Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடுவிலை நாலு நாளைக்காணோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடுவிலை நாலு நாளைக்காணோம்

 

செந்தக் கதை சோகக்கதை. ஒரு பேப்பரிற்காக  சாத்திரி.. :( :( :( :(

 

17 .08.13 ந்திகதி செவ்வாய்க்கிழைமை வழைமைபோல வேலை முடிந்து மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வருகிறேன் அன்று சரியான வெய்யிலும் அடித்தக் கொண்டிருந்தது. மனிசி வீட்டிற்கு பின்னால் உள்ள சிறிய பூந்தோட்டத்தில் வேண்டாத செடி புற்களை வெட்டித் துப்பரவாக்கி முடித்தவர் சாப்பிடும்போது லேசாய் தலை வலியோடு தலை சுற்றுவதாய் சென்னார். சரியான வெய்யில்  வெய்யிலுககை நின்று வேலை செய்ததால் தலை சுத்தலாம் ஒரு குளிசையை போட்டுவிட்டு படு என்றுவிட்டு சாப்பிட்டு விட்டு மீண்டும் வேலைக்குப் போய் விட்டேன்.இரவு பதினொரு மணி வீடு திரும்பியிருந்தேன் படுக்கையிலேயே இருந்தவர்  தலைச்சுற்றல் நிற்கவில்லையென்கிறார். வைத்திய சாலைக்கு போகலாமா என்று நினைத்தாலும் தலைச்சுத்துக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்கு போறதா என்று நினைத்துவிட்டு  பேசாமல் படுத்து விட்டேன் சாமம்மதாண்டி  இரண்டு மணியளவில் என்னை நித்திரையால் எழுப்பி என்னாலை முடியலை ஆஸ்பத்திரிக்கு பேவம் என்றதும் அவசரமாக  காரில் ஏற்றிக்கொண்டு  நான் வேலை செய்யும் இடத்திற்கு முன்னால் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டுபோய் அவசர பிரிவில் சேர்க்கிறேன்.அதிகாலை என்பதால் பத்து நிமிடத்திலேயே வைத்தியசாலைக்கு போய்விட்டிருந்தேன்.
அவசரப் பிரிவில் வழைமைபோல குளுக்கோஸ் ஏத்திவிட்டு பரிசோதனைக்காக இரத்தம் எடுத்துக்கொண்டு போனார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து இரத்த பரிசோதனையோடு வந்த  வைத்தியர் இரத்தத்தில் உப்பு (சோடியம்)அளவு பத்தவில்லை  அதுதான் தலைசுற்றுகிறது  என்றுவிட்டு  தாதியிடம் உப்பை குளுக்கோசில் கலந்து ஏற்றச்சொல்லிவிட்டு போய் விட்டார். அட சாதாரண உப்புப் பிரச்சனை என நினைத்து படி போனில் கேம் விழையாடிக்கொண்டிருந்தேன்  மனிசி திடீரென படுக்கையில் இருந்து எழுந்து இருக்க முயற்சி செய்ய எழும்பிப் போய் அவரை படுக்கும்படி சொல்லி படுக்கையோடு  சரிக்க அவருக்கு திடீரென வலிப்பு வந்த மாதிரி கை கால்களை இழுக்க தாதிகள் வைத்தியர்எல்லாருமே ஓடிவவந்து  அமத்திப் பிடித்தார்கள் ஒரு சில வினாடிகளில்   மயக்க நிலைக்குப் போய் விட்டார்.

இப்பதான் மனதிலை லேசாய் ஒரு கலக்கம் வரத் தொடங்கியிருந்தது. வைத்தியரிடம் பிரச்சனை ஒண்டும் இல்லையா ??எண்டதும் இல்லை  உடல் உப்புபை உடனடியாக ஏற்றுக் கொள்ள மறுத்ததால்தான் அப்படி வலிப்பு வந்தது சில மணித்தியாலங்கள் நன்றாக  நித்திரை கொள்வார்  அதன் பின்னர் எல்லாம் சரியாகி விடும் என்றார்.ஆனாலும் மனசிற்குள் ஏதோ ஒரு பயம் புதிதாய் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது. இப்பொழுது காலை பத்துமணியாகியிருந்தது அதற்கிடையில் இரண்டு தடைவை மீண்டும் இரத்தப் பரிசோதனையும் ஒரு I.R.M  மற்றும் Radiogramபரிசேதனையும் எடுத்து முடித்திருந்தார்கள்.எனக்கும் கடையை திறக்க வேண்டும் முதலேயே முதலாளிக்கு போனடித்து விடயத்தை சொல்லி விட்டு கடையை திறந்து வேலையாட்களிடம் சொல்லி விட்டு மீண்டும் வைத்திய சாலைக்கு போயிருந்தேன்.

மனைவியோ  மாலை  மூன்று மணியளவில் கண்விழித்து  என்னையும் சுற்றி வர பார்த்தார்  அவரின் கையைப் பிடித்து  என்ன செய்யிது?? என்று கேட்டேன்  அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை  என்பது மட்டுமல்ல  எதுவுமே நினைவில் இல்லை  பொருத்தியிருந்த வயர்களை  பிடுக்கி விட்டு எழுந்து போக முயற்சித்தார் உடனே நானும் தாதிகளும் ஓடிவந்து அமத்திப் பிடிக்க மருத்துவர்  அவரிற்கு மயக்க ஊசி பேடச் சொல்ல ஒரு தாதி அவசரமாக மயக்க மருந்தை  செலுத்தினாள். எனக்கோ இன்னமும் குழப்பமாகப் போய் விட்டது  வைத்தியரைப் பார்த்தேன் அவரோ  ஒன்றுமில்லை  மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு  விடுபட்டுப் போய் விட்டது அதனை மீண்டும் கொண்டு வர வேண்டும்  அதற்கு ஏற்ற வசதிகள் இங்கு இல்லை எனவே அந்த வசதிகள் உள்ள இன்னொரு வைத்திய சாலைக்கு  அனுப்பப் போகிறோம் என்றார். என்னடா இவன்  ஏதோ கரண்டு கட்டாயிட்டுது  திரும்ப வரும் என்கிற மாதிரி  சொல்லுறானே  என்று யோசித்துக் கொண்டிருக்க மயக்க நிலையில் இருந்து  கோமா நிலைக்கு சென்று விட்டிருந்தார். ஆனால் காரணம் என்ன என்று எதுவும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கவில்லை.

