Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்!

Featured Replies

ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார்
 
ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார்
ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கையாழியான் இயற்கை எய்தினார். ஈழத்து மூத்த எழுத்தாளரும், யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவனுமாகிய செங்கையாழியான் எனும் புனைபெயரால் அறியப்படும் கந்தையா குணராசா சுகவீனம் காரணமாக இயற்கை எய்தினார். இவர் மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். 
 
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க.குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். 
 

இவரின் பல கதைகள் விரும்பி வாசித்ததுண்டு.நல்லதொரு எழுத்தாளன் .

ஆழ்ந்த அஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். செங்கை ஆழியானின் கங்கைக் கரையோரம் நாவல்தான் முதன்முதலாக வாசித்த நாவல். 

 

 

பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்

FEB 28, 2016

 

k.kunarasa

ஈழத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா இன்று காலமானார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே தனது 75 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.

1941 ஜனவரி 25ஆம் நாள் யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணையில் பிறந்த க.குணராசா, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று நிர்வாக சேவை அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் ஏராளமான படைப்புகளை எழுதியதன் மூலம் இவர், ஈழத்து வாசகர்கள் மட்டுமன்றி, உலகெங்கும் தமிழர்களால் அறியப்பட்டவர்.

சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்களை மட்டுமன்றி, வரலாறு, புவியியல் நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

நந்திக்கடல், சித்திரா பௌர்ணமி, ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, காட்டாறு, இரவின் முடிவு, ஜன்ம பூமி, கந்தவேள் கோட்டம், கடற்கோட்டை, கிடுகு வேலி போன்ற நாவல்களை இவர் வெளியிட்டுள்ளார்.

பூதத்தீவுப் புதிர்கள், ஆறுகால்மடம் ஆகிய சிறுவர் புதினங்களையும், ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற ஆய்வு நூலையும் செங்கை ஆழியான் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாண அரச பரம்பரை, நல்லை நகர் நூல், மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம், களம்பல கண்ட யாழ் கோட்டை உள்ளிட்ட பல வரலாற்று நூல்களையும், இவர் எழுதி வெளியிட்டார்.

இவர் எழுதிய சிறுகதைகள். மல்லிகைச் சிறுகதைகள் – 1, மல்லிகைச் சிறுகதைகள் – 2, சுதந்திரன் சிறுகதைகள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், முனியப்பதாசன் கதைகள்,  ஆயிரமாயிரம் ஆண்டுகள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

 

http://www.puthinappalakai.net/2016/02/28/news/14031

Edited by கிருபன்

ஆழ்ந்த அஞ்சலிகள்..!!!

  • தொடங்கியவர்

ஈழத்து புனைகதை எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்!

 
ஈழத்து புனைகதை எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்!

 


செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் ஈழத்துப் புனைகதை எழுத்தாளர் க. குணராசா (பி. ஜனவரி 25, 1941) இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் செங்கை ஆழியான் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழதையாக யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் பிறந்த இவர் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக சில காலங்கள் பணியாற்றியுள்ளதுடன் இலங்கை நிர்வாக சேவையிலும் தேர்வாகி அதிலும் பணியாற்றியுள்ளார்.

ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த 'கிடுகு வேலி' என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அத்துடன் இவர் எழுதிய 'வாடைக் காற்று' புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, தரமான படைப்பு எனப் பேசப்பட்டது.

எழுதிய நாவல்கள்

நந்திக்கடல்
சித்திரா பௌர்ணமி
ஆச்சி பயணம் போகிறாள்
முற்றத்து ஒற்றைப் பனை
வாடைக்காற்று
காட்டாறு
இரவின் முடிவு
ஜன்ம பூமி
கந்தவேள் கோட்டம்
கடற்கோட்டை

சிறுவர் நாவல்கள்

பூதத்தீவுப் புதிர்கள்
ஆறுகால்மடம்

வரலாற்று நூல்கள்

யாழ்ப்பாண அரச பரம்பரை
நல்லை நகர் நூல்
மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்

ஆய்வு நூல்கள்

ஈழத்துச் சிறுகதை வரலாறு

தொகுப்புக்கள்

மல்லிகைச் சிறுகதைகள் - 1
மல்லிகைச் சிறுகதைகள் - 2
சுதந்திரன் சிறுகதைகள்
மறுமலர்ச்சிச் சிறுகதைகள்
ஈழகேசரிச் சிறுகதைகள்
முனியப்பதாசன் கதைகள்
ஆயிரமாயிரம் ஆண்டுகள்

கடந்த சில வருடங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த செங்கை ஆழியான் இன்று காலமானார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129467/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...! அவரது வீட்டு நூலகத்தில்தான் பல புத்தகங்கள் எடுத்து  வாசித்திருந்தேன்...! அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்....!

