொண்ணூறு வயதில் அபாயமானவர்கள் பட்டியலில் இருக்கின்றேன்! – டேவிட் ஐயா:-

ச.அ.டேவிற் ஐயா (11.10.2015 ) இன்று கிளிநொச்சியில் காலமானார்..  அவரது நினைவாக July 4, 2013 எழுநாவில் வந்த  இந்தக் கட்டுரை மீள்பிரசுரமாகிறது...  

 

 

Davidசொலமன் அருளானந்தம் டேவிட் என்னும் டேவிட் அய்யாவுக்கு இப்பொழுது 90 வயது. சென்னையில் ஒரு வீட்டில் வாடகை விருந்தாளியாக தங்கியிருக்கிறார். பிரான்ஸில் வசிக்கும் அசோக் யோகன் கண்ணமுத்து அவர்களுடைய முயற்சியில் உருவாகும் ஆவணப்படமொன்றிற்காக டேவிட் அய்யாவுடன் 2012 ஜனவரியில் சந்தித்து உரையாடினோம். அவரது வாழ்வை முழுமையாகப் பதிவு செய்யும் ஒரு பெரும் முயற்சி அது. பின்னர் எழுநா இதழுக்காக அவரது வாழ்வையும் அனுபவங்களையும் பதியும் பொருட்டு, 2012 ஒக்டோபரிலும் டேவிட் அய்யாவைச் சந்தித்தோம். நினைவுகள் தடுமாறத் தொடங்கும், வயதில் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். அவரது அனுபவங்களின் ஊடாகப் பயணிக்கும் உரையாடல் இது

 

உங்களுடைய இளமைக்காலம் பற்றிய நினைவுகளைக் கூறுங்கள்?

நான், 1924ஆம்  ஆண்டு ஏப்ரல்  24ஆம் தேதி கரம்பனில் பிறந்தேன். அப்பா பெயர் அருளானந்தம், அம்மா பெயர் மரியப்பிள்ளை, எங்கள் வீட்டில் ஆண்கள் நான்கு பேர், பெண்கள் இரண்டு பேர். என்னையும் அண்ணனையும் தவிர்த்து மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள். கரம்பனில் இருந்த  கொன்வென்டில் எனது ஆரம்பக் கல்வியைத் துவங்கினேன். ஐந்தாண்டுகாலம் அதில் பயின்ற பின்னர் மூன்று வருடங்கள் தமிழைப் பயின்றேன். அதற்கு பிறகு நான் ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பினேன். எனது அண்ணன் புனித அந்தோனியார் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தார். அங்கு சென்று ஆங்கிலம் பயின்றேன். ஆனால் ஆங்கிலக் கல்வி பயிலப் போதுமான பண வசதி என்னிடம் இருக்கவில்லை. தகப்பனாரிடமும் அவ்வளவு பணம் இல்லை. அப்பொழுது அப்பா சொன்னது இன்னும் நினைவிலிருக்கிறது. அவர் சொன்னார் ‘’ உனது அண்ணனை  எப்பாடு பட்டாவது நான் ஆங்கிலம் படிக்க வைத்து விடுவேன். அவன் ஆங்கிலம் படித்தால்தான் நல்லதொரு உத்தியோகத்தில் சேர முடியும். ஆனால் உன்னை என்னால் அவன் போல படிக்க வைக்க முடியாது. அதனால், தம்புதேனியாவில் இருக்கும் எனது சிறிய கடையில் வேலைக்குச் சேர்ந்து கொள்” என்றார்.

அந்தப் பிராயத்தில் எனக்கு படிப்பு, உத்தியோகம் பற்றிப் பெரிய அபிப்பிராயங்கள் இருக்கவில்லை.  நான் தந்தையின் முடிவை ஏற்று சரி என்று  சொன்னேன்.  நானும் என் தகப்பனாரும் பின்னர் ஒன்றாக வீட்டிற்குச் சென்றோம். ஆனால் அப்பா மறு நாள் கல்லூரிக்குக் சென்று மகனின் ஆங்கிலக் கல்வி விருப்பதைச் சொல்லியிருக்கிறார். தலைமை ஆசிரியரோ அப்பாவைத் திட்டியிருக்கிறார். ஏனென்றால் அவர் என்னை நன்கு அறிவார். “அவனது கல்வி பற்றி உனக்கு எந்த கவலையும் வேண்டாம். அதற்கான செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

மறு நாள் நான்  இரண்டு சிறிய வேட்டி, இரண்டு சிறிய சட்டை, ஒரு துவாய் என எடுத்துக்கொண்டு கிளம்பினேன். என்னை வழியனுப்ப எனது தகப்பனார்  வரவில்லை. அவருக்கு மனதில் ஏதோ சங்கடம் இருந்ததுபோல் தெரிந்தது. ஆக நான் மட்டும் கிளம்பிச் சென்றேன். எனது வீட்டிலிருந்து புனித அந்தோனியார்  கல்லூரிக்கு செல்ல ஒரு மைல் தூரம் நடக்க வேண்டி இருக்கும். காலை  6 லிருந்து 7 மணிவாக்கில் நான் கிளம்பினேன் . அங்கு போனதும் தலைமை ஆசிரியர் அந்தோனியார் பள்ளியிலிருந்து இளவாலையில் இருக்கிற  ஹென்றிக் கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்குதான் தான் ஆங்கிலக் கல்வி பயின்றேன். ஆங்கிலம் படிக்க இளவாலைக்கு வந்த நாள்முதல் நான் வீட்டிற்கு செல்லவே இல்லை அங்கேயே படித்து அங்கேயே சாப்பிட்டு உறங்கி வாழ்ந்தேன். எனக்கு எந்த ஓர் உலக அனுபவமும் கிடைக்கவில்லை என் மனம் முழுக்க  பள்ளிச்சூழல் மட்டுமே  இருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு ஒரு முறை எனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில் ஊர்காவற்துறை சந்தையில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் 16 வயது இருக்கும். அப்போது வெள்ளை சட்டை வேட்டி சால்வை அணிந்திருந்த ஒரு பெரியவர் என்னிடம் வந்து என்ன தம்பி ஆழ்ந்த யோசனையில் இருக்கிறீர்கள் போல, என்ன யோசிக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது நான் சொன்னேன். “தமிழர்களின் நிலையை பற்றி எனக்கு இப்போது சில விஷயங்கள் புரிகிறது. ஆனால் அதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம் என்பது பற்றிய சிந்தனைகள் எனக்கு கவலையை ஏற்படுத்துகின்றது.”

அப்போது அவர் “தம்பி அது இப்போது வளர்ந்து விட்டது இனி அதனைத் திருப்பி எழுதுவதற்கு இடமில்லை அதனை முழுதாக அழித்து விட்டு புதிதாக எழுத வேண்டும்” எனறுவிட்டு தன் பாட்டில் போய்விட்டார் . இதையெல்லாம் பார்க்கும்பொழுது ஏதோ ஓர் உந்து சக்தி எனக்கு பின்னாலிருந்து என்னை தள்ளுவது போன்ற உணர்வு எழுந்தது.

எனக்கு அப்போது பெரிய கனவு இருந்தது. திருகோணமலையில் கட்டிடக் கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு. அதற்காக நல்லதொரு வரைபடத்தையும் நான் தயாரித்திருந்தேன்

ஓர் ஆர்க்கிடெக் ஆவதென்று எப்படி முடிவு செய்தீர்கள்?

நான் சிறுவனாக இருந்த போது என்னிடம்  ஒரு அழகிய ஜப்பானிய மிட்டாய்  டப்பா ஒன்று இருந்தது. அதில்  ஒரு  சின்ன வண்டிலுக்குள்  பூனையொன்று விளையாடுவது போல ஓர்  ஓவியம் வரையப்பட்டிருந்தது.  அதனை இப்போது கூட என்னால் அழகிய ஓவியமாக   தீட்ட முடியும். அந்த அளவுக்கு அந்த மிட்டாய் டப்பாவும் அதில் வரையப்பட்டிருந்த ஓவியமும் எனக்குப் பிரியமானதாக இருந்தது. பார்க்கும் திறனும், கிரகிக்கும்  திறனும் எனக்கு அதிகமாக இருந்ததாக நம்பினேன். மேலும் சிறு பிராயத்திலேயே எனக்கு ஓவியத்தின் மீது அதிக ஆர்வம் இருந்தது. மிட்டாய் டப்பாவில் இருந்த அந்த ஓவியம் என்னைக் கவர்ததால் ஆங்கிலக் கல்விக்கு நான் இளவாலை சென்ற போது அதனையும் கூட எடுத்துச் சென்றேன்.