 மனைவியை அம்புலன்சில் இன்னொரு பெரிய அரச வைத்தியசாலைக்கு கொண்டுபோயிருந்தார்கள்.நானும் கடைக்குப் போய் விடயத்தை சொல்லி விட்டு அடுத்த வைத்தியசாலையை தேடிப் போய் கண்டு பிடித்து விட்டிருந்தேன்.. வைத்திய சாலைக்கு எதிரேயே இரண்டு சவப் பெட்டிக் கடைகள் இருந்தது .  சே..இவங்கள் என்ன அப சகுனம் மாதிரி ஆஸ்பத்திரி வாசல்லையே கடையை வைச்சிருக்கிறாங்கள் எண்டு யோசிச் சாலும்  வியாபாரம் எங்கு நடக்குமோ அங்கை தானே கடையை போடுவாங்கள் என்றபடி பல ஏக்கர் கணக்கில் பரந்து  கிடந்த வைத்தியசாலையில் புகுந்து Re animation (மீள ஒழுங்கு படுத்துதல்)பகுதியை அடைந்து அங்கு இருந்த அழைப்பு மணியை  அழைத்து மனைவியின் பெயரையும் விடயத்தையும் சொல்கிறேன் அங்கேயே இருந்கள் நாங்கள் வந்து சந்திக்கிறோம் என்று பதில் வந்திருந்தது.நேரத்தைப் பார்த்தேன்  மாலை ஏழு மணி அது விசேட பிரிவு என்பதால் அவர்கள் அனுமதி இல்லாமல் உள்ளே போக முடியாது  அதனால் அங்கு இருந்த கதிரையில் நான் மட்டுமே தனியாக அமர்ந்திருந்தேன். அப்படி நடந்தால் சே..நடக்காது  அடுத்தது என்ன செய்யலாம்?? என்னத்தை செய்ய  என்று  மனதில் என்னென்னவோ எண்ணங்கள் எல்லாம் ஓடிக்கொண்டிருந்தது நானே கேள்விகள் கேட்டு நானே பதில் சொல்லி எனக்கு நானே ஆறுதல் சொல்லியபடி  இருந்தபோது சில நண்பர்களிற்கும் மனைவி வீட்டிற்கும் போனடித்து விடயத்தை சொல்லி  விட்டு முகப் புத்தகத்திலும் யாழிலும் பதிவிட்டு விட்டு இருக்கும் போது  தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டிருந்தது. அதனால் நேரம் போனது தெரியாமல் கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.நேரம் ஓடிக்கொண்டே இருந்தது  நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டி விட்ருந்தது யாரும் என்னைக் கூப்பிடுவதாயில்லை . என்னை  மறந்திருப்பாங்களோ?? அல்லது என்னை  காவலிருக்க சொன்னவன் வேலை முடிஞ்சு போயிருப்பானோ??என்று யோசித்தக் கொண்டிருக்கும்போதே ஒருவன் வந்து தன்னை அறிமுகம் செய்து நான்தான் உனது மனைவியை கவனிக்கிறேன் உள்ளே வா என்று அழைத்துப் போனான்.

ஒரு அறையில் மனிசியின் தலையில் கவசம் போல் போட்டு உடல் முழுக்க ஏகப்பட்ட வயர்கள் கொழுவிய நிலையில்  அவதார் படத்தில் விண்வெளிக்கு போகும் ஒருத்தனை தயார் செய்வது போல வைத்திருந்தார்கள்.கணணித் திரையில் கோடுகள். புள்ளிகள்.இலக்கங்கள் என ஓடிக்கொண்டிருந்தது. என்னை அழைத்துப் போனவர் என்னைப் பார்த்து  நாங்களும் பரிசோதனைகள் செய்து விட்டோம்  பயங்கரமான பிரச்சனைகள் ஒன்றும் இல்லை  ஒரு போத்தலிற்குள் கல்லைப் போட்டு குலுக்கியது போல மூளை குளப்பமடைந்திருக்கின்றது அதனை மீள ஒழுங்கமைக்கிறோம்  அது ஒழுங்காக வருவதற்கு  சில மணித்தியாலங்கள் ஆகலாம். அல்லது சில நாட்களும் ஆகலாம் அதை உறுதியாக சொல்ல முடியாது  ஆனால் வரும் என்றார். வராமலேயே போய்விடுமா??என்று கேட்க நினைத்தாலும்..  சரி இதற்கு காரணம் என்ன என்று கேட்டேன். அதுதான் இன்னமும் கண்டு பிடிக்கவில்லை தொடர்ந்து பரிசோதனைகள் செய்து கொண்டே இருப்போம். நீ இப்போ வீட்டிற்கு போகலாம் நாளை மாலை வா அதே நேரம் கடந்த காலங்களில் என்னென்ன  மருத்துவம் பெற்றார்  என்கிற விபரங்கள் அவர் பாவிக்கும் மருந்துகள்  அனைத்தையும் எடுக்கொண்டு  நாளை வரவும் என்று சொல்லி விட்டு போய் விட்டார். அழகான தாதி ஒருவர் வந்து  விசிட்டிங் காட் ஒன்றை நீட்டி நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம் என்றதும் அப்படியே அவளை உற்றுப் பார்க்க மனதிற்குள் கவுண்டமணி வந்து  நாயே..நாயே..இந்த நேரத்திலையுமா..என்று திட்ட அவள் உங்கள் மனைவியின் உடல் நிலையை  போனிலேயே தெரிந்து கொள்ளலாம் இந்த இலக்கத்திற்கு அழையுங்கள் நன்றி வணக்கம் என்று விட்டு போய் விட்டாள்.