  • கருத்துக்கள உறவுகள்

நான் கதைகளையும், நூல்களையும் எழுதியனாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள்

நேர்காணல்

8 mins ago

நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் எழுதக்கூடாது என எனது மேலதிகாரிகள் என்னைக் கண்டித்தனர். நான் கதைகளையும் கல்விசார் நூல்களையுமே எழுதுகிறேன் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்திய பின்பே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள். இது தவிர, வாடைக்காற்று வெளிவந்த போது அக்கதையில் பூனைக்கண் ஏற்படுவது தொடர்பாக நான் தெரிவித்த கருத்து ஒன்றுக்காக தமது ஊரைக் (நெடுந்தீவு) கேவலப்படுத்தி விட்டேன் எனப் பிரச்சினை எடுத்தார்கள் எனத் தெரிவித்தார் மூத்த எழுத்தாளர் செங்கை ஆழியான்

கோப்பாய் ஆசிரிய கலாசாலை தமிழ் சிறப்புக் கலை மாணவர்களுக்கா வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். (இதுவே அவருடைய இறுதிப்பேட்டியாகக் கொள்ளப்படுகின்றது)

அவரது பேட்டியின் முழு வடிவமும் பின்வருமாறு தரப்படுகிறது.

கேள்வி: உங்களது இலக்கியப் பிரவேசம் எப்போது ஆரம்பமாகியது எனக் கூறுங்கள்

பதில்: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவனாகக் கல்வி கற்றுக் கொண்டிருந்தபோது எனது இலக்கியப் பிரவேசம் இடம்பெற்றது. 1957 ஆம் ஆண்டில் கல்கண்டு என்ற தமிழக இதழுக்காக ஒருபக்கக் கதை ஒன்றை எழுதி அனுப்பினேன். சித்தியின் கொடுமை பற்றிய சிறிய கதை அது. பெயர் ஞாபகமில்லை. கல்கண்டில் பிரசுரமானமைக்குச் சன்மானமாக அதன் ஆசிரியர் தமிழ்வாணன் ஒரு ரூபா காசை யாழ்ப்பாணம் தம்பித்துரை ஏஜன்ட் மூலம் எனக்கு வழங்கினார். அன்று எனக்கு அச்சம்பவம் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அன்று தொடக்கம் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுவரை 185 சிறுகதைகள், 50 நாவல்கள் வரை எழுதியிருக்கிறேன். சிறுகதைகள் 5 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவற்றுள் இரண்டு (இரவு நேரப் பயணிகள், நகராத நத்தைகளும் ஆமை ஓடுகளும்) சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளன.

கேள்வி: நீங்கள் இலக்கியத்துறைக்குள் பிரவேசிப்பதற்குத் தூண்டுகோலாக இருந்த விடயம் என்னவென்று கூறமுடியுமா?

பதில்: யாழ். இந்துக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் தூண்டுதலாக இருந்தனர். ஏரம்பமூர்த்தி மாஸ்டர், தேவன் யாழ்ப்பாணம், மு.கார்த்திகேசன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். பல்கலைக்கழகத்த்தில் கல்வி கற்ற காலத்தில் பேராசிரியர்களான சு.வித்தியானந்தன், க.கைலாசபதி, சதாசிவம் போன்றவர்களுடைய சிந்தனைகள் என்னுள் பாதிப்புக்களை ஏற்படுத்தின. மூவரும் வெவ்வேறு தளங்களில் பயணித்தவர்கள். இதைவிட எனது பாடசாலைப் பருவத்தில் கண்ணன் என்ற சிறுவர் சஞ்சிகை நடத்திய நாவலிலக்கியப் போட்டிக்காக ‘ஆறுகால் மடம்’ என்றொரு நாவலை எழுதி அனுப்பினேன். அதற்குப் பரிசு எதுவும் கிடைக்கவில்லை. பாராட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்கள். அப்போட்டிக்காக ஆக்கங்கள் அனுப்பிய யாவருக்கும் பாராட்டுக் கடிதம் அனுப்பப்பட்டதாகப் பின்னர் அறிந்து கொண்டேன். (சிரிக்கிறார்)