பின்னர் கரம்பன்  கொன்வென்டில் படிக்கும்போது ஓவியம் தீட்டுவதில் அதிக ஆர்வம் காட்டினேன். எங்களுடைய ஆசிரியர் ஒருமுறை ஒரு மாங்காயை மேசையின் மீது வைத்து அதனை ஓவியமாக வரையுமாறு கூறினார்.  நான் கூர்மையாகக் கவனித்து அதனை தாளில் ஊன்றிக் கீறினேன்.  ஆசிரியர் அதனைப் பார்த்து விட்டு  “நீ அழகாகத்தான் கீறியிருக்கிறாய். ஆனால் முதலில் கீறும் போது அழுத்தமாக கோடுகளை  போடாமல் இலேசாக கீற வேண்டும்.  அப்போதுதான் ஏதாவது பிழை செய்தாலும் அதனை அழித்து  சீராக வரைய முடியும். மேலும் தாள் பாழாகாமல் இருக்கும் என்று கூறினார். வேறு  ஒரு தாளில் மீண்டும் வரையுமாறு கேட்டுக்கொண்டார். நானும் ஆசிரியர் கூறியது போல இலேசாக மாங்காயினை  கீறியிருந்தேன். அதைப்பார்த்த ஆசிரியர் எங்கேயடா கீறியிருக்காய் என்று கேட்டார். அந்த அளவுக்கு கண்ணுக்குத் தெரியாதபடி மெல்லியதாய் வரைந்திருந்தேன். அந்த நாள்தொட்டு ஓவியக்கலை என்னோடுகூடவே ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
இளவாலையில் படிக்கும்போது நிறைய ஓவியர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அப்போது பெரிய பெரிய ஓவியங்களை தீட்டி அதற்கு வண்ணங்களையும் தீட்டி முழுமையான ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன் . அந்தக் காலத்தில்தான் இளவாலை  தூய ஹென்றி கல்லூரியில் முதன்முதலாக அறிவியல்  பாடப்புத்தகங்கள்  வரத்துவங்கின. அப்போதுதான் எல்லோரும் என்னிடம் அறிவியலில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர். நான் ஓவியங்களில் தேர்ந்து விளங்குவது  உண்மையென்றாலும் அறிவியல்தான் இனி வரப்போகும் காலங்களில் வாழ்க்கைக்கு கைக்கொடுக்கும் என்று விளக்கினார்கள். ஆனால் எனக்கு ஓவியங்கள் வரைவதில் இருந்த ஆர்வம்  இயற்பியல், வேதியியல்  பாடங்களில் இல்லாமல் இருந்தது. எல்லோரும் என்னை அறிவியல் பாடத்தில் கவனம் கொள்ளுமாறு சொன்ன போது. நான் ஒரே வார்த்தையில் சொல்லி விட்டேன் என்னால் அது முடியவே முடியாதென்று. எனக்கு விருப்பமான கட்டிட வரைகலையில் நான் கவனம் செலுத்தத் துவங்கியது ஓவியத்தின் மீதான எனது நாட்டத்திலிருந்துதான் துவங்கியது.

வேதநாயகம் என்றொரு ஆசிரியர்  எங்களுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க வருவார். நான் ஆங்கிலப் பாடத்தில் அதிக நாட்டம் கொண்டவன் என்பதனைப் புரிந்திருந்த அவர் என்னிடம் தனிக் கவனம் எடுத்துக் கொண்டார். எந்த அளவுக்கு அவர் அன்பு கொண்டிருந்தார் என்றால் விடுதியில் நல்ல உணவு கிடைக்காது என்பதால் என்னைத் தனியாக அழைத்து அவர் எடுத்து வந்த உணவைக் கொடுப்பார். அவருடைய அன்பும் அரவணைப்பாலுமே நான் ஆங்கிலக் கல்வியில் புலமை பெற முடிந்தது.  பின்னர் என்னுடைய எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்தது அதுதான்.

கல்விக்குப் பின்பான காலங்கள் எப்படியிருந்தன?

ஒரு நாள் தெருவில் நடந்து கொண்டு போகும் போது  ஒரு பெரிய தபால் நிலையம் இருந்தது. அதற்கு எதிரே  பொதுப்பணித்துறை கட்டிடம் இருந்தது.  அது சிவப்புச் செங்கலால்  கட்டப்பட்டு வடிவாக இருந்தது. அதன் கூரையில் அழகான பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  அதனைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன். அந்த  சிறு பிராயதில் அப்படிப் பூ வேலைப்பாடுகள் செய்வதுதான் ஆர்க்கிடெக்கினுடைய வேலை என்று நினைத்தேன்.

கிராமத்திலே  வாழ்ந்த எனக்கு புதிதாக கொழும்பிற்கு வந்து பெரிய பெரிய கட்டிடங்களைப்  பார்க்கும்பொழுது ஒருவித வியப்பும், அச்சமும் ஏற்பட்டது . பயத்தை எல்லாம் ஓரம் வைத்து விட்டு மெல்ல மெல்ல உள்ளே நுழைந்தேன்.  பிறகு கிளிரிக்கல்   பகுதிக்குள் நுழைந்தேன். அங்கே ஒரு தமிழர் இருந்தார் அவரிடம் போய் நான் என்னைப்பற்றி அறிமுகப்படுத்தினேன். அப்போது அவரிடம் நான் நன்றாக படங்கள்  கீறுவேன். கட்டிடங்களில் உள்ள பூ வேலைப்பாடுகள்  எல்லாம் நான் நன்றாக செய்வேன் என்று கூறினேன். மேலும் என்னை பொதுப்பணித்துறையில் சேர்த்து விடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன் அவர் என்னிடம் வயதைக் கேட்டார். நான் 47 என்று  கூறினேன். 46 – இற்கு உள்ளாகத்தான்  இங்கே பணியில் அமர்த்துவார்கள் ஆக நீங்கள் இங்கு சேர்வது கடினம். ஆக நீங்கள் ரெக்னிக்கல் கல்லூரியில் உங்களது படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பியுங்கள் என்று கூறினார்.

ரெக்னிக்கல் கல்லூரியில் போய் எனக்கு ஓவியம் கற்றுக்கொள்ளத்தான் விருப்பம். ஆனால் காடுகளில் சென்று நிலம் தொடர்பான சர்வே எடுக்கவும் கருவிகளைக் கொண்டு  கோணங்களை அளவிடவும் வேண்டியதான படிப்பு படிக்க வேண்டியிருந்தது. நல்ல  வடிவமைப்பாளராக வேண்டுமென்றால் டிராட்ஸ்மேன்ஷிப்பும் படிக்க வேண்டும். எனக்கு சர்வேயிசத்தில் விருப்பமில்லை. ஆனால் அனைத்தையும் ஒன்றாகத்தான் படிக்க வேண்டும். விதிவலியது என்பது போல என்னை எனக்குப் பிடிக்காத சர்வேயிசத்தில் போட்டார்கள். அப்போது கல்லூரியில்  பொதுப்பணித்துறையில் தலைமை அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒருவர் அங்கு ஆசிரியராக வந்தார். நான் முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன். அவர் வண்ணங்களைப் பற்றி பாடம் நடத்துவார்.  அன்று சகாரா  பாலைவனத்தைப்பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அதில் மஞ்சள் நிற மணல், பச்சை நிறத்தைக் கொண்ட ஒயாஸிஸ் மரங்கள், நீல நிறத்தை உடைய தண்ணீர் என்று வண்ணங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது நான் என்னையே மறந்து  அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னை அவர் சகாராவுக்கு அழைத்துச் சென்று விடுவார். அப்படியொரு அதியசயக்காரர் அவர். ஒரு நாள் நன்றாக மது அருந்தி வந்தவர், டேவிட் என் மகன் என்றார். நான்நெகிழ்ந்து போய் பாடம் முடிந்த பின்னர் அவரிடம் சென்று என் மனதில் உள்ள சங்கடங்களை எல்லாம் சொன்னேன்.

எனக்கு சர்வே படிப்பை விட டிராட்ஸ்மேன்ஷிப் படிக்கத்தான் ஆசை என்றேன். ஆனால் என் விருப்பத்தையும் மீறி என்னை இங்குதான் சேர்த்து விட்டார்கள் என்றேன். உடனே அவர் என் கையைப் பிடித்து  கொண்டு நேராக கல்லூரி முதல்வர் அறைக்குச் சென்றார். கல்லூரி முதல்வர் இவரை விட வயதில் சிறியவர் என்பதால் அவரை திட்டத் துவங்கினார். விருப்பமில்லாத பையனை ஏன் வேறு துறையில் படிக்க வைக்கின்றீர்கள். பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதைத்தான் அவர்கள் படிக்க வேண்டும் என்றார். இறுதியில் என் விருப்பபப்டி டிராட்ஸ்மேன்ஷிப்பை நான் படித்தேன். என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சூழலிலும் ஒரு மேய்ப்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் என் கைகளைப் பற்றி என்னை அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படி வந்தவர்தான் அந்த பொதுப்பணித்துறை  அதிகாரியும். பின்னர் படித்து முடித்து பொதுப்பணித்துறையில் வேலையும் கிடைத்தது.

பொதுப்பணித்துறை வேலை அனுபவங்களைச் சொல்லமுடியுமா?