மறுநாள் காலை வைத்தியர் கேட்ட விபரங்கள்  மருந்துகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மயக்கம் என்ன படத்தில் தனுஸ் படிக்கும் ஓட ஓட தூரம் குறையலை.. என்கிற பாடலை முணு முணுத்தபடி ஸ்கூட்டரில் வைத்திய சாலைக்கு போய்க்கொண்டிருந்தேன் மனைவியின் உடல் நலத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை அதே நேரம் காரணமும் கண்டு பிடிக்கபட்டிருக்கவில்லை. நான் வேலைக்கும் வைத்திய சாலைக்குமாக ஓடிக்கொண்டிருந்தேன். அன்று நான்காவது நாள் சனிக்கிழைமை மதியமளவில் வைத்தியசாலைக்கு போயிருந்தேன்  மனைவியின் செயற்கை சுவாசக்குளாய்கள் அகற்றப் பட்டு சாதாரணமாக சுவாசிக்க விட்டிருந்தார்கள்.அதே நேரம் நான் கொடுத்த மருந்துகள் எல்லாம் வைத்தியர் பார்த்து அதனாலும் இந்த நிலைமைக்கு வருவதற்கு காரணங்கள் இல்லையென்றதோடு மனைவி இப்பொழுது கோமா நிலையில் இருந்து மீண்டு ஆழ்ந்த உறக்க நிலைக்கு வந்துள்ளார்  இனி அவராகபழைய நிலைக்கு  திரும்பவேண்டும்.இப்பொழுது நீங்கள் கதைப்பதெல்லாம் அவரிற்கு புரியும் எனவே அவராக கண்விழித்து பதில் சொல்லும் வரை கதைத்துக்கொண்டே இருங்கள் இன்றும் அவர் சுய நிலைக்கு திரும்பாவிட்டால்  உடலில் செயலிழந்து போன  செல்களையெல்லாம் செயற்பட வைக்கும் Cortisone என்கிற மருந்தை நாளை செலுத்துவோம் என்று விட்டு போய் விட்டார்.

நானும் மனைவின்கு பக்கத்தில் அமர்ந்திருந்து  பழைய சம்பவங்கள் நகைச்சுவையான கதைககள் மகளைப்பற்றி என்று சொல்லிக் கொண்டேயிருந்தோடு அவரது தாயார் சகோதரிகளிற்கும் அவ்வப்போது போனடித்து அவரது காதில் வைத்துக்கொண்டேயிருந்தேன்  .நேரம் ஒன்று இரண்டு என்று ஜந்தரை மணித்தியாலங்கள் ஓடிவிட்டிருந்தது  இடையில் வைத்தியரும்  ஒரு தடைவை வந்து சத்தமாக  கூப்பிட்டு கன்னத்தில் தட்டிப் பார்த்துவிட்டு போய்விட்டிருந்தார் எந்த அசைவும் இல்லை அதே நேரம் தான் மனிசி ஆசையாய் வளர்க்கும் பூனை மீனுவை நான் ஒரு தடைவை கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து வைத்திருந்தது நினைவிற்கு வரவே போனை எடுத்து அந்த வீடியோவை போட்டு இங்கை பார் மீனு வந்திருக்கு பசிக்குதாம் சாப்பாடு வேணுமாம் என்று அது கத்தும் சத்தத்தினை அவரது காதருகே பிடித்தபோது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியிருந்தது.ங்கொய்யாலை ...ஒருத்தன் சாப்பாடு தண்ணியில்லாமல் தொண்டை வறண்டு 5 மணித்தியாலாமா கதைக்கிறன் என்னைப் பற்றி கவலையில்லை பூனைக்கு சாப்பாடு இல்லையெண்டதும் அழுகை வருதா ??எழும்பு உனக்கு ஆறுலாய் இருக்கு என்று நினைச்சாலும்.ஒரு  அசைவாவது தெரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது தொடர்ந்து கதைத்துக்கொண்டேயிருந்தேன்  ஒரு அரை மணித்தியாலம் கழித்து லேசாய் கண்விழித்தார் கடவுளே  இந்தமுறை என்னை அவருக்கு அடையளம் தெரியவேணும் என மனது வேண்டிக் கொண்டது.
என்னை பார்த்தவர் ''என்னங்க ஆச்சு??

ஒண்டும் இல்லை லேசா தலை வலிக்கிது எண்டு சொன்னியா  நான் வைத்தியசாலைக்கு கொண்டு போனனா..நீ மயக்கமாயிட்டாய். இப்ப ஒண்டும் இல்லை எல்லாம் சரியாயிட்டுது..என்று சொல்லும் போதே மீண்டும் மயங்கி விட்டார். திரும்ப ஒரு பத்து நிமிடம் கழித்து கண்விழித்து அதே

என்னங்க ஆச்சு??

நானும்.ஒண்டும் இல்லை லேசா தலை வலிக்கிது எண்டு சொன்னியா  நான் வைத்தியசாலைக்கு கொண்டு போனனா..நீ மயக்கமாயிட்டாய். இப்ப ஒண்டும் இல்லை எல்லாம் சரியாயிட்டுது..என்று சொல்லும் போதே மீண்டும் மயக்கம் .இப்படியாக  ஒரு பத்துத் தடைவை போய்க்கொண்டேயிருந்தது இரவு மணி பத்தைத் தாண்டி விட்டிருந்தது.இரண்டு கிழைமைக்கு முதல்தான்  நடுவிலை கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை திருட்டு வி.சி.டியில் பார்த்திருந்தேன் அதுக்கு தண்டனைதான் இரு என்று நினைத்தபடி வீட்டிற்கு போய் விட்டிருந்தேன். வீட்டிற்கு முன்னால் தனது நாயை மேய்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு ஜோன் என்னைப் பார்த்ததும் மனைவியின் உடல் நலத்தை விசாரித்தார் இவரிற்கு வயது 81 ஒரு ஓய்வு பெற்ற பொது வைத்தியர். இன்று கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது சரிவராவிட்டால்  நாளை Cortisone கொடுக்கப் போவதாக சொல்லியுள்ளார்கள் என்றதும்.முடிந்தளவு Cortisone குடுப்பதை தவிர் அதைக் கொடுத்தால் பின்னர் பக்க விளைவுகள் வரும் என்றபடி நாயை மேய்த்துக்கொண்டு போய்விட்டார்.

அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழைமை நான்கு நாளைக்குப் பின்னர் மனைவியின் நிலைமை வழைமைக்குத் திரும்பியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக  நடந்தது அனைத்தும் அவரிற்கு நினைவு வரத் தொடங்கியிருந்தது.தொலைபேசியில் ஊரிற்கு அவரது குடும்பத்தோடு நன்றாக கதைத்தார்.அவரை விசேட பிரிவில் இருந்த சாதாரண அறைக்கு மாத்தியவர்கள்  அவரது உடல் நிலை கொஞ்சம் தேறியதும் வீட்டிற்கு போகலாம் என்றார்கள்.பதினோராவது நாள் வீட்டிற்கு கூட்டி வந்து விட்டிருந்தேன். ஆனால் அவர் கோமா நிலைமைக்கு போனதற்கான காரணம் இன்னமும் தெரிந்திருக்கவில்லை.அன்று மாலை மனைவியை பாரக்க ஜோன் வந்திருந்தார் அவரும் நானும் நேரம் கிடைக்கும் நேரங்களில் விஸ்கி அடித்தபடியே உலக விடயங்கள் அரசியல் என்று கிண்டிக் கிழறுவது வழைமை அன்றும் அவர் மனைவியை நலம் விசாரித்ததும் இருவருமாக வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து வழைமைபோல நான் இரண்டு கிளாசை  எடுத்து விஸ்கியை  பாதி நிரப்பி  ஜஸ் கட்டிகளை போட்டேன் கையில் கிளாசை எடுத்தவர் இது உனது மனைவியின் உடல் நலத்திற்காக என்றபடி  சியஸ் செய்தார் .அப்பாடா ....அன்று நாம் தண்ணியடிப்பதற்கான காரணம் கிடைத்து விட்டிருந்தது. ஒரு கிளாஸ் முடிந்ததுமே  மனைவின் அனைத்து வைத்திய றிப்போட்டுக்களையும் கொண்டு வா..என்றார்.அனைத்தையும் கொண்டு போய் கொடுத்தேன்  ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்தவர். இரண்டாவது கிளாசையும் முடித்து விட்டு மனைவி பாவிக்கும் குளிசைகளை கொண்டு வா..என்றார். எனக்கு எரிச்சலாக வந்தது .இரண்டு வைத்திய சாலையிலை பல வைத்தியர்கள் ஏகப்பட்ட பரிசோதனையள் செய்தே கண்டு பிடிக்க முடியாமல் போனதை பென்சன் எடுத்திட்டு  நாய் மேய்த்துக்கொண்டு திரியிறது மட்டுமில்லாமல் ஓசி  விஸ்கியை  வேறை அடிச்சிட்டு  கண்டு பிடிக்கப் போறானாக்கும் எண்டு நினைச்சாலும். வைத்திய சாலைக்கு கொண்டு போய் காட்டிய மருந்துகள் காரிலேயே இருந்ததால் அதனையும் கொண்டு வந்து அவர் முனால் வைத்தேன்.

எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவர் அதில் இருந்த மருந்துகளை எடுத்தபடி படுத்திருந்த மனிசிடம் போய் அவற்றைக் காட்டி இதில் கடைசியாக நீ எடுத்த மருந்துகள் ஞாபகம் இருக்கா என்று கேட்டார்.. மனிசியும் தயங்கிய படி என்னை பார்த்தபடியே இரண்டு மருந்துகளை காட்டியபடி நடநததை சொன்னார்.கடந்த சில நாட்களாக ஊரில் அவரது குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்தவர் இரவில் நித்திரை கூட வராமல் தவித்திருக்கிறார்.இது பற்றி என்னிடமும் அதிகம் எதுவும் சொல்லவில்லை  நித்திரை கொள்வதற்காக குடும்ப வைத்தியரிடம் குளிசைகள் வாங்கினால் அது எனக்கு தெரியவரும் என்பதால் அவர் கண்டு பிடித்தததுதான்  அலர்ச்சி குளிசைகள்.அவருக்கு கோடை காலங்களில் மகரந்த அலர்ச்சி உண்டு அதற்கான  குளிசையை போட்டால் கொஞ்சம் நித்திரை வரும் எனவே அலர்ச்சி குளிசைகளை போட்டு விட்டு நித்திரை கொள்ளத் தொடங்கியிருந்தார்.அன்றும் அலர்ச்சி குளிசையை போட எடுத்தபோது நான் வீட்டிற்கு வந்ததால் அவசரத்தில் எடுத்த குளிசையை வேறொரு மருந்து பெட்டியில் போட்டு விட்டிருக்கிறார்.நான் வேலைக்கு போனதும் ஒரு குளிசையை போட்டு விட்டு படுத்திருக்கிறார் நித்திரை வரவில்லை எனவே மீண்டும் ஒரு குளிசையை போட்டிருக்கிறார் ஆனார் அவர் இந்தத் தடைவை போட்ட இரண்டு குளிசைகளும் அலர்ச்சி குளிசைகள் அல்ல இரத்த அழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்.மாறிப்போட்டு விட்டார்.

 எனவே இரத்தம் அழுத்தம் குறைந்து தலை சுற்றல் ஆரம்பித்திருக்கின்றது. நான் வைத்திய சாலையில் அவரை சேர்த்தபோது எனக்கும் அவர் குளிசைகள் போட்டது தெரியாதததால் அதைப்பற்றி சொல்லவில்லை  இரத்த பரிசோதனையில் அவரது இரத்தத்தில் சோடியம் குறைவாக இருப்பதை கண்டு பிடித்தவர்கள் தலைச்சுற்றலுக்கு அதுதான் காரணம் என நினைத்து சோடியத்தை குளுக்கோசில் கலந்து ஏற்றியிருக்கிறார்கள் ஆனால் வேகமாக அதிகளவில் ஏற்றி விட்டார் இதனால் மனைவி கோமாவிற்கு போய் விட்டிருந்தார்.இங்கு இரண்டு தவறு நடந்திருக்கின்றது ஒன்று மனைவி குளிசைகளை  மாறிப் போட்டது இரண்டாவது வைத்தியத் தவறு குறைந்த நேரத்தில் அதிகளவு சோடியத்தை செலுத்தியது.என்று சொல்லி விட்டு ஜோன் வெறும் கிளாசை என்னிடம் நீட்டினார். அவரது கிளாசை நிரப்பிவிட்டு வைத்தியத் தவறா?? நான் யார் ??இந்தா வழக்கு போடுறன் ..கோட்டுக்கு இழுக்கிறன்.நட்டஈடு கேக்கிறன் என்று காத்திலை வீடு கட்டத் தொடங்கவே ..சே பொத்திக் கொண்டு இரு என்னை  அமத்தியவர். இங்கு ஒரு வைத்தியரின்  தவறை இன்னொரு வைத்தியர்  கண்டு பிடித்தாலும் அதனை நோயாளியிடமோ அல்லது வேறு யாரிடமோ சொல்லமாட்டார்கள்  தவறை சரிசெய்து விடுவார்கள் இது பொதுவான நடைமுறை விதி.வைத்திய தவறு என்று உனக்கு தெரிந்தாலும் அதனை உன்னால் நிருபிக்க முடியாது நீ வழக்கு போட்டாலும் உனது மனைவியிடமும் தவறு உள்ளது  எனவே  எது எப்படியோ உனது மனைவி குணமடைந்து விட்டார் அந்தளவில் சந்தோசப்படு என்றவர் விடைபெற்றுக்கொண்டார். இப்போ மனிசி எதுக்காக கோமாவுக்கு போனார் எண்டு கண்டு பிடித்தாச்சு.ஆனால் இத்தனை வருசமா ஜேன் அடிக்கிற அதே விஸ்கியைத்தானே நானும் இத்தனை வருசமா அடிக்கிறன் ஆனா என்னாலை மட்டும் எப்பிடி காரணத்தை கண்டு பிடிக்கமுடியாமல் போனது??அதை கண்டு பிடிக்கும்வரை தொடர்ந்து தண்ணியடிக்கிறதைத் தவிர வேறை வழியில்லை....
 