கேள்வி : உங்களுடைய ஆரம்பகால நாவல் ‘நந்திக்கடல்’. நந்திக்கடல் உங்களை எவ்வாறு பாதித்தது?

பதில்: என்னுடைய ஆரம்பகால நாவல்கள் இரண்டு. ஒன்று ஆச்சி பயணம் போகிறாள். மற்றையது நந்திக் கடல். 1963 இல் இவற்றை நான் எழுதினேன். நான் முல்லைத்தீவில் வேலை பார்த்த காலத்தில் அங்குள்ள இயற்கை அழகு என்னைக் கவர்ந்தது. இதனால் நான் நந்திக் கடலைக் களமாகக் கொண்டு நாவல் எழுதினேன்.

கேள்வி : குணராசா என்ற நீங்கள் ‘செங்கை ஆழியான்’ என்ற புனைபெயரை எதற்காகத் தேர்ந்தெடுத்தீர்கள்?

பதில் : நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவனாகப் படிக்கிற காலத்தில் சொந்தப் பெயரைப் பாவித்து ஆக்கங்களை எழுதுவதில் இடர்ப்பாடுகள் இருந்தன. படிக்கும்போது இடதுசாரிச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டதால் செங்கை ஆழியான் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டேன்.

கேள்வி: செங்கை ஆழியான் தவிர வேறு புனை பெயர்களைக் கையாண்டிருக்கிறீர்களா?

பதில் : ஆம். கையாண்டுள்ளேன். மணாளன், சர்வசித்தன், சற்குணம் முதலிய பெயர்களைக் கூறலாம். சற்குணம் என்பது எனது வீட்டுப் பெயர்.

கேள்வி: இலக்கியங்களைப் படைத்துப் பிரசுரிப்பதற்குப் பொருளாதார பலமும் குடும்ப ஒத்துழைப்பும் தேவை. உங்களுக்கு இவை எவ்வாறு சாத்தியப்படுகின்றன?

பதில்: நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆரம்ப காலங்களில் எனது அக்காவும் அண்ணாவும் உதவி செய்தனர். மனைவியின் பங்களிப்பு மிகப் பெரியது என நினைக்கிறேன். என்னைத் திருமணம் செய்த நாளில் இருந்து எனது எழுத்துப் பணிகளுக்கு அவர் முழு ஆதரவையும் தருகிறார். நான் எழுத உட்கார்ந்துவிட்டால் ஒரு வேலைகூடச் சொல்லமாட்டார். எனக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்தவரும் அவரே. ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருக்கிறார் என்ற வகையில் எனது வெற்றிகளுக்குப் பின்னால் என் மனைவி கமலாம்பிகை குணராசாவே இருக்கிறார். தவிர, தற்போது எனது புத்தகங்கள் வெளிவந்தவுடன் ஏறத்தாழ 300 பிரதிகள் விற்பனையாகின்றன. இதனால் புத்தக வெளியீட்டால் பொருளாதார ரீதியில் நான் நட்டமடைவதில்லை.

 

 

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%

 

கேள்வி: 50 நாவல்களைப் படைத்திருக்கிறீர்கள். இவற்றுள் உங்களைக் கவர்ந்த நாவல் எதுவெனக் கூறமுடியுமா?

பதில்: நிச்சயமாக. காட்டாறு நாவல் என்னைப் பெரிதும் கவர்ந்த நாவல் ஆகும். இது யதார்த்தப்பண்புடன் படைக்கப்பட்டது. யதார்த்தப் படைப்பு ஒன்று கண்டது – கேட்டது – உணர்ந்தது என்ற வகையில் சமூகப் பயன்பாட்டை வழங்குமாறு படைக்கப்பட வேண்டும். யதார்த்தமாகப் படைக்கப்படும் நாவல்களே என்னை மிகவும் கவருவன.