அப்போது அங்கு இரண்டு ஆங்கிலேயர்கள் இருந்தார்கள். ஒருவரது பெயர் வின் ஜோன்ஸ் மற்றொருவரின் பெயர் நினைவில்லை. ஆனால் அவர்தான்  அங்கிருந்த தலைமை அதிகாரி. அவர்கள் இருவரும்தான் வெளிநாடு சென்று படிப்பதற்கான   ஸ்கொலர்ஷிப் கொடுப்பவர்கள். அவர்களுக்கு என்னைப் பற்றி  நன்கு தெரியும். அவர்கள்  அந்த ஸ்கொலர்ஷிப்பை எனக்குத்தான் தந்தார்கள். ஆனால் என்னுடன் பணிபுரிந்த மற்றைய சிங்களவர்களுக்கு இது பிடிக்கவில்லை. இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று சூழ்ச்சி செய்து எனக்கெதிராக ஒரு மனுவை உயரதிகாரிக்கு அனுப்பி வைத்தார்கள்.  அந்த மனுவில் எனக்கு ஆஸ்த்துமா வருத்தம் இருப்பதாக ஒரு தகவல் இருந்தது. நான் உடனே பொது மருத்துவமனைக்குச் சென்று முழுதாக உடற்பரிசோதனை செய்து சான்றிதழைப் பெற்றுக் கொடுத்தேன். அவர்கள் என்னை ஆஸ்திரேலியா செல்ல அனுமதித்தனர். நான் 1953இல்; அவுஸ்திரேலியா சென்று 1956இல் திரும்பி வந்தேன்.

எப்படி அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது? காந்தி எப்படி அறிமுகமானார்? அப்போது உங்களுடைய அரசியல் பார்வை என்ன?

நான் ஆரம்பத்திலிருந்தே  காந்தியடிகள் பற்றிப் படித்துக்கொண்டு வந்திருக்கிறேன். எனக்கு அவருடைய எளிமை, உண்மை, தேசத்திற்காக அவர்  வாழ்க்கையில் செய்த தியாகங்கள் என்று எல்லாமே மனதில் பதிந்திருந்தது. அவர் என்னை மிகவும் கவர்ந்திருந்தார். அவரைப்பற்றிய புத்தகங்கள் நிறைய வாங்கிப் படித்திருந்தேன். மேலும் சத்திய சோதனை போன்ற புத்தகங்கள்  அவர்மீது எனக்கிருந்த மரியாதையை அளவற்றதாக  அதிகரித்தது. இவை அனைத்தும் எனக்குப் பிற்காலத்தில் உதவியாய் இருந்தன. நான் எனது இரண்டாவது  ஒப்பந்த காலத்தில் ஆபிரிக்காவில் உள்ள கென்யாவின்   மும்பாஸா நகரில்   நகர வடிவமைப்பாளராக வேலை பார்த்தேன். அங்கே ஒரு நல்ல நூலகம் இருந்தது. அந்த முனிசிபாலிட்டி நூலகத்தில் ஏராளமான இந்தியத் தத்துவ மரபுகள் அடங்கிய நூல்கள் இருந்தன. அவற்றை வாசித்த போது காந்தியடிகள் தொடர்பான அபிப்பிராயங்கள் எனக்கு அதிகரித்தன.

அரசியல் தொடர்பான சிந்தனையின் துவக்கம் இந்த வாசிப்புகளில் இருந்து தொடங்கியதா?

1976இல் தமிழர்களுக்காக எனது வாழ்வைச் செலவிட வேண்டும் என எண்ணினேன். தீவில் நிலவிய சூழல் என் நிம்மதியைக் குலைத்தது. அடிப்படையிலிருந்தே நாம் மாற வேண்டும். நமது தனித்துவத்தைப் பேண வேண்டும் என்றெல்லாம் எண்னினேன். அந்தக் காலத்தில் எனது வருமானம் நாற்பதாயிரத்திலிருந்து  ஐம்பதாயிரம் வரை வரும். உள்ளூரில் வேலை செய்யும் போது எனக்குப் பிடிக்காத வேலைகளைச் செய்ய மாட்டேன். என்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு என் இரண்டு சகோதரிகளுக்கும், சித்தி மாமா, அத்தை என அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுத்தேன். இப்போது அதெல்லாம் இல்லை. அவர்களும் சிங்கள இனவாத நெருப்பால்  துரத்தப்பட்டு வெளிநாடுகளுக்குச்  சென்று விட்டார்கள். பின்னர்  உலகம் முழுக்க சுற்றிப் பார்க்க ஆசைப்பட்டு நான் விரும்பிய இடங்களுக்குச் சென்று வந்தேன்.

நான் ஒரு ஆர்க்கிடெக். உலகெங்கிலும் கட்டிடக் கலை வளர்ச்சி எப்படி வளர்ந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்  அப்படிப் பயணம் செய்தேன். எனக்கு அப்போது பெரிய கனவு இருந்தது. அது திருகோணமலையில் கட்டிடக் கலையின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு. அதற்காக நல்லதொரு வரைபடத்தையும் நான் தயாரித்திருந்தேன். அதற்காக ஒரு நிகழ்ச்சியை துறைமுக வீதியில் ஏற்பாடு செய்து அதைத் துவங்கி வைக்க தந்தை செல்வாவையும் அழைத்திருந்தோம்.  என் கனவில் அது சிறந்த கட்டிடக் கலை நகரமாக  உருவாகும் என்று நான் ஆசைப்பட்டேன். துறைமுக வீதி முழுவதையும் நான் அப்படிக் கற்பனை செய்திருந்தேன். ஆனால் இப்போது அதெல்லாம் வெறும் நினைவுகளாகிப் போய் விட்டன.

அரசியலில் தீவிரமாக இறங்குவதற்கு காரணமாக சம்பவங்கள் ஏதாவது இருக்கின்றனவா?

வேலை ஒப்பந்தங்கள் முடிந்து ஊருக்கு வரும் போது மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்த போதும் அரசியல் வேட்கை எனக்குள் இருந்தது. அது பல நேரங்களில் என் நிம்மதியைக் குலைத்தது. சனங்கள் நிம்மதியற்று அலைந்து திரிந்ததும், அரசியலில் வெளிப்படையாக சிங்களர்கள் இனவாதத்தோடு நடந்து கொண்டதையும் அறிய நேரிட்ட போதெல்லாம் வேதனைதான் மிஞ்சும். 1947ஆம் ஆண்டு நான் முதன்முதலாக தந்தை செல்வாவின் பேச்சைக் கேட்டேன். அவர் பேசிய அத்தனை வார்த்தைகளும் எனது மனதில்  நிரந்தரமாகப் பதிந்திருந்தது. அவுஸ்திரேலியாவில் படித்துவிட்டு நான் 1956இல் திரும்ப்பி வந்தேன். அதற்கு மறுநாள்  செல்வநாயகம் முதலானோர் சத்தியாகரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அங்கு பொலிஸ்காரர்கள் நிறையப்பேர் குவிக்கப்பட்டு இருந்தனர் . எங்கும் பதட்டம் நிலவியது.  இலங்கையில் என்னுடன் பணியாற்றிய  சில சிங்களவர்கள் என் மீது அதிக விருப்போடு இருந்தார்கள். அவர்கள் என்னை வெளியில் போக  வேண்டாம்  என்று தடுத்தார்கள். ஆனால் நான் போயாக வேண்டும் என்று கூறி  வெளியில் வந்து பார்த்தேன். உண்ணாவிரதம் இருந்தவர்களை பொலிசார் கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். அந்தச் சம்பவங்கள் என்னை மேலும் இறுக்கமாக மாற்றியது. நான் நினைத்தது போலவே எல்லாம் நடந்தேறியிருந்தது. அனைத்தையும் நான் என் கண்ணாலே பார்த்தேன். எனக்குத் தெரிந்து   1947இல் தான் இந்த  இனவாதம்  வெளிப்படையாக   துவங்க ஆரம்பித்தது.

உங்களுக்கு  ஈழ விடுதலைப் போராட்டத்தில் எப்படி ஆர்வம் வந்தது?

அதனை நான் விடுதலைப் போராட்டம் என்று சொல்ல மாட்டேன். தமிழ் மக்களுக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்திற்கான போராட்டமாக அதை நான் காண்டேன். நான் இலங்கைக்கு  திரும்பி வந்த நாள் தொட்டே தமிழ் மக்களுக்கு தனித்துவமான வாழ்க்கையை  நாம் தேடித்தரவேண்டும் அது காந்தியத்தால்தான்  சாத்தியமாகும் என்று நம்பினேன். சிங்களவர்களிடமிருந்து விடுதலை வாங்கித்தர வேண்டும் என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. ஆனால் அந்த மக்கள் தங்களை  சுயமாக ஆளத் தெரிந்தவர்களாக மாற வேண்டும் என விரும்பினேன்.  கல்வியும், காந்தீயமும் அதை சாதிக்கும் என நம்பினேன்.