3345-1-chivas-regal-whisky.jpg

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நகைச்சுவையாக எழுத எல்லோராலும் முடியாது சாத்திரி

  • கருத்துக்கள உறவுகள்

முடியல..எப்படியோ மனிசி தப்பி வந்தது சந்தோசம்.மருந்து மாத்திரைகள் எடுக்கிறவை பார்த்து எடுங்கோ இல்லாட்டில் பரலோகம் போக வேண்டி வரும் :D

இத்தனை வருசமா ஜேன் அடிக்கிற அதே விஸ்கியைத்தானே நானும் இத்தனை வருசமா அடிக்கிறன் ஆனா என்னாலை மட்டும் எப்பிடி காரணத்தை கண்டு பிடிக்கமுடியாமல் போனது??

 

 

 

:lol: நியாயமான கேள்வி!

பெரும் துன்பத்திலும் உங்களுக்கு ஒரு கிளு கிளுப்பு ம்ம் .

 

இதில் நகைச்சுவையா எழுதினாலும் அன்று நீங்கள் உங்கள் நிலையில் இருந்து இருக்க மாட்டியள் என்பது உண்மை . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், வாழ்க்கையை ஒரு நிரந்தர தங்கு மடமாக நினைப்பவர்கள் பலர்! அதே நேரம், வாழ்க்கையை, ஒரு பயணமாக, ஒரு நடைபாதையாகப் பார்ப்பவர் வெகு சிலர்!

 

இப்படியான நினைவுகளையும், நகைச்சுவையுடன் பதிய உங்களால் மட்டும் தான் முடியுமென நினனைக்கிறேன்! உங்கள் மனைவி நலம்பெற்று நீடூழி வாழ வேண்டும்!

 

 

என்னடா இவன்  ஏதோ கரண்டு கட்டாயிட்டுது  திரும்ப வரும் என்கிற மாதிரி  சொல்லுறானே  என்று யோசித்துக் கொண்டிருக்க மயக்க நிலையில் இருந்து  கோமா நிலைக்கு சென்று விட்டிருந்தார். ஆனால் காரணம் என்ன என்று எதுவும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கவில்லை.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கன நாளைக்குப்பிறகு வணக்கம் சாத்திரியார்!  :)
சொந்தக்கதை சோகக்கதை எண்டாலும் பலருக்கு ஒரு எச்சரிக்கைக்கதை.

இந்த கதை எல்லொருக்கும் ஒரு பாடமும் கூட.... மருந்தை கண்டபடி வைத்தியர் பரிந்துரைக்காமல் எடுக்கவும் கூடாது... மற்றும் பாதுகாப்பில்லாமல் வைக்கவும் கூடாது....

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிக்கு சுகமானது மட்டுமில்லாமல் எதற்காக கோமாவுக்கு போனார் என்பதையும் அறிந்த சாத்திரியார் சந்தோசத்தில்  தனக்கு நடந்தவற்றை நகைச்சுவையாக எழுதியுள்ளார்.அத்தோடு மருந்துகள் எடுப்போருக்கு ஒரு படிப்பினையும் கூட.பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்லுறது ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு என்று!!!!!!!!!!சாத்திரியாரின் மனைவி உடல் நலம் தேறி திரும்பி வந்தது மகிழ்ச்சியைத்தருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலும் திருமணமான புதிதில் மனைவியின் மீதுள்ள அக்கறை, கவர்ச்சி குழந்தைகள் வந்தவுடன் சற்றே தொய்வுற்று பின்னர் மிகச் சரியான புரிதல் வந்தவுடன் நிலைமை சரியாகி மறுபடியும் சீராகச் செல்லும். இந்த அக்கறை தொய்வு, 30 வயது முதல் 55 வயது வரை இருக்கலாம். இப்பேர்பட்ட காலங்களில் சீண்டலும், சச்சரவுகளும் அதிகமென்பதால் ஒருவருக்கொருவரின் தேவைகளின் கவனிப்பிலும் சறுக்கல்கள் இருக்கும். வயது 55 மேல் ஆகிவிட்டால், ஆண்களின் மனநிலை தொழிலில் ஓய்வை நோக்கிய  நிலையில், வீட்டில் துணைவியின் கை ஓங்குவது வாடிக்கை. ஏனெனில் முதுமை காரணமான சார்பு நிலை. இதில் இடைப்பட்ட அந்த 20 வருடங்கள் மிக முக்கியமான சுவாரசியமான வாழ்க்கையில் சிறிதே தவறினாலும் வாழ்க்கை கசந்துவிட வாய்ப்புக்கள் அதிகம். ஆகையால் ஒருவருக்கொருவர் மிகுந்த அக்கறையுடனும், புரிந்துகொண்டு பொறுப்புடன் வாழ்க்கையை வாழ்ந்தால் குழப்பங்களை தவிர்க்கலாம்.

 

பகிர்விற்கு நன்றி சாத்திரி. (வயதேறுகிறது, 'தண்ணி'யை குறைக்கப் பாருங்கள்! :) )

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் மனிதனின் அனைத்து வகை 'உணர்வு'களும் ஒரு சின்னஞ்சிறிய தீவிற்கு உல்லாசப் பயணம் சென்றன. அவைகளின் ஒவ்வொரு குணாதியசங்களுக்கேற்றவாறு அவைகள் அத்தீவில் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்தன. திடீரென சுனாமி பற்றிய மிக அபாய அறிப்பொன்று அத்தீவில் ஒலிக்கப்பட்டு அனைவரும் உடனடியாக தீவை விட்டு உடனே வெளியேறுமாறு பணிக்கப்பட்டது.

இத்திடீர் அபாய அறிவிப்பால், தீவில் ஒரே குழப்பமும், பீதியும், களேபரமும் முற்றியது. எல்லோரும் தப்பிக்க உடனே கிடைக்கும் படகுகளை நோக்கி ஓடினார்கள். பழுதாய் கிடந்த படகுகளும் அவசர கதியில் சீரமைக்கப்பட்டன.