கேள்வி : தங்களது அண்மைக்கால நாவல்கள் பற்றிக் கூறுங்கள்?

பதில்: ருத்ர தாண்டவம் என்றொரு நாவலை எழுதினேன். இதில் விடுதலைப் புலிகளின் தோல்வியை வரவேற்று எழுதினேன். முன்னர் பட்ட கஷ்டங்களைவிட தற்போது நிம்மதியாக இருக்கிறோம் என எழுதியுள்ளேன். இதனால் இந்த நாவல் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது. தற்போது மகாவீரன் சங்கிலி காவியம் எழுதிக்கொண்டிருக்கிறேன். இது வீரகேசரி நிறுவனம் கேட்டமைக்கமைய எழுதுகிறேன். இதைவிட வெளிநாட்டுக் காரர்களை மையப்படுத்தி ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

கேள்வி : நீங்கள் பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிக் குவித்துள்ளீர்கள். இது இறைவனின் கொடை எனக் கருதுகிறீர்களா?

பதில்: ஆம். அப்படியும் கொள்ளலாம். உண்மையில் நிறைய வாசிப்பவன் நான். மற்றவர் என்ன சொல்கிறார் எனப் புரிந்து கொள்வதற்கு வாசிப்புப் பழக்கம் பெரிதும் உதவுகிறது. அத்துடன் முயற்சியும் வேண்டும்.

கேள்வி: தமிழ் இலக்கியத் துறை தவிர வேறு எந்தத் துறைகளில் எழுதியுள்ளீர்கள்?

பதில்: புவியியல் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடநூல்களை ஆக்கியுள்ளேன். பட்டப் படிப்பு மாணவர்களுக்காகவும் பல புவியியல் நூல்களை எழுதியுள்ளேன். பொது அறிவு, நுண்ணறிவு நூல்களையும் எழுதியுள்ளேன். நான் பட்டம் பெற்ற காலத்தில் இருந்து இன்று வரை பாடநூல்களையும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். மற்றவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கமாட்டீர்களா? என நீங்கள் கேட்கலாம். பல்கலைக்கழகம் சார்ந்தவர்கள் புள்ளிகள் (Points) கிடைக்குமென்றால்தான் புத்தகங்களை எழுதுகிறார்கள். எனக்கு அந்தப் பிரச்சினை இல்லை. எனவே பாடநூல்களைத் தாராளமாக எழுதுகிறேன். ஒவ்வொரு முறையும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்போது ஆசிரியர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். நான் எழுதுகிறேன். புவியியல் துறை சார்ந்து எத்தனையோ பட்டதாரிகள் வெளிவந்திருந்தும் அவர்கள் எழுத்துப் பணியில் ஆர்வங்காட்டாமை எனக்கு வேதனையளிக்கிறது.

கேள்வி: நீங்கள் ஏன் மலையகப் பிரதேசத்தைக் களமாக வைத்துப் படைப்பாக்கம் செய்யவில்லை?

பதில்: ஒரு பிதேசத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இலக்கியம் படைக்கக்கூடாது. மலையகம் சார்ந்த அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. பிரதேசம் சார்ந்த அனுபவம் ஏற்பட்டாலேயே அதனைக் களமாக வைத்து இலக்கியத்தைப் படைக்கமுடியும் என்பது எனது நம்பிக்கை.

கேள்வி உங்கள் வாழ்வியலில் பல்வேறு தொழில்களை ஆற்றியுள்ளீர்கள். இவற்றுள் உங்களுக்குப் பிடித்த தொழில் எது?

பதில் : ஆசிரியத் தொழிலே என்னைக் கவர்ந்த தொழில். நாம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கும்போது நாமும் கற்றுக் கொள்கிறோம். இதுவே மனநிறைவான தொழிலுமாகும்.

கேள்வி: எழுத்துத் துறையில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றிக் கூறுங்கள்?

