Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

வசந்தகாலச் சோதனை
நான் பிரான்சுக்கு வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. இளமைப் பருவம், அரைகுறை பிரெஞ்சு மொழி அறிவு, கொஞ்சம் படிப்பு, சிறு சிறு வேலைகள். ஊர்சுற்றல் என்று சுதந்திரப் பறவையாகப் பறந்து திரிந்த காலம் அது. அன்றொருநாள் வசந்த காலத்தில் காட்டுப் பகுதியில் நடக்கும் காணிவேல் ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். என்னிடம் இருந்த் 50 பிராங்கில் சாண்ட்வீச் வாங்கிச் சாப்பிட்டது போக மீதியை விளையாட்டுகளுக்குக் கொடுத்துத் தோற்றுவிட்டு காட்டுப் பாதையால் வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தேன். 

சில நாட்களாகவே தடிமன் போன்று மூக்கு வடிந்தபடியும் இருமல் போன்றும் இருந்தது. அதுவரை அதைப்பற்றிக் ககவலைப் படவில்லை. ஆனால் அன்று வழமைக்கு மாறாக வித்தியாசமாக இருந்தது. மூச்சு விடக் கடினமாக இருந்தது. வீட்டை நெருங்கியதும் பேச முடியாத அளவு மூச்சு இறுகியது. எனது அக்கா அவசர மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்தார்.

asthme.png

ஒரு மணிரேரத்துக்குள் ஒரு மருத்துவர் வீட்டுக்கு வந்தார். நிலமையைப் பார்த்துவிட்டு முதுகில் ஊசி ஒன்று போட்டார். சில நிமிடங்களில் மூச்சு வந்தது.
பின்னர் எனது வழக்கமான மருத்துவரைச் சென்று பார்க்குமாறு கூறிவிட்டு மருத்துகள் சிலவற்றை எழுதித் தந்தார்.

அந்த மருந்துகளுடனேயே வாழ்க்கை முழுவதும் வாழப் போகிறேன் என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.

 

முன்கதை
எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் ஏனைய சிறுவர்கள் போல் ஓடியாடி விளையாடியதில்லை. விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டதில்லை. ஏனென்றால் வலிமையாக ஏதாவது செய்தால் மூச்சு முட்டும். தொய்வு என்று சொல்வார்கள்.

எனது வகுப்பில் ஏனையவர்கள் விளையாடும்போது நான் ஓரமாக நிற்பேன். அல்லது அவர்களது விளையாட்டில் சும்மா நிற்கக் கூடிய கௌரவ பாத்திரம் ஏதாவது தருவார்கள்.

எனது அப்பா ஊர் வைத்தியம் முதல் வைத்தியசாலை வரை பல மருத்துவர்களிடம் கூட்டிச் சென்று சிகிச்சை செய்தார். சில தற்காலிக நிவாரணம் கிடைத்ததே தவிர நிரந்தரப் பயன் தரவில்லை.

எனது அப்பப்பா என்னை பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு பல கோவில்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்தார். பஸ் பயணத்தில் ஜன்னலூடாகப் பார்த்த காட்சிகள், கோயில் கிணறுகளில் குளித்தது, கோபுரங்களை வலம் வந்தது என பல காட்சிகள் இன்னும் பசுமையாக மனதில் நிற்கிறது.

தற்செயலாக ஆர்வக் கோளாறில் ஓடி விளையாடினால் மூச்சு அடைக்கும். அம்மாவிடம் ஓடி வருவேன். அவர் பசுப்பாலைச் சூடாக்கித் தருவார் அல்லது முட்டை ஒன்றை அரை அவியலாக்கித் தருவார். அதைச் சாப்பிட சிறிது நேரத்தில் பழைய நிலைக்கு வருவேன். அது ஏனென்று இன்றுவரை புரியவில்லை.

10 வயதளவில் இலங்கையின் மேற்குப் பகுதியில் சென்று குடியேற வேண்டி இருந்தது. அங்கு குடியேறிய சில நாட்களிலேயே இதுவரை நான் அனுபவித்த அவஸ்தையை ஏறத்தாள மறந்து விடக்கூடிய அளவுக்குத் தொய்வு நோய் முற்றாக மறைந்து விட்டிருந்தது.

 

விளக்கமும் சமரசமும்
உலகில் 24 கோடிப் பேர் ஆஸ்மாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத் தொகை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இதற்கான முக்கிய காரணியாக உலகில் அதிகரித்து வரும் மாசுபடுதலைக் குறிப்பிடலாம். சுற்றாடலிலுள்ள மாசுகளினால் ஒவ்வாமை - அலர்ஜி உருவாகிறது. ஒவ்வாமையைச் சரியான முறையில் முணமாக்காவிட்டால் அது ஆஸ்மா போன்ற வியாதிகளைக் கொண்டுவரும். 