இருந்தாலும் 'காதல்' என்ற உணர்வு மட்டும் முதலில் இந்த களேபரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. அதற்கு அந்த தீவைவிட்டு அவ்வளவு சீக்கிரம் வெளியேற மனமில்லை. ஆனால் ஒருத்தரும் அங்கே இனி இருக்க முடியாது என்ற நிலைக்கு நிலைமை மிக மோசமடையவே, வேறு வழியின்றி தீவை விட்டு வெளியேறலாமென்ற அரை மனதுடன், சுற்றுமுற்றும் தப்பிக்க ஏதாவது படகு இருக்கிறதாவென தேடியது.

 

அந்தோ பரிதாபம்...! ஒரு படகும் அங்கே இல்லை..இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் தீவு முழுவதும் தேடியது 'காதல்'.

அப்பொழுது, 'செல்வம்' ஒரு விலையுயர்ந்த படகில் அனைத்துவகை பொக்கிஷங்களையும் சுமந்தாவறு கடக்கையில், 'காதல்' 'செல்வத்'தைப் பார்த்து "என்னையும் உன்னுடன் ஏற்றி அழைத்துச் செல்" என்று கூவியது.

 

அதற்கு 'செல்வம்' உடனே மறுத்து, "என் படகில் அரிய விலையுர்ந்த செல்வங்களும், தங்கம், வெள்ளி போன்றவைகளும் இருப்பதால் உனக்கு இங்கே இடமில்லை!" என கூறிவிட்டுச் சென்றது.

சிறிது நேரத்தில், கம்பீர 'அழகு',  மிக அழகான படகில் அப்பகுதியைக் கடக்க வந்தது.

 

உடனே 'காதல்', "இங்கே எனக்கு யாருமில்லை, என்னையும் உன் படகில் ஏற்றி கரைசேர்க்க உதவுவாயா..?" என உதவி கோரியது.

 

'அழகோ' தற்பெருமையுடனும், இறுமாப்புடனும், "உன்னை ஏற்றிச் செல்ல என்னால் முடியாது..உன் சேறுபடிந்த அழுக்கான கால்களுக்கு இங்கே இடமில்லை!" எனக் கூறி கடந்தது.

சிறிது நேரத்தில் 'துன்பமும்' அப்பகுதியை நோக்கி படகில் கடந்து கொண்டிருந்தது.

 

'காதல்' "என்னையும் உன்னுடன் ஏறிச் செல்வாயா..?" எனக் கோரியது.

 

அதற்கு 'துன்பம்', "ஹூம், நானே மிகுந்த துன்பத்தில் இருக்கிறேன்..இதில் நீ வேறையா..? நான் தனித்திருக்கவே விரும்புகிறேன்!" எனக் கூறி கடந்தது.

சற்றே நேரம் கடந்து, 'இன்பம்' அப்பக்கம் படகில் வந்தது.

 

'காதலும்' வழக்கம் போல் தப்பிக்க உதவிக்கு அழைத்தது..ஆனால் 'இன்ப'போ அளவுக்கதிகமான மகிழ்ச்சியில் திளைத்திருந்ததால் யாரையும் சட்டை செய்யாமல் அப்பகுதியை கடந்தது.

'காதல்' மிகவும் சோர்ந்தது...மனதிலும் அமைதியில்லாமல் எப்படி இந்த ஆபத்திலிருந்து தப்புவது? என தீவிர மனத் தத்தளிப்பினால் தவித்தது.

 

அப்பொழுது "ஹலோ... காதல்! இப்படி வாரும்..., இங்கே செளகரியமாக அமர்ந்து கொள்ளும்..!" என அபயக்கரம் நீட்டியது ஒரு குரல்.

 

உடனே 'காதல்', 'யாரிந்த புண்ணியவான் நம்மைக் காப்பது? என எதையும் நோக்காமல், 'அப்பாடா, இனி நாம் பிழைத்து பாதுகாப்பாக கரை சேர்ந்துவிடலாம்' என்ற நிம்மதியுடன் எண்ணியவாறு உடனே படகில் ஏறி அமர்ந்தது. பயணம் முடிந்து அக்கரை சேர்ந்தவுடன், 'காதல்' அப்பகுதில் நின்ற 'அறிவை' சந்தித்தது.

"அறிவே...! கடும் அபாயத்தில் என்னக் காப்பாறி கரை சேர்த்தது யாரென்று தெரியுமா?" என வியப்புடன் 'காதல்', 'அறிவிடம்' வினவியது.

'அறிவு' புன்னகையுடன் "அது காலம்" என்றது.

உடனே 'காதல்', "ஏன் காலம் என்னைக் காப்பாற்ற வேண்டும்?" என மிக வியப்புடன் வினவியது.

உடனே 'அறிவு' ஆழ்ந்த அர்த்த பார்வையுடனும், புன்முறுவலுடனும், கூறியது: "காலத்திற்கு மட்டுமே உன்னுடைய அருமையும், உன்னால் கிட்டும் மிகப்பெரிய அன்பும், ஆதரவும் பெருமையும் புரியும். காதல் மட்டுமே இவ்வுலகில் நிம்மதியையும் அமைதியையும் தர வல்லது!"

 

 

ஆகையால் யாழ் உறவுகளே, நம்மிடம் செல்வமிருக்கையில் ஆணவத்தால் காதலை அடக்குகிறோம், அழகும் கம்பீரமுமிருக்கையில் கண்டுகொள்வதில்லை, துன்பத்திலும், இன்பத்திலும் காதலை உதாசீனப்படுத்துகிறோம் அல்லது வசதியாக மறந்துவிடுகிறோம்... ஆனால் அதற்குரிய 'காலம்' வரும்போது மட்டுமே காதலின் மகிமையை, அருமையை நாம் உணர்கிறோம்.

 

சரிதானே?
 

- இவ்விடத்திற்கு பொருத்தமாக இருக்குமென்று தோன்றியதால், படித்ததை பதிகிறேன்.