வவுனியாவில் நாவலர் பண்னை என்ற பெரிய பண்ணையை உருவாக்கினோம். சுமார் 10 ஏக்கர் பரப்பில் அதை ஒரு விவசாய கல்விப் பண்ணையாக உருவாக்கினேன்.  அந்த இடத்தை நானே தேர்ந்தெடுத்து  அதன் மூலம் தமிழ் இளைஞர்களுக்கு விவசாயத்தை அறிமுகம் செய்யலாம் என நினைத்து ஒரு டிராக்டரும் வாங்கினேன். அவர்களுக்கு வேண்டிய உணவு கொடுத்து வயலில் எப்படி விவசாயம் செய்வது என்று கற்றுக் கொடுத்தேன். ஆனால் இரண்டு வருடம் கழித்து அவர்கள் நெல்லை அறுவடை செய்து தங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள் (சிரிக்கிறார்)

ஆனாலும் நான் சோர்ந்து போகவில்லை. நானும் டொக்டர் ராஜசுந்தரமும் புதிய வழிகளை ஆராய்ந்தோம். ராஜசுந்தரத்தைப்போல ஒருவர் இல்லாவிட்டால் எங்களால் காந்தீயத்தை வளர்த்திருக்க இயலாது. நித்திரை கொள்ளாமல் இருக்கச் சொன்னால் நித்திரை கொள்ளாமல் விழித்திருப்பார், வண்டியை ஓட்டவேண்டும் என்றால்  உடனே வந்து உதவுவார், ரைப் செய்து கொடுக்க வேண்டும் என்றால் அதையும் விரைவாகச் செய்து கொடுப்பார். அவரது மனைவி  சாந்தியும் கணவரைப் போலத்தான். அவரும் எல்லா உடல் சுகக்கேடுகளையும் பரிவாய் குணப்படுத்துவார். காந்தியம் என்ற அமைப்பு பெரும் வெற்றி பெறக் காரணமாக அமைந்தவர்கள் ராஜசுந்தரம் தம்பதிகளே. அவரும் நானுமாக பண்ணையில் தங்கியிருந்து படிக்கும் ஆர்வம் உள்ளவர்களைத் தேடினோம். 12,15 இளைஞர்கள் வந்தார்கள். அவர்களுக்கென சிறிய குடில்களை அமைத்து அங்கேயே கல்வி கற்றுக் கொடுக்க உரிய ஆசிரியர்களையும் நியமித்தேன். ஒரு பக்கம் உழைப்பு, இன்னொரு பக்கம் கல்வி என்பது  காந்தியத்தின்  விதியாக இருந்தது. அதை நான் அவர்களுக்குப் போதித்தேன். அந்த வழிமுறைகள் பெரும் வெற்றியடைந்தன.

நோர்வே, ஹொலண்ட் நாட்டைச் சார்ந்தவர்கள் எனக்கு பணம் கொடுத்து உதவினார்கள்.அத்துடன்  நாங்களும் கொஞ்சம்  பணம் போட்டு 600 பெண் குழந்தைகளுக்கு 3 மாதம் என்ற கணக்கில் பயிற்சி அளித்து வந்தோம் . ஐந்து பிரிவுகளாக பாடத்தினை வகைப்படுத்தி கற்பித்தோம் அதில் முதலாவதாக காந்தியம். காந்தி யார் அவரது வாழ்க்கை எப்படி இருந்தது என்பனவற்றைக்  கற்பித்தோம். பிறகு கல்வி, மூன்றாவதாக உடல் நலம். மருத்துவர் சாந்தி  அதனைக் கவனித்துக்கொண்டார்.  அவர்  கணவர் மற்றப்  பொறுப்புகளை ஏற்றிருந்தார். குடும்பமாக அவர்கள் இந்தப் பணியினைச் செய்தார்கள்.

குழந்தைகளுக்கு படிப்பு பாரமாக இருந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம் . அவர்களுக்கென்று ஒரு பாடத்திட்டத்தை  நாங்கள் உருவாக்கினோம். ஒவ்வொரு ஊராகச்சென்று அங்கிருந்த தலைமை அதிகாரியை சந்தித்து எங்களது நோக்கத்தை தெரிவித்து அங்கிருந்து ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தோம். இப்படியாக 500 கிராமங்களிலிருந்து  500 பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்த பாடத் திட்டத்தினை படிப்பித்தோம். அந்த 500 பெண்களும் இங்கே அனைத்தையும் கற்றுக் கொண்டு  தங்களது ஊர்களுக்குத்   திரும்பி மற்றவர்களுக்கு அதைக் கற்பிப்பர்கள்.  வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை எங்கள் குடில்களில்  விட்டுச் செல்வார்கள். இதற்கென  ஒவ்வொரு ஊரிலும் ஓலையால் குடில்களை  அமைத்து அதிலே சுத்தமான  வெண் மணலைப் பரப்பி வைத்திருந்தோம். பயிற்சி பெற்ற பெண்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்கள். எங்களுக்கு நிதி உதவி வழங்கியவர்கள்  நாங்கள் என்ன வேலை செய்கிறோம் என்பதைப் பார்க்க வவுனியாவுக்கு வருவார்கள். ஒரு கட்டத்தில் காந்தியம் பரந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று 500 பள்ளிக்கூடங்களாக விரிவடைந்திருந்தது.

இதையெல்லாம் இலங்கை அரசும் அறிந்திருந்தது. நாங்கள் எங்கு கிணறு தோண்டுகிறோம், எங்கெல்லாம் எங்கள் பண்ணைகள் உள்ளன என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

காந்தியம் என்ற அறவழி அமைப்பில் ஈடுபட்டிருந்த நீங்கள்  எப்படி புளொட் என்னும் ஆயுதக் குழுவோடு இணைந்தீர்கள்?

புளொட் அமைப்பினுள் நான் எப்படி வந்தேன் என்றால் அதற்குச் சந்ததியார்தான் காரணம். புளொட்டில் உமா மகேஸ்வரன் தலைவராக இருந்தார். அவருக்கு உதவியாக சந்ததியார் இருந்தார். சந்ததியார் மிகவும் கெட்டிக்காரர். மிகச் சிறந்த படிப்பாளி, சிறந்த பேச்சாளர். அவர் பேசுவதை மணிக்கணக்கின்றி கேட்டுக் கொண்டிருக்கலாம். அவருக்குள் ஒரு கம்யூனிஸ்ட் இருந்தான். ஆனால் முட்டாள் கம்யூனிஸ்ட் மாதிரி பேச மாட்டார். முதலாளித்துவத்தையும் ஆதரிப்பார். கம்யூனிசத்தையும் ஆதரிப்பார், எங்கள் காந்தியத்தையும் ஆதரிப்பார். அதனால் அவரை எனக்குப் பிடிக்கும்.

புளொட்டுக்கு  அவரும் ஒரு தூணாக இருந்தார். சந்ததியாருடன்  இன்னொருவர் இருந்தார். அவரை புலிகள் அச்சகத்தினுள் வைத்து சுட்டுக் கொன்றார்கள். காந்தியத்திற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் சந்ததியார் செய்து கொடுத்தார். எங்களையும் புளொட் இயக்கத்தோடு சேர்க்க வேண்டும் என அவர் எண்ணியிருந்தார். நாங்களும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களோடு இணைந்தோம். அதே நேரம் ஏனைய அமைப்புகளை வீழ்த்தி புளொட் அமைப்பு முன்னுக்கு வர வேண்டும் என்று நினைத்து அவர்களோடு நாங்கள் சேரவில்லை.

ஆனால் அமைப்பினுள் சென்ற பின்னர் அனுபவங்கள் வேறு மாதிரி இருந்தன. துப்பாக்கி வழியே சகல கோட்பாடுகளையும் வென்று விடலாம் என்ற மூட நம்பிக்கை புளொட்டில் இருந்தது. அளவு கடந்து ஆயுதங்களை வழிபடும் மூட நம்பிக்கை எந்த அமைப்பையும் விட்டு வைக்கவில்லை. இது என்னைப் போன்றவர்களைப் பெரும்   பீதிக்குள்ளாக்கியது.

4

புளொட்டுடன் ஏற்பட்ட தொடர்பினால்தான் கைது செய்யப்பட்டீர்களா?

சந்ததியார் காந்தியம் அமைப்போடு நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவரே புளொட் அமைப்பிலும் செயற்பாட்டாளராக இருக்க நாங்களும் இலங்கை அரசின் வளையத்தினுள் கொண்டு வரப்பட்டோம். அதைவிடவும், நாங்கள் புளொட் அமைப்போடு நெருக்கமாக இருந்தது வேறு சிலருக்குப் பிடிக்கவில்லை, என்னையும் டொக்டர் ராஜசுந்தரத்தையும்  கூட பிரிக்க சிலர் திட்டமிட்டார்கள்.  நான் மிகவும் நேசிக்கும் டாக்டர் ராஜசுந்தரம் சீமெந்துப் பொருட்களைத் திருடியதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

ஆயினும் நான் தொடர்ந்தும் புளொட்டில் இயங்கி வந்தேன். அப்போது டொக்டர் ராஜசுந்தரத்திற்கு வவுனியாவில் எம்.பியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஒரு முறை நான் அதை எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படையாகச் சொன்னேன். அன்றைய தினத்தில் அவருக்கு அங்கும் நல்ல அறிமுகம் இருந்தது. ஆனால் எங்களைப்  பிடிக்காத ஒருவர் இதைப் பொலீசிடம் சொல்லி விட்டார்.