பதில்: நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் எழுதக்கூடாது என எனது மேலதிகாரிகள் என்னைக் கண்டித்தனர். நான் கதைகளையும் கல்விசார் நூல்களையுமே எழுதுகிறேன் என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்திய பின்பே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள். இது தவிர, வாடைக்காற்று வெளிவந்த போது அக்கதையில் பூனைக்கண் ஏற்படுவது தொடர்பாக நான் தெரிவித்த கருத்து ஒன்றுக்காக தமது ஊரைக் (நெடுந்தீவு) கேவலப்படுத்தி விட்டேன் எனப் பிரச்சினை எடுத்தார்கள்.

கேள்வி: நீங்கள் எழுதிய எல்லாப் படைப்புக்களும் நூலுருவில் வெளிவந்துள்ளனவா?

இல்லை. சிறுகதைகள் பல என்னிடம் பிரசுரமாகாமல் இருக்கின்றன.

கேள்வி: தங்களது ஆரம்பகால இலக்கியப் படைப்புக்களையும் தற்போதைய படைப்புக்களையும் ஒப்பு நோக்கிப் பார்த்திருக்கிறீர்களா?

பதில்: நிறையத் தடவைகள் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். ஆரம்ப காலங்களில் கண்டதை அப்படியே சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தற்போது மூன்று வகையிலே கதைகளை எழுதுகின்றேன். கண்டதைக் கேட்டதை அவ்வாறே சொல்வது. கண்டதைக் கேட்டதைத் தான் உணர்ந்தவாறு சொல்வது. கண்டதைக் கேட்டதைச் சொல்வதோடு யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கோலங்களையும் அவற்றுடன் கலந்து வெளிப்படுத்திக் கொள்வது. இந்த அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்துள்ளேன்.

கேள்வி: இலங்கையின் தற்போதைய இளம் எழுத்தாளர்களைப் பற்றிய உங்களின் கருத்து?

பதில்: தற்போதைய எழுத்தாளர்களுக்கு வாசிப்புப் பழக்கம் இல்லை. நல்ல எழுத்தாளர்களுடைய எழுத்துகளை வாசிக்க வேண்டும். புதுமைப்பித்தன், வல்லிக்கண்ணன், ஜெயகாந்தன் முதலியோரது எழுத்துகளை வாசிக்க வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் இலங்கையர்கோன், வைத்திலிங்கம் போன்றரது எழுத்துக்களை வாசிக்க வேண்டும். நான் இவற்றையெல்லாம் வாசித்துள்ளேன். அவர்களது எழுத்தாற்றல் உத்திகளைப் புரிந்து கொண்டு எனது படைப்பாக்கத்தை மேற்கொள்கிறேன். ஆனால் இன்றைய இளம் எழுத்தாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவர்களது சிறுகதைகளைப் படிக்கும் போது எனக்குள் ஓர் ‘அதிர்வு’ ஏற்படுகின்றது.

கேள்வி: சில விமர்சகர்கள் பொருண்மையும் கலைத்துவமும் என்ற நிலையில் உங்கள் எழுத்துக்களில் கலைத்துவச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: மக்களின் ஈர்ப்புக்கு உள்ளாகும் படைப்புக்களில் கலைத்துவச் சிக்கல்கள் இருப்பதாக சில விமர்சகர்கள் குறைப்படுவதுண்டு. மார்க்சியவாதிகளே இவ்வாறு அபிப்பிராயப்படுகின்றனர். இவர்கள் ஒரு திர்;ப்பை எழுதி வைத்துவிட்டுத்தான் படைப்பைத் தேடுகின்றார்கள்.

கேள்வி: தமிழின் முதல் நாவல் காவலப்பன் கதை என நீங்கள் கூறுவதாக எங்கள் விரிவுரையாளர் கற்பித்தார். இதனை முதல் நாவலாக கொள்வதற்கு நீங்கள் கூறும் நியாயம் என்ன?

பதில்: இது 1856 இல் யாழ்ப்பாணத்தில் வெளிவந்தது. இது ஒரு மொழிபெயர்ப்பு நாவல். அசன்பே சரித்திரம் ஒரு தழுவல் என்றால் இது ஒரு மொழியெர்ப்பு. மொழிபெயர்ப்பு நாவல், நாவலாகாது என ஒதுக்கக் கூடாது.

கேள்வி: கவிதைத் துறையில் ஈடுபட்டிருக்கிறீர்களா?