எனக்கும் நேர்ந்தது இதுதான். நான் வடபகுதியில் வசித்தபோது ஏதோ ஒரு பொருள் எனக்கு ஒவ்வாது இருந்தது. இலங்கையின் மேற்கிற்குக் குடிபெயர்ந்தபோது அது இல்லாமை போனது. பின்னர் பிரான்சிற்கு வந்தபோது மீண்டும் ஒவ்வாமை ஏற்பட்டது.

ஆஸ்மாவைச் சரிசெய்ய வேண்டுமானால் முதலில் ஒவ்வாமையக் குணப்படுத்த வேண்டும். எனது மருத்துவர் சில பரிசோதனைகளைச் செய்துவிட்டு எனக்குச் சில மரங்களிலிருந்து வரும் மகரந்தமே பிரச்சனை தருவதாகக் கண்டுபிடித்தார். அதற்கான பலதரப்பட்ட மருத்துவமும் சில வருடங்களாகச் செய்யப்பட்டது. ஒன்று முடிய இன்னொன்றாக ஒவ்வாமை மாறிமாறிப் புதிய பிரச்சனைகளைக் கொடுத்தது. ஓமியோபதி. அக்குபங்சர் என்று எல்லாம் முயற்சி செய்துவிட்டேன். இதற்கிடையில் ஆஸ்மா நிரந்தரமாக என்னில் குடியேறி விட்டது. 

உடற்பயிற்சி நல நிவாரணி என்று பரவலாகப் பேசப்படுகிறது. சரி அதையும் முயற்சி செய்து போர்க்கலாம் என்று காலையில் ஒவ்வொரு நாளும் அர மணி ரேரத்திற்கு முன்னர் எழுந்து 15 நிமிடம் ஓடினேன். அது இன்னும் பிரச்சனையையே தந்ததால் சில நாட்களில் அதனையும் கைவிட்டேன்.

இறுதியில் ஒவ்வாமையையோ ஆஸ்மாவையோ முற்றாக ஒழிக்கும் திட்டங்கள் தோல்வியுற்றதால் இவை இரண்டின் வக்கிரத்தைத் தணிக்கும் மருந்துகளுடன் தொடர்ந்து வாழ்வதாக என் ஆஸ்மாவுடன் சமரச ஆனது.

20 வருடங்களுக்கு மேலாகப் பலதரப்பட்ட மருந்துகளுடன் வாழ்க்கை ஓடுகிறது. அவசர நிவாரணத்துக்காக எனது பையிலும் காரிலும் வேலைத் தளத்திலும் ventoline ஸ்பிறே எப்போதும் தயாராக இருக்கும். 

 

ஓடினேன் ஓடினேன்…
சென்ற வருடம் மே மாதம் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். சக வேலையாட்களை 10 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு ஒரு குழுவில் உள்ளவர்கள் செய்யும் உடற்பயிற்சியை அவர்களது மொபைலில் உள்ள மென்பொருள் கணித்து புள்ளிகளை வழங்கும். இதில் சைக்கிள் ஓட்டம், காலோட்டம். கால் நடை என்று பல வகை உடற்பயிற்சிகள் இருந்தாலும் காலோட்டமே அதிக புள்ளிகளைக் கொடுத்தது. கொஞ்சனேனும் எமது குழுவுக்குப் புள்ளி சேர்க்க வேண்டும் என நானும் ஓடுவது என்று தீர்மானித்தேன். வேகமாக ஓடினால் மூச்சு வாங்கும். தேவையான மருந்துகளை முன்கூட்டியே எடுத்துவிட்டு மெதுமெதுவாக ஓடினேன். அப்போது நான் பல பிரச்சனைகளில் மாட்டி மன உளைச்சலுடன் இருந்ததால் ஓடுவது மனதுக்கு இதமாக இருந்தது.

வழக்கமாகப் 15 நிமிடங்கள் ஓடுவேன். அன்றொருநாள் நேரம் போனதே தெரியவில்லை, 20 நிமிடங்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தேன். என்னுள் ஒரு மாற்றம். இதுவரை மூச்சு இரைக்க ஓடிக் கொண்டிருந்த எனக்கு இப்போது மூச்சு விடுவது சற்றுச் சுலபமாக இருந்தது. ஆர்வம் ஏற்பட 30 நிமிடங்களாக ஓடிக் கொண்டிருந்தேன். வேகமாகச் சுவாசித்துக் கொண்டிருந்தாலும் எந்தவித இடையூறும் இன்றிச் சாதாரணமாகச் சுவாசிக்க முடிந்தது. ஆச்சரியத்துடன் வீடு திரும்பினே.

 

பரிசோதனை
3 - 4 தடவை இதே போல் முயன்று விட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. மருந்து பாவிக்காமலே ஒரு தடவை முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது. அன்று இரவு வேலை முடிந்து வந்தபின் ஓடத் தொடங்கினேன். மிகவும் கடினமாக இருந்தது. வேகத்தை மேலும் குறைத்து ஓடினேன். சரியாக அரை மணி நேரத்தின் பின்னர் சாதாரணமாக மூச்சு வந்தது.

சில நாட்களின் பின்னர் 2 நாட்கள் மருந்து எடுப்பதை நிறுத்திப் பார்