1983 ஏப்ரல் மாதம் என்னையும் டொக்டர் ராஜசுந்தரத்தையும் கைது செய்தார்கள். கொழும்பு வை எம் சி ஏ (லுஆஊயு)  வில் வைத்து இரவு 12 மணிக்கு என்னைக் கைது செய்து நான்காம் மாடி குற்றப்புலனாய்வு விசாரணை முகாமுக்குக் கொண்டு சென்று  ஓர் அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். அங்கே கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த ஒருவர் வந்தார். அவர் என்னிடம் “உங்களது அனைத்து வேலைகளும், திட்டங்களும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் அனைவரையும் நாங்கள் தீவிரமாகக் கண்காணித்த பின்னரே சிறைப் பிடித்தோம். ஆக எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி மாட்டிக்கொள்ளாதீகள். மாறாக என்ன செய்தீர்களோ அதைக் கூறிவிட்டு  குறைவான தண்டனையுடன்  விடுதலையாகுங்கள்”  என்று  கூறினார்.

காவல்துறையினர் எவ்வாறான விசாரணைகளை மேற்கொண்டார்கள்?

எனது வாக்குமூலத்தை அவர்கள் பதிவு செய்து கொண்டார்கள். அப்போது புன்னியா டி சில்வாதான் சி.ஐ.டி. பெரியவராக இருந்தார். நான்காம் மாடியில்  என்னுடன் இன்னொருவனும் இருந்தான். அவனுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவன் எம்.பி.ஏ படித்துக்கொண்டிருந்தான். அவனையும் எங்களைப் போல அங்கிருந்த மேசையின் மீதே படுத்துறங்கச் சொன்னார்கள். ஆனால் அவன் மிகவும் வசதி படைத்தவன். யாருக்கோ தொலைபேசிமூலம் பேசி, அவனது ஆட்கள் உயர் அதிகாரிகளோடு பேசி அவனை அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

என்னிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக சி.ஐ.டி. அதிகாரியின் உதவியாளரை அனுப்பி வைத்திருந்தனர். அவர் அதிகாலையிலேயே வந்து என்னிடம் வாக்குமூலம் வாங்க ஆரம்பித்தார். எனது வாழ்க்கையில் நடந்த அனைத்துச் சம்பவங்களையும்  கூறினேன். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிக்கே தலை சுற்ற ஆரம்பித்தது. இத்தனை படித்தவர், உலகத்தினைச் சுற்றி வந்தவர் நைஜீரியா கென்யா போன்ற இடங்களில் பணியாற்றியவர் இப்படி சாரத்துடன் தன்முன் அமர்ந்து வாக்குமூலம் கொடுப்பதை எண்ணிச் சற்றுக் கலங்கினார். பிறகு அனைத்தையும் பதிவு செய்தபின்னர், அதனை எழுதி சி.ஐ.டி. உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தார். அதனை முழுதாக வாசித்துப் பார்த்து விட்டு புன்னியா டி சில்வா மறுநாள் காலையில் என்னைப் பார்க்க வந்தார்.  என்னிடம் ஒன்றும் பேசாமல் கை குலுக்கிவிட்டு  “நீங்கள் குற்றமற்றவர் என்று எனக்குத் தெரியும். நான் எல்லா அதிகாரமும் உள்ளவனாக இருந்தால், உங்களை என்னோடு காரில் வை.எம்.சி.ஏவிற்கு அழைத்து சென்று விட்டு விட்டு  வந்திருப்பேன். ஆனால் மந்திரியின் உத்தரவின் பேரில் உங்களை நான் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது.” என்று கூறினார்.

பிறகு என்னையும் டாக்டர் ராஜசுந்தரத்தையும்   பனாகொடை இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள இராணுவ அதிகாரிகளிடம் என்னை அடிக்க வேண்டாமெனவும் அவர் ஒன்றும் அறியாதவர் என்றும் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சென்றதுதான் தாமதம் எங்களைச் சுற்ற இராணுவ வீரர்களை நிற்க வைத்து விட்டு பள்ளிச் சிறுவர்களை அழைத்து வந்து எங்களை வேடிக்கைப் பொருட்களைப் போல அவர்களுக்குக் காட்டினார்கள். வேடிக்கை பார்க்க நிறையப் பேர் கூடிய நிலையில் என் உடுப்புகளை அவிழ்த்து விட்டு  நான் சற்றும் எதிர்பாராத நேரத்தில் என் நெஞ்சில் ஒருவன் குத்தினான். நான் வலியில் அப்படியே சுருண்டு கீழே விழுந்து விட்டேன். வலியிலும் பயத்திலும் சிறுநீர் கழித்து விட்டேன். கீழே கிடந்த என் ஆடையும் நனைந்து விட்டது. பின்னர் அந்த சிறுநீரால் நனைந்த ஆடையை உடுத்தச் சொல்லி என்னையும் டொக்டர் ராஜசுந்தரத்தையும்  வெலிக்கடை சிறையில்  அடைத்தார்கள். அங்கு ஏராளமான பொடியன்களை அடைத்து வைத்திருந்தார்கள். அவர்கள் எம்மைக் கண்டதும் நாங்கள் உங்களைக் காப்பாற்றுவோம் என்று சொன்னார்கள். சில சாரங்களை எங்களுக்குக் கொடுத்து உதவினார்கள்.

சிறையில் நடந்த சித்திரவதைச்  சம்பவங்களையெல்லாம் நான் கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். ஏனெனில் மக்களுக்கு இந்த விஷயங்கள் தெரிய வேண்டும். இப்படியெல்லாம் கூட கஷ்டப்பட்டார்களா?  என்று அனைவருக்கும் தெரிய வேண்டும். ஆகவேதான் கூறுகிறேன்.  சிறையில் சில நேரங்களில் நான்கு காலில் சென்று சாப்பாட்டினைக் கொண்டு வரவேண்டும்  எனச் சொல்லி  அதனை மேற்பார்வையும் செய்வார்கள். அப்போது அங்கே இன்னொரு  அதிகாரி வந்தான். அவன் எங்களுக்கு அன்று ஒரு பரீட்சை வைக்கப்போவதாகக் கூறி எங்களை முழங்காலில் இருக்கச் சொல்லி சாப்பாடுத்தட்டினை வேறொரு மூலையில் வைத்துவிட்டு யார் நான்கு கால்களில் வேகமாகச் சென்று  எடுத்துக்கொண்டு வருகிறீர்களோ அவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது என்று கூறினான். நாங்கள் எதிர்க்க வலுவில்லாமல் அவர்களுக்கு கேளிக்கை பொருளாக மாறி வாழ்ந்து கொண்டிருந்தோம். இதெல்லாம் நடந்த  1983ஆம் ஆண்டு.  எனக்கு வயது 63 அல்லது 65 இருக்கும் என்று நினைக்கிறேன்.

கதவை உடைத்துத் திறந்து உள்ளே வந்தவர்கள்  டொக்டர் ராஜசுந்தரத்தை  வெளியில் இழுத்துப்போட்டு அவர் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.  பின்னர் அறையின் ஓரத்திற்கு எங்களை ஒதுங்கச் சொல்லி சுடுவதற்காகத் தயாரானார்கள்

வெலிக்கடைச் சிறையில் நடந்தேறிய படுகொலைகளின் வாழும் சாட்சி நீங்கள். அப்படியெல்லாம் சிறையில் நடக்குமென்று முன்னரே எதிர்பார்த்தீர்களா?

இல்லை. நான் நினைக்கவில்லை. சித்திரவதைகள் இருந்ததுதான். ஆனால் இப்படி ஒட்டு மொத்தமாக கொலை செய்வார்கள் என்று நான் அப்போது நினைக்கவில்லை. 1983 யூலை 25இல் கொழும்பில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். சிங்கள வெறியர்கள் சிறைச்சாலையின் கீழ் தள அறைகளுக்குள் புகுந்தார்கள். நாங்கள் மேல் மாடியில் அடைக்கப்பட்டிருந்தோம். சிறை அதிகாரிகள் பூட்டுக்களைத் திறந்து  சிங்களக் கைதிகளைத் திறந்து விட்டார்கள். அவர்கள் வெறியோடு தமிழர்கள் இருந்த ஒவ்வொரு அறையாகத் தாக்கினார்கள்.

ஒரே நாளில் 35 பேர் கொல்லப்பட்டார்கள். குட்டி மணி, ஜெகன், தங்கதுரை போன்ற போராளிகள் எல்லாம் முதல் நாள் கொல்லப்பட்டார்கள். பின்னர் இரவாகி விட்டதால் நிறுத்தினார்கள். ஆனால் காயமடைந்தவர்களுக்கு வைத்தியம் பார்க்காதபடியால், ரத்தம் வீணாகி பல இளைஞர்கள் இறந்து கொண்டிருந்தார்கள்.