பதில்: இல்லை. சிறுகதை மூலமும் நாவல் மூலமும் சமூகத்திற்குச் சொல்ல வேண்டியவற்றைத் தெளிவாகச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

கேள்வி: நீங்கள் ஆசிரியர்களாகிய எங்களுக்கு என்ன கூற விழைகின்றீர்கள்?

பதில்: ஆசிரியத் தொழில் உன்னதமான தொழிலாகும். ஆசிரியர் எந்நாளும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும். புதுப்புது விடயங்களைத் தேடிக் கற்க வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களுக்குச் சிறப்பாகக் கற்பிக்கமுடியும்.

கேள்வி: நாங்களும் உங்களைப் போல வரவேண்டும் என ஆசைப்படுகின்றோம். இதற்கு நீங்கள் கூறும் அறிவுரை?

பதில்: அரசியல், கல்வி எனச் சகல துறைகளிலும் சரியானவற்றைப் படித்து இனங்கண்டு கொள்ளுங்கள். உங்களிடமுள்ள திறமைகளை நீங்களே உய்த்து உணர்ந்து கொள்ளுங்கள். அதனை வளர்தெடுங்கள். அது உங்கள் கைகளிலேதான் இருக்கிறது. 500 அல்லது 1000 பக்கங்களில் இலங்கையில் நாவல் வெளிவருவதைக் காணமுடியவில்லை. எழுத்துத்துறையில் நம்பிக்கை தருபவர்களைக் காண்பதும் அரிதாகவே உள்ளது. முயற்சியுங்கள். முயற்சித்தால் உங்களாலும் முடியும்.

செவ்விகண்டவர்கள்:

வி.ஸ்ரீதரன், செ.சரோஜனிகுமாரி, மா.சரோஜனி, ச.துஷாந்தி, ஐ.நிரஞ்சலா, மு.தௌ.சாஹிராபானு, செ.புஸ்பவதி, மு.ந.பாத்திமா நாதிரா, பெ. மரியநிஷோனி, க.வதனஸ்ரீ, மு.சலாம், சா.மு. சிராஜ், மு.ஜ.மு. நிஹார், மு.மு. நசீம், மு. நவநீதன், சு. பிரபாகரன், எம்.என்.எப். சப்ரா, ஜ.றைஹானா, அ.பா. றிஸானா, மு.உ. ஜெஸ்மிலா உம்மா, ஏ.எல்.எப். மக்கியா, ப. பஹ்மிதா, செ. பர்ஹானா, சி.சாந்தகுமாரி, அ.கு. ஜெராட், அ.சு. சித்திபரீதா

 

http://www.nanilam.com/?p=8414

  • கருத்துக்கள உறவுகள்

ஜனரஞ்சக எழுத்தில் தமிழ்நாட்டில் கூட இவரை அடிக்க ஆளில்லை. 

ஈழத்தில் பிறந்ததால் ஒரு வட்டத்தை விட்டு வெளிவராமலே அடங்கிபோயிற்று இவரின் எழுத்து.

இரங்கல்களும் ஆறுதல்களும்.

  • கருத்துக்கள உறவுகள்

'வாடைக்காற்றின் ' வாசனை இன்னும் நாசியிலிருந்து மறையவில்லை!

அதற்குள் நீ பயணித்து விட்டாய்!

 

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் குணராசா (செங்கை ஆழியான்) எங்கள் அயலவர். 

நாட்டளவில்..நல்ல நடைமுறை இலக்கிய எழுத்தாளர்.. ஆனால்.. இவர் வாழ்ந்த இடத்தில் இவருக்கு அந்தளவுக்கு மரியாதை செலுத்தப்பட்டது என்று சொல்ல முடியாது.  

ஊரில் இருந்த போது தினமும் பார்க்கும் முகங்களில் ஒன்று என்ற வகையில்.. ஒரு தந்தை போன்ற உறவை இழந்த துயர்.

கண்ணீரஞ்சலியும் இரங்கலும். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்களும் புரவுண் ரோட்டே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அப்ப நீங்களும் புரவுண் ரோட்டே?