 

இப்பிடி எழுதுறதுதான் சாத்ஸ்ஸின் தனி ஸ்டைல்...! அதை சொல்லவா வேண்டும்!? :)

எப்படிப்பட்டதொரு  பிரச்சினையையும் கலக்கமில்லாமல் எதிர்கொள்ளுவதில் சாத்திரியைக் கேட்டுத்தான். :)

 

 

 

சாத்ஸ்.... தண்ணியடிச்சா வாறது ஒரு..... "தனி ஞானம்" என்பது உண்மைதான். :)

 

 

 

இந்தக் கதைக்கு நான் விருப்பு வாக்கிட விரும்பவில்லை . ஏனெனில் ஒருவரின் கவலைக்கு விருப்புவாக்கிடுவது என்பது என்னைப் பொறுத்தவரையில் பண்பற்ற செயலாகும் . ஆகஸ்ட் 18ஆம் திகதி நான் வேலையில் நிற்கும் பொழுது எனது கைத்தொலைபேசிக்கு சாத்திரியின் அழைப்பு வந்தது . இருவரும் வேலையில் நிற்கும்பொழுது தொலைபேசி எடுப்பதில்லை . என்ன இவர் என்றும் இல்லாதவாறு எடுக்கின்றார் என்ற யோசனையுடன் அழைப்பை எடுத்தேன் .சாத்திரி மனைவிக்கு நடந்த விடையத்தைச் சொன்னார் . அவர் மிகவும் மனம் குழம்பிய நிலையில் இருந்தார் . நான் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னாலும் எனது மனமோ பல மடங்கு குழம்பியிருந்தது . அனுபவப் பகிர்வுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுது "ஹலோ... காதல்! இப்படி வாரும்..., இங்கே செளகரியமாக அமர்ந்து கொள்ளும்..!" என அபயக்கரம் நீட்டியது ஒரு குரல்.

 

உடனே 'காதல்', 'யாரிந்த புண்ணியவான் நம்மைக் காப்பது? என எதையும் நோக்காமல், 'அப்பாடா, இனி நாம் பிழைத்து பாதுகாப்பாக கரை சேர்ந்துவிடலாம்' என்ற நிம்மதியுடன் எண்ணியவாறு உடனே படகில் ஏறி அமர்ந்தது. பயணம் முடிந்து அக்கரை சேர்ந்தவுடன், 'காதல்' அப்பகுதில் நின்ற 'அறிவை' சந்தித்தது.

"அறிவே...! கடும் அபாயத்தில் என்னக் காப்பாறி கரை சேர்த்தது யாரென்று தெரியுமா?" என வியப்புடன் 'காதல்', 'அறிவிடம்' வினவியது.

'அறிவு' புன்னகையுடன் "அது காலம்" என்றது.

உடனே 'காதல்', "ஏன் காலம் என்னைக் காப்பாற்ற வேண்டும்?" என மிக வியப்புடன் வினவியது.

உடனே 'அறிவு' ஆழ்ந்த அர்த்த பார்வையுடனும், புன்முறுவலுடனும், கூறியது: "காலத்திற்கு மட்டுமே உன்னுடைய அருமையும், உன்னால் கிட்டும் மிகப்பெரிய அன்பும், ஆதரவும் பெருமையும் புரியும். காதல் மட்டுமே இவ்வுலகில் நிம்மதியையும் அமைதியையும் தர வல்லது!"

 

 

ஆகையால் யாழ் உறவுகளே, நம்மிடம் செல்வமிருக்கையில் ஆணவத்தால் காதலை அடக்குகிறோம், அழகும் கம்பீரமுமிருக்கையில் கண்டுகொள்வதில்லை, துன்பத்திலும், இன்பத்திலும் காதலை உதாசீனப்படுத்துகிறோம் அல்லது வசதியாக மறந்துவிடுகிறோம்... ஆனால் அதற்குரிய 'காலம்' வரும்போது மட்டுமே காதலின் மகிமையை, அருமையை நாம் உணர்கிறோம்.

 

சரிதானே?

 

- இவ்விடத்திற்கு பொருத்தமாக இருக்குமென்று தோன்றியதால், படித்ததை பதிகிறேன்.

 

 

பொருத்தமான போதனைக் கதைகளை இணைப்பதற்கும் யாழில் உங்களை விட யாருமில்லை. :rolleyes:

 

சாத்திரி, உங்கள் புதல்வியை பற்றி கதையில் ஒன்றும் குறிப்பிடவில்லை. அவருக்கு இப்படி பிரச்சனை நடந்தது சிறியவர் என்பதால் சொல்லப்படவில்லையா? நான் எனது அப்பாவின் சாவு மூலம் உணர்ந்து அறிந்துகொண்டவிடயம் வைதியசாலைகளையோ அல்லது மருத்துவர்களையோ எந்தவிதத்திலும் முற்றிலும் நம்பி சரண் அடையக்கூடாது. அவர்கள் தமது வசதியையும், சுகங்களையுமே முதலில் கவனத்தில் எடுப்பார்களேயொழிய அவர்களை நம்பி நாம் ஒப்படைக்கும் எமது அன்புச்செல்வங்கள் எல்லாம் சரியாக கவனிக்கப்படுவார்கள் என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை. 

 

குடி குடிக்கு ஆகாது, பகிடியாக இருந்தாலும் குடியை குறையுங்கள், அது உங்கள் எதிர்கால தேக, ஆரோக்கிய சுகவாழ்விற்கு உதவும். சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

 சாத்திரியார்
நீங்கள் நகைச்சுவையாக எழுத விரும்பினாலும்
இடை இடையே உங்கள் சோகமும் இளையோடுகின்றது . அனுபவித்தவனுக்குத்தான்
எல்லாம் புரியும். :)

 அனுபவப் பகிர்வுக்கு நன்றி சாத்திரி. பொதுவாக எம் பெண்கள் மருத்துகள் குடிப்பதில் வல்லுநர்கள். தலையிடியில் இருந்து எல்லாவற்றுக்கும் உடனே மருந்து குடிப்பார்கள்.  சில நேரங்களில் அதுவே எமனாக போகும் அபாயமும் வந்து விடுகின்றது.

 

மனைவி என்ற உறவின் மீது நாம் ஆண்கள் வைத்திருக்கும் அன்பு, அவருக்கு ஏதும் பிரச்சனைகள் வரும்போதுதான் எமக்கே புரியத் தொடங்கும். ஒரு கணம் கண்ணை மூடி அவரில்லாத உலகத்தினை கற்பனை செய்தாலே சூனியம் தான் தெரியும்.