மறு நாள் 26 ஆம் தேதி சிறை அமைதியாக இருந்தது. 27ஆம் தேதி விடிந்ததும் மீண்டும் தாக்கத் தொடங்கினார்கள். எங்களைப் போன்றவர்களை முதல் மாடியில் அடைத்து வைத்திருந்தார்கள். நாங்கள் எட்டு, ஒன்பது பேர் வயதானவர்கள்  சுமார் 40 அடி அகலமுள்ள அறையில் முதல் மாடியில்  இருந்தோம். அதில் டொக்டர்  ராஜசுந்தரம், பாதிரியார்   சின்னராசா, ஆகியோர்  அடைக்கப்பட்டிருந்தோம். முதல் நாளே  டொக்டர் தர்மலிங்கம் – அவருக்கு 75 வயதிருக்கும், – அவர் எங்களிடம் “யாரும் இந்த அறையை உடைத்து  சண்டை போட வந்தால் நாமும் சண்டை போட்டுதான் சாகவேண்டும்” என்று கூறினார். எப்படியும் நாமும் கொல்லப்படுவோம் என்றார் அவர்.
மறுநாள் அவர் கூறியபடியே  எங்கள் அறைக்கு வந்தார்கள். ஆனால் எங்களின் அறை வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்தது.  எங்களது பாதுகாவலர்  பூட்டிவிட்டு சாவியைக் கொடுக்காமல் போய்விட்டார் .  அவர்கள்  பூட்டை உடைக்க ஆரம்பித்தார்கள். அப்போது எங்களுடைய ஆட்கள் அவர்களை எதிர்த்துப் போராடினார்கள் . டாக்டர் ராஜசுந்தரத்திற்கு சிங்களம் நன்கு தெரியும் அவர் அவர்களிடம் “எங்களை ஏனப்பா இப்படிக் கொல்கிறீர்கள்,  எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. நாங்கள் ஈழத்துக்கு ஆதரவாகத்தான் உள்ளோம், ஆனால் நாங்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை.”  என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்தக் கதவினுடைய பூட்டு உடைந்தது.

எங்களை அடிப்பதற்காகக் கொண்டுவந்த பொல்லுகளைப் பிடித்து தடுத்துக் கொண்டு டொக்டர் தர்மலிங்கம் நின்றார். அவருக்கு அந்த வயதில் இருந்த பலம் சொல்லில் அடங்காதது.  கதவை உடைத்துத் திறந்து உள்ளே வந்தவர்கள்  டொக்டர் ராஜசுந்தரத்தை  வெளியில் இழுத்துப்போட்டு அவர் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.  பின்னர் அறையின் ஓரத்திற்கு எங்களை ஒதுங்கச் சொல்லி சுடுவதற்காகத் தயாரானார்கள். அந்த நிமிடம் என் மனதில், இப்படிச் சாவது பெருமையானதுதான் என்று தோன்றியது.

அந்த நேரம் கீழேயிருந்து ஒரு கொமாண்டர், அவர் ஒரு முஸ்லீம் – எங்களை கீழே அழைத்து வரும்படி உத்தரவிட்டார். எங்களைப் பாதுகாப்பாக கீழே குனிந்து நடக்கும்படி சொல்லி, ஒரு திறந்த பாதை வழியாக அழைத்துச் சென்றார்கள். வழியில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை நான் கண்டேன். அதில் பலருடைய உயிர் பிரியாமல் உடல் துடித்துக் கொண்டிருந்தது. அவர்கள் சாகட்டும் என்று அப்படியே விட்டிருந்தார்கள். பின்னர் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று லொறியொன்றில் ஏற்றி குப்புறப்படுக்கச் சொன்னார்கள். அப்படித்தான் நாங்கள் மட்டக்களப்புச் சிறைக்குப் போனோம்.

நான் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். அங்கும் ஏராளமான பொடியன்கள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்க ரொம்ப வேதனையாக இருந்தது.

மட்டக்களப்பு சிறை உடைப்புப் பற்றிச் சொல்லுங்கள்..

ஆமாம். அந்தச் சிறை உடைப்பை புளொட் மட்டும் செய்தது என்று சொல்ல முடியாது. மற்றைய போராளிகளும் இணைந்துதான் அதைச் செய்தோம். எங்களுக்கு இந்தியாவுடைய ஆதரவு அப்போது இருந்தது. பொதுவாகவே சிறையிலிருந்து எங்களை மீட்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது.  பலரும் அதற்கு உதவ மட்டக்களப்பு சிறையை உடைத்து எங்களை மீட்டார்கள். அதில ஒரு விசயத்தைச் சொல்ல வேண்டும். சிறை உடைப்பின் போது, அங்கிருந்த கைதிகளின் அறைகளைத் திறந்த நேரம், இன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ன செய்தார் என்றால், சிறையில் திருட்டு, பாலியல் குற்றச்சாட்டுக்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாதாரண கைதிகளையும்  திறந்து விட்டுவிட்டார்.

சிறையை உடைத்து எல்லோரையும் மீட்டு விட்டார்கள் என்றதும் பெரும் எழுச்சி தமிழ் மக்களிடம் காணப்பட்டது.  இயக்கங்களுக்கிடையில் அது உரிமைகோரல் போட்டியாகவும் இருந்தது.

மட்டக்களப்பிலிருந்து யாழ்பாணம் போக சுமார் இருபது நாட்களுக்கும் மேலானது. அங்கிருந்து படகு மூலம் ராமேஸ்வரம் தப்பிச் சென்றோம். அப்போது தமிழக மக்களும் போராளிகளும் எங்களை வரவேற்ற நினைவு இன்னமும் என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. ஆனால் 1978இல் ஆரம்பித்த காந்தீயம் அமைப்பின் முதுகெலும்பாக இருந்த டொக்டர் ராஜசுந்தரம் இல்லை என்பதை நினைக்கும் போது மிகுந்த தனிமையை உணர்ந்தேன்.அவரும் அவரது மனைவி காராளசிங்கம் சாந்தியும் எப்பேர்ப்பட்ட மனிதர்கள். மிகவும் சுகபோகமாய் வாழ்ந்த லண்டன் வாழ்வை உதறிவிட்டு காந்தியம் அமைப்பிற்காக ஈழத்திற்கு வந்தவர்கள்.  மலையக மக்கள் வாழ்வில் அறிவொளியையும்  விவசாயச் சேவைகளையும் செய்த 500 குடிகளைக் கொண்ட எங்கள் காந்தியம் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டு டொக்டர் கொல்லப்பட நான் தமிழ்நாட்டிற்கு வந்து இறங்கியிருந்தேன்.

தமிழ்நாட்டில் புளொட்  அமைப்பில் உங்கள் பணி என்ன. உமா மகேஸ்வரனுடன் உங்களுக்கு எப்படி முரண்பாடு ஏற்பட்டது?

அந்தக் காலத்தில் தமிழக மக்கள் போராளிகளை மிகவும் மதித்தார்கள். எங்கு சென்று ஈழப் போராளி என்றாலும் ராஜ உபசாரம்தான். இந்திய அரசும், மாநில அரசும் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டதால்  இங்கு நல்ல சௌகரியத்துடன் வாழ்ந்தோம். ஆனால் எந்நேரமும் எங்களுக்குள் விடுதலை வேட்கை மட்டுமே இருந்தது. அது ஒன்றுதான் எண்ணம். அது பற்றியே சிந்தித்தோம். நான் புளொட்டுடன்  சில மாதங்கள்தான்  வேலை செய்தேன். நான் வந்தவுடன் புளொட்டில் உள்ள உயர்மட்ட ஆட்கள் என்னிடம் அனைத்து முக்கியமான வேலைகளையும் தந்தனர் .  நீங்கள்தான் நிர்வாக வேலைகளைப் பார்க்க  வேண்டும் என்று கூறினர். கணக்கு வழக்குகள், பத்திரிகை, தொலைத் தொடர்பு, போன்ற வேலைகள் எனக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் புளொட்டில் இணைந்த சில மாதங்களிலேயே எனக்கு அது சரிவரவில்லை.  ஒரு குழுவை அமைத்து அவர்கள்தான் முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு தனி நபர் சர்வாதிகாரி போல இருந்து கொண்டு முடிவுகளை எடுக்க முடியாது என்று முகுந்தனிடம் சொன்னேன். முகுந்தன் இதைக் கேட்டு அமைதியாக இருந்தார். பின்னர் நான் உமா மகேஸ்வரனுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு என் அறையில் இருந்த ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்த போது உமா  எங்கே செல்கின்றீர்கள் எனக் கேட்டார். நான் எல்லாவற்றையும் சொன்னேன். பின்னர் கடும் சினங்கொண்டவராக அவர் சொன்னார் “உமக்கு எப்படி பாடம் படிப்பிக்க வேண்டும் என எமக்குத் தெரியும்”

நான்  வெளியேறி அந்த நகரத்தின் தெருவழியாக நடக்கத் துவங்கினேன்.