தெரிஞ்சு...?! ஆம். பிரவுன் வீதி நாங்கள் பட்டம் விட்டு விளையாடிய வீதி. செங்கையாழியான் மட்டுமல்ல.. சத்தீஸு மாஸ்ரரும்.. சிவகுமார் மாஸ்ரரும் கூட அயலவர்கள் தான்...! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் காலமானார்! 
[Sunday 2016-02-28 20:00]
ஈழத்தின் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தினார். ஈழத்து மூத்த எழுத்தாளரும், யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவனுமாகிய- செங்கை ஆழியான் எனும் புனைபெயரால் அறியப்படும் கந்தையா குணராசா, சுகவீனம் காரணமாக தனது இல்லத்தில் காலமானார். இவர் பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார்.

ஈழத்தின் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தினார். ஈழத்து மூத்த எழுத்தாளரும், யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவனுமாகிய-செங்கை ஆழியான் எனும் புனைபெயரால் அறியப்படும் கந்தையா குணராசா, சுகவீனம் காரணமாக தனது இல்லத்தில் காலமானார். இவர் பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார்.

   

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க.குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=152344&category=TamilNews&language=tamil

அன்னாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். ஆத்மா அமைதியடைவதாக!

காட்டாறு, மழைக்காலம் போன்ற குமுகாய நவீனங்களையும் எல்லாளன் போன்ற சிறந்த வரலாற்று  நாவல்களையும் தந்த ஒரு சிறந்த எழுத்தாளரை தமிழ் உலகு இழந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யாழ்ப்பாணத்து மண்வாசனையை தன் எழுத்துக்களால் பதிவு செய்த  மாமேதைக்கு
சிரம்தாழ்ந்த அஞ்சலிகள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

5 hours ago, goshan_che said:

அப்ப நீங்களும் புரவுண் ரோட்டே?

அஞ்சலிக்குள்ளும் கோல் அடிக்க பலர் இருக்கினம் கவனம் .

குணராசா பற்றி முன்னர் யாழில் விரிவாக எழுதியுள்ளேன் .மிக சிறந்த எழுத்தாளர் .

  • கருத்துக்கள உறவுகள்

செங்கை ஆழியானின் எழுத்துக்களின் ரசிகன் நான். ஈழத்து எழுத்தாளர்களுக்கிடையே மிகவும் போற்றுதலுக்குரியவர். ஒரு சில காலம் நானும் இவரின் மாணவனாக இருந்துள்ளேன்.
இவரும் எனது அண்ணாவும் பேராதனையில் ஒன்றாக படித்தவர்கள். 

இந்த வாசக ரசிகனின்/ மாணவனின் கண்ணீர் அஞ்சலிகள்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

இறப்பு இயற்கையே ஆனாலும் அது தமிழனின் சொத்தாகிவிட்டது. எழுத்துக்களில் மை துலங்கும். செங்கை ஆழியான் அவர்களின் எழுத்துக்களில் பிறந்த மண் துலங்கும்.  

கண்ணீர் அஞ்சலிகள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

போர்துக்கேயர்கள், ஒல்லாந்தரால் கொழும்பில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட போது மன்னார் ஊடாக யாழ் ஒடிய எஞ்சிய வீரர்களில் ஒருவரான ரொற்றீகோ என்பவர், தான் தோற்றுவிட்டதன் காரணம் குறித்து டயறியில் குறிப்பு எழுதுகிறார். இந்த குறிப்பு விபரங்களை செங்கையாயாழியன் ஒரு பதிப்பில் எழுத வாசித்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகள், கற்பனைகள், ஆசைகள்....இந்த நாவலை எழுதியது யார் ? வவுனிக் குளத்தை அவர் வர்ணித்த விதம் அழகோ அழகு....அத்துடன் சின்னச் சின்ன உணர்வுகளாக காமத்தினையும் தூவியிருந்தார். இவராக இருக்கலாம்....?

எனது Geography ஆசிரியர்.  மிகவும்  நுணுக்கமாக மாணவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கும் வகையில் பாடம் நடத்துவதில் வல்லவர். பல்கலை தேர்வுக்கு அதிக புள்ளிகள். எடுப்பதற்காக Geography பாடத்தை  விட்டு logic நோக்கி ஓடிய பல மாணவர்களை தனது கற்பித்தல் திறமையினால் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு உலக புவியியல் அறிவை ஊட்டிய எனது மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.