 

கடைசியில் சீவாஸ் றீகல் படத்தினைப் போட்டுள்ளீர்கள். இதையா வழக்காம அடிக்கின்றீர்கள்? அடிக்கடி குடிக்கக் கூடிய ஒரு சாமான் இல்லை இது. அதிக சக்தி கொண்டது ( Power) என்பதால் Regular பாவனைக்கு சரியான தெரிவில்லை என நினைக்கின்றேன். நான் இதனை கைவிட்டு 3 வருடங்களாகின்றது. இதே போன்றது தான் Black label லும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா வீடடில் பயமுறுத்துவதால்தான் ஒளித்து மருந்து எடுக்கவேண்டி வந்தது.. :D பெண்களுக்கு சம உரிமை கொடுத்தால் இந்தப் பிரச்சினைகள் வராதில்லையா.. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாத்திரி உங்கள் அனுபவ பகிர்விர்ர்க்கு.

உடலில் உப்பு குறைவுகிற நிகழ்வை அழகாக சொல்லி உள் ளீற்கள்..எனக்கு தெரிய அமெரிக்காவில் இந்த சந்தர்ப்பத்தை வழக்காடி வெல்லுவது கடினம். எந்தளவு வேகமாக உடலில் குறைந்த உப்பை சரி செய்வது என்பது நோயின் வீரியத்தை பொறுத்தது, அதை வைத்தியராரே தீர்மானிப்பதால், அவருக்கு தனது தரப்பு நியாத்தை சொல்ல வாய்ப்பு உள்ளது.

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கதைக்கு நான் விருப்பு வாக்கிட விரும்பவில்லை . ஏனெனில் ஒருவரின் கவலைக்கு விருப்புவாக்கிடுவது என்பது என்னைப் பொறுத்தவரையில் பண்பற்ற செயலாகும் . ஆகஸ்ட் 18ஆம் திகதி நான் வேலையில் நிற்கும் பொழுது எனது கைத்தொலைபேசிக்கு சாத்திரியின் அழைப்பு வந்தது . இருவரும் வேலையில் நிற்கும்பொழுது தொலைபேசி எடுப்பதில்லை . என்ன இவர் என்றும் இல்லாதவாறு எடுக்கின்றார் என்ற யோசனையுடன் அழைப்பை எடுத்தேன் .சாத்திரி மனைவிக்கு நடந்த விடையத்தைச் சொன்னார் . அவர் மிகவும் மனம் குழம்பிய நிலையில் இருந்தார் . நான் அவருக்கு எவ்வளவோ ஆறுதல் சொன்னாலும் எனது மனமோ பல மடங்கு குழம்பியிருந்தது . அனுபவப் பகிர்வுக்கு நன்றி

 

வணக்கம் ஐயா! இங்கே சாத்திரியின் கவலைக்கு விருப்புவாக்கு இடப்படவில்லை என எண்ணுகின்றேன். என்னைப்பொறுத்தவரையில் சாத்திரியாரின் இந்த பகிர்வுமூலம் இதனைபடிக்கும்  அனைவருக்கும் இது ஒரு பாடமாகவே அமையும் என்பதில் சந்தேகமேயில்லை.ஒவ்வொருவரின் அனுபவப்பகிர்வுகளும் பல ஆயிரம் மக்களைசென்றடையும் என்பதும் உங்களுக்கு தெரியாததல்ல.
சாத்திரியார் பொதுவாக எழுதிய பகிர்விலும்  உங்களையே முன்னுறுத்தி நிற்கின்றீர்கள்.
மன்னிக்கவும்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நகைச்சுவையாக எழுத எல்லோராலும் முடியாது சாத்திரி

 

 

முடியல..எப்படியோ மனிசி தப்பி வந்தது சந்தோசம்.மருந்து மாத்திரைகள் எடுக்கிறவை பார்த்து எடுங்கோ இல்லாட்டில் பரலோகம் போக வேண்டி வரும் :D

 

 

:lol: நியாயமான கேள்வி!

 

 

பெரும் துன்பத்திலும் உங்களுக்கு ஒரு கிளு கிளுப்பு ம்ம் .

 

இதில் நகைச்சுவையா எழுதினாலும் அன்று நீங்கள் உங்கள் நிலையில் இருந்து இருக்க மாட்டியள் என்பது உண்மை . :rolleyes:

வரவிற்கும் கருத்திற்கும்  நன்றிகள். அதே நேரம் வாழ்க்கையில் இதுவரை காலம் கற்ற அனுபவங்களால் இப்பொழுது என்ன பெரிய பிரச்சனைகள் வந்தாலும் பதற்றப் படாமல் நிதானமாக யோசித்து முடிவுகளை  எடுக்கும் நிலைக்கு மனது பக்குவப் பட்டுள்ளது என நினைக்கிறேன்.

கவலையையும் நகைச்சுவையாக எழுதியுள்ளிர்கள். முக்கியமாக பிழையாக மருந்து எடுத்ததால் வந்த குளறுபடியை வெளிக் கொணர்ந்ததற்காக நன்றி.

 

இந்த வருட ஆரம்பத்தில் எனக்கு அடிக்கடி காய்ச்சல் வந்தது. ஒருமுறை 'Day and night nurse' குளிசை எடுத்த பொழுது நல்ல பயனைத் தந்தது. காய்ச்சல் விட்டு விட்டு வந்ததால் ஒவ்வொரு நாளும் அந்தக் குளிசையை பாவித்தேன்.

காய்ச்சல் போய் தொடர்ச்சியாக தலையிடியும்  சில வேலை மயக்கம் வருவது போலவும் இருந்தது. மருத்துவரிடம் போன பொழுது உயர் இரத்த அழுத்தம் மிக உச்சத்தில் அபாயகரமான கட்டத்தில் இருந்தது. விட்டிருந்தால் மாரடைப்பு / பக்கவாதம் வந்திருக்கும் என்று கூறினார். அந்தக் குளிசை ஒரு நாளுக்கு மேல் எடுக்கக் கூடாதென்றும் உயர் இரத்த அழுத்தத்தை தரும் என்றும் குளிசை எடுப்பதற்கான அறிவுறுத்தலில் சொல்லப்பட்டுள்ளது.  அதனை நான் வாசிக்கவில்லை. நாமதானே  பரீட்சையில் கேள்வியை வாசிக்காமல் பதில் எழுதின ஆள். அறிவுறுத்தல்களை அதிகம் வாசிப்பதில்லை.

சாத்திரி அண்ணை,கவலைகளையும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
கோமா நிலைக்கு போய் மீளவந்தவர் உணர்வு வேறு மாதிரி இருக்கும்.
நானும் அந்த நிலைக்கு போய் வந்தேன்.
பகிர்விற்கு நன்றி    
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரியார், உங்கள் துணைவியார் நலம் பெற்றது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் குடும்பம் நீடூழி வாழவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.