சந்தியார் எப்பேர்பட்ட மனிதன். எளிமையிலும் எளிமையானவன். இடைவிடாது மக்களைப் பற்றியும் ஏழைகளைப் பற்றியும் சிந்தித்த அவனை  அவர்கள் கொலைசெய்திருக்கக் கூடாது.

சென்னையில் உங்களைக் கடத்தியவர்கள் புளொட் அமைப்பினரே என்று அறிந்துள்ளோம்…

அண்ணா நகர்  பேருந்து டெப்போ பக்கத்தில் சென்று கொண்டிருந்த என்னை காரில் வந்து தூக்கிச் சென்றார்கள். இப்போது கோயம்பேடு சந்தை, பேருந்து நிலையம் என எந்நேரமும் பரபரப்பான இடமாக இருக்குமிடம் அந்நாட்களில் மனித நடமாட்டம் அற்ற காடு போல இருக்கும். அந்தப் பக்கம் என்னைக் கொண்டு போனதும்  நான் உரக்கக் கத்தினேன். எனது குரலைக்கேட்ட அந்த ஓட்டுனர் “யாரையடா  பிடித்து வந்திருக்கிறியள்  டேவிட் ஐயாவையா” என்று  கேட்டு எனது கட்டுகளை அவிழ்த்து விட்டான். உண்மையில் அவர்கள் வேறு யாரையோ பிடிக்க வந்து அடையாளம் தெரியாமல் என்னைப் பிடித்துச் சென்று விட்டார்கள். உண்மையில் என்னைப் பிடிப்பதும் அவர்களுக்கு ஒரு நோக்கமாக இருந்த போதிலும், அது அவசரத் தேவையாக இருக்கவில்லை. ஒரு வேளை அவர்கள் சந்ததியாரைப் பிடிக்க வந்திருக்கலாம். பின்னர் நான் இரவு ஒரு மணியளவில் விடுவிக்கப்பட்டேன்.

ஒரு வழியாக அறைக்கு வந்து சேர்ந்த போது சந்ததியார் எனக்காக அங்கே காத்திருந்தார். நான் அவரை எச்சரித்தேன். உன்னைப் பிடிக்க வந்துதான் தெரியாமல் என்னைப் பிடித்துச் சென்று விட்டார்கள். நீ கவனமாக இரு என்று எச்சரித்தேன். நான் திரும்பி வந்த மூன்றாம் நாள் சந்ததியாரைப் பிடித்துச் சென்றார்கள். அவன் என் அறைக்கு அடிக்கடி வருவான் என்றாலும் அவன் தங்கியிருந்த இடம் வேறு. அதை ரகசியமாக அறிந்து அங்கு போய்தான் அவனை பிடித்துச் சென்றார்கள். என்னையும் அழைத்து விசாரித்தார்கள். நான் விசாரிக்கப்படும் வரை சந்ததியார் உயிரோடுதான் இருந்தார். பின்னர் அவருக்கு என்னவானது என்றே  தெரியவில்லை. வல்லநாட்டிலோ, ஒரத்தநாட்டிலோ கொண்டு போய் அவர்கள்  அவனை கொன்றிருக்கக் கூடும். சந்தியார் எப்பேர்பட்ட மனிதன். எளிமையிலும் எளிமையானவன். இடைவிடாது மக்களைப் பற்றியும் ஏழைகளைப் பற்றியும் சிந்தித்த அவனை அப்படி அவர்கள் கொலை செய்திருக்கக் கூடாது.

பிரபாகரனின் அரசியலில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவரை நான் சிறந்த தலைவராகப் பார்க்கிறேன். அன்றைக்கிருந்த போராளிக் குழுக்களில் அவர் மட்டும்தான் தனித் தமிழ் ஈழத்திற்காக எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை

அதன் பின்னர் அமைப்புகள் எதிலும் செயற்படவில்லையா?

ஆம். அனுபவங்கள் அப்படியாகி விட்டன. நாங்கள் பொறுப்பற்றவர்களாக மனித உயிர்களின் பெறுமதி தெரியாதவர்களாக ஆனோம். எதிரிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய நாங்கள் எங்களின் சாதாரணமான கருத்து முரண்களை துப்பாகியால் எதிர்கொண்டோம். ஒரத்தநாட்டிலும், சென்னையிலும் எத்தனை எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள். எதிரிகளிடமிருந்து உயிர் தப்பிய சூழலில் ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்திடமிருந்தும் உயிர் தப்ப வேண்டி இருந்தது. எல்லோரும் புலிகளின் கொலைகளை மட்டும் பேசுவார்கள். ஆனால் எல்லா இயக்கங்களும் அப்படித்தான் இருந்தது. புலிகள் எப்போதுமே பிறத்தியாரின் நெருக்குதலுக்கு அஞ்சாமல் சுய இயக்கமாக செயல்பட்டார்கள். இந்தியாவின் சொல்வழி கேட்டோ, அல்லது வேறு தலைவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவோ இருக்கவில்லை. என்னைக் கேட்டால்  பிரபாகரனின் அரசியலில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவரை நான் சிறந்த தலைவராகப் பார்க்கிறேன். அன்றைக்கிருந்த போராளிக் குழுக்களில் அவர் மட்டும்தான் தனித் தமிழ் ஈழத்திற்காக எத்தகைய சமரசங்களையும் செய்து கொள்ளவில்லை. ஆனால் அவர்களும் அரசியல் கொலைகளைச் செய்தார்கள். இதனால் பெரும் சோர்வுக்குள்ளாகி அமைப்புகளிலிருந்து ஒதுங்கியிருந்தேன். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா நான் பிரபாகரனை இதுவரை சந்தித்ததே இல்லை.

தமிழகத்தில் வாழ்க்கை எப்படிப் போகிறது?

161983இல்  இங்கு வந்தேன். வந்த புதிதில் போராளிகள் என்றால் பெரும் மரியாதை. மக்கள் எல்லாப் போராளிகளையும் நாயகர்களாகப் பார்த்தார்கள். இவர்கள் இங்குள்ள சனங்களிடமும் தங்களின் சாகசங்களைக் காட்டினார்கள். அது பல பிரச்சனைகளை இங்கே உருவாக்கினாலும். மக்களிடம்  போராளிகளுக்கென்று செல்வாக்கிருந்தது. ஆனால் குறிப்பாக ராஜீவ் கொலைக்குப் பிறகு எல்லா நிலைமைகளும் மாறிப் போனது. மரியாதை போனதென்று இல்லாமல், மக்கள் போராளிகளை அச்சத்தோடு பார்த்த காலமும் வந்தது.

ஒரு சில இயக்கங்கள் தவிர்த்து இங்குள்ள அரசியல்வாதிகள் தங்களின் தேவைகளுக்கு ஏற்றது போல ஈழ மக்களின் பிரச்சனைகளைப் பேசுகிறார்கள். துரோகமும், வஞ்சகமும் சூதுமான அரசியல் களம் தமிழகத்தினுடையது. பல நேரங்களில் இங்கு வாழ்வதை விட சிங்களவன் கையால் குண்டடி பட்டு செத்துப் போயிருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது.

நான் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வரும் வருவாயைக் கொண்டு வாழ்ந்தேன். அது எனக்குப் போதுமானதாக இருந்தது. சுயமரியாதையாக வாழ பணம் தேவையில்லை. ஆசைகளைச் சுருக்கிக் கொண்டு வாழ்ந்தாலே போதும். இங்கு வந்த பின்னர் பெரியாரை வாசித்தேன். அவர்  தமிழக மக்களின் தன்மானத்திற்காக போராடிய தன்னிகரில்லாத தலைவர். ஆனால் அவர் பெயரை பயன்படுத்துகிறவர்கள் அவரைப் போல உண்மையானவர்கள் இல்லை.

ஒரு முறை  திருமங்கலம் காவல் நிலையத்தில் ஈழ அகதிகளுக்கான கிளியரிங் சான்றிதழுக்காகச் சென்றேன். பல மணி நேரம் என்னைக் காக்க வைத்த பின்னர், என் கையில் இருந்த பேப்பரை கிழித்து வீசினார் அந்த இன்ஸ்பெக்டர். இதுதான் தமிழகம். அரசியல்வாதிகள் சும்மா மேடையில் பேசுவார்கள். ஆனால் எங்களின்  நிலை இதுதான். இங்கே ஆறு விதமான அகதிகள் உள்ளனர். அவர்களின் திபெத் அகதிகள் மிக உயர்ந்த நிலையில்  உள்ளனர். ஆனால் ஒரு ஒழுங்கான கட்டிடம் கூட ஈழ சனங்களுக்கு இல்லை. சாக்குப் பைகளால் மூடப்பட்ட கொட்டகைகளுக்குள் முகாம் என்று வாழ்கிறார்கள். என்னைப் போல வெளியில் இருப்போர் நிலமையும் கொடுமைதான். ஒவ்வொரு ஆறு மாதமும் பொலிசாரிடம் சான்றிதழ் பெற்று,  வாடகைக்கு இருக்கும் வீட்டு ஓனரிடம் கடிதம் பெற்று குடிவரவு அதிகாரியிடம் சென்று கொடுத்தால் தங்கியிருப்பதற்கான அனுமதியை அடுத்த ஆறு மாதத்திற்கு நீட்டிப்பார்கள். இப்படி ஒவ்வொரு ஆறு மாதமும் செய்ய வேண்டும். இதற்கு நாய் படாத பாடு படவேண்டும். 90 வயதில் ஓவ்வொரு முறையும் நான் இதற்காக அலைக்கிறேன்.

ஆனாலும் நான்  இங்கும் பல உருப்படியான காரியங்கள் செய்தேன். பெரியார் தொடர்பாக எழுதினேன். மிக முக்கியமாக  Tamil Eelam Freedom Struggle  என்ற நூலை எழுதினேன். என்னைப் பற்றியும் சிலர் எழுதியிருக்கிறார்கள்.

ஈழத்திற்கு செல்ல வேண்டும் என்ற நினைக்கிறீர்களா?

நான் விரும்பினாலும் இங்கிருந்து செல்ல முடியாது. ஏனென்றால் எனக்கு பாஸ்போர்ட் கிடையாது. மேற்குலக நாடுகளில் வாழும் அகதிகளைப் போன்ற உரிமைகளை நாங்கள் அனுபவிக்கவில்லை. தவிரவும் ரெட் புக் எனப்படும், அபாயமானவர்கள் பட்டியலில்  தொண்ணூறு வயதான என்னையும் வைத்திருக்கிறார்கள். என்றாலும் நான்  நிச்சயம் இலங்கைக்குச் செல்ல மாட்டேன். அது என் மக்களைக் கொன்றொழித்த பூமி. ஒடுக்கப்பட்டு வாழ்விழந்த மக்களின் நிலையை இந்த வயதில் என்னால் தாங்க இயலாது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124786/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முக்கிய காலகட்டங்களின் நேரடிச் சாட்சியாக விளங்கிய டேவிட் ஐயாவுக்கு அஞ்சலிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் ஐயாவுக்கு அஞ்சலிகள்.

அஞ்சலிகள் ... உங்கள் தியாகங்கள் வீண் போகாது, ஈழத்தமிழனின் வரலாற்றில் என்றும் இருப்பீர்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

மனமுருகும் அஞ்சலிகள் ஐயாவுக்கு

இந்த தலைமுறை மறந்து போன உன்னத போராளி டேவிட் ஐயா அவர்கள். வீரம் செறிந்த வன்னி மண்ணினை செதுக்கிய காந்தீயவாதி டேவிட் ஐயா.

மரணம் காலம் எமக்கு விதிக்கும் இறுதி கட்டாயம். டேவிட் ஐயாவின் மரணத்திலும் மகிழ்ச்சி தரும் விடயம், அவர் மிக நேசித்த அந்த மண்ணிலேயே மரணித்தது.

சென்று வாருங்கள் ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான நேர்மையான போராளி  டேவிட் ஐயாவுக்கு வீர அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் ஐயாவுக்கு அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவிற்கு அஞ்சலிகள் 

  • தொடங்கியவர்
கிளிநொச்சியில் காலமானார் முதுபெரும் ஈழப் போராளி காந்தியம் டேவிட் ஐயா!
 

 

 கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கு வகித்த மூத்த போராளியும் ஈழத்து காந்தியவாதியுமான டேவிட் ஐயா கிளிநொச்சியில் (வயது 91) நேற்று காலமானார்.

யாழ்ப்பாணத்தில் ஊர்க்காவற்றுறை, கரம்பொன் என்ற இடத்தில் 1924ஆம் ஆண்டு பிறந்தவர் டேவிட் ஐயா. 1953ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் பி.ஆர்க் பட்டப்படிப்படை முடித்தார்.

Veteran Eezham freedom fighter Gandhiyam David Ayya passes away

அதனைத் தொடர்ந்து மிகச் சிறந்த ஆர்க்கிடெக்டாக லண்டன், கென்யா உள்ளிட்ட பல நாடுகளில் நகரங்களின் கட்டுமானப் பணிகளில் பங்கேற்றவர். கென்யாவின் மொம்பாசா நகரம் கட்டமைக்கப்பட்ட போது அதன் தலைமை ஆர்க்கிடெக்காக இருந்தவர் டேவிட் ஐயா.

1979ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய டேவிட் ஐயா, காந்தீயம் என்ற அமைப்பை உருவாக்கினார். இலங்கையின் மலையகத்தில் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை ஈழத் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் குடியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

 

பின்னர் தமிழீழ விடுதலைக்காக ஆயுதமேந்திய உமா மகேஸ்வரன் தலைமையிலான ப்ளாட் அமைப்புடன் டேவிட் ஐயா இணைந்து பணியாற்றினார். 1983ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

அப்போதுதான் உலகை உலுக்கிய வெலிக்கடை சிறை படுகொலைகள் நடந்தேறின. வெலிக்கடையில் தமிழ் அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணி, ஜெகன் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் டேவிட் ஐயா உயிர் தப்பினார். பின்னர் மட்டக்களப்பு சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

ஈழத் தமிழர் வரலாற்றில் புகழ்பெற்ற மட்டக்களப்பு சிறை உடைப்பு சம்பவத்தின் போது டேவிட் ஐயாவும் சிறையில் இருந்து தப்பி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து ராமேஸ்வரத்துக்கு அதிகயாக வந்தார். மிகப் பெரிய கல்வியாளராக இருந்த போதும் ஒரு அகதி வாழ்க்கையை தமிழகத்தில் வாழ்ந்தார்.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து அவர்களின் Periyar Era என்ற ஆங்கில ஏட்டில் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக பல்வேறு ஆங்கில கட்டுரைகளை எழுதினார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இலங்கைக்கு அவர் திரும்பியிருந்தார். அங்கு கிளிநொச்சியில் உடல்நலக் குறைவால் நேற்று அவர் காலமானார். அவரது உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த  இரங்கல்கள்... பெரு மதிப்புக்குரிய ஐயாவுக்கு...!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த  இரங்கல்கள்... பெரு மதிப்புக்குரிய ஐயாவுக்கு...!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அருமையான போராளியைத் தமிழ்சமூகம் தெருவில் வீசிஎறிந்த வரலாற்றை யாராலையும் மாற்றமுடியாது செய்துவிட்டது இவரது மறைவு. புலிகள் இவரை ஒதுக்கித்தள்ளியதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. 

இனிமேல் அவரது மறைவுக்குப்பின்பு அனைத்து அரசியல்வாதிகளும் பட்டுப்பீதாம்பரம் சாத்துவார்கள்.

 

இன்றும் இலங்கைத்தீவின் தமிழர்பிரதேசங்களில் ஆக்கிரமிப்பை கொஞ்சமாவது தடுக்கக் கண்விழித்திருக்கின்றதென்றால் இந்த மகானது கைங்கரியமே.

வீரவணக்கம் செய்யப்படவேண்டிய எமதுதேசத்தில் முதல்குடிமகன்.

வீரவணக்கம் ஐயா.

இவர் நிச்சயம் கர்த்தருக்குள் உறைவார். 

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்,ஐயாவுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

 மண்ணில் வாழ்ந்து செல்லும் நண்பா, விண்ணில் இறைவன் இன்பம் தருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இவரை ஒதுக்கி தள்ளினார்களா? 

ஒரு அருமையான போராளியைத் தமிழ்சமூகம் தெருவில் வீசிஎறிந்த வரலாற்றை யாராலையும் மாற்றமுடியாது செய்துவிட்டது இவரது மறைவு. புலிகள் இவரை ஒதுக்கித்தள்ளியதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. 

இனிமேல் அவரது மறைவுக்குப்பின்பு அனைத்து அரசியல்வாதிகளும் பட்டுப்பீதாம்பரம் சாத்துவார்கள்.

 

இன்றும் இலங்கைத்தீவின் தமிழர்பிரதேசங்களில் ஆக்கிரமிப்பை கொஞ்சமாவது தடுக்கக் கண்விழித்திருக்கின்றதென்றால் இந்த மகானது கைங்கரியமே.

வீரவணக்கம் செய்யப்படவேண்டிய எமதுதேசத்தில் முதல்குடிமகன்.

வீரவணக்கம் ஐயா.

இவர் நிச்சயம் கர்த்தருக்குள் உறைவார். 

  • கருத்துக்கள உறவுகள்

 

டேவிட் ஐயாவின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..!

 

Rest-In-Peace-My-Friend-14.jpg

 

டேவிட் ஐயாவின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.......

சேராத  இடம் சேர்ந்து தொலைந்து போனவர்களில் ஒருவர் .அஞ்சலிகள் ஐயா .

12144698_1051979111501176_64864609976799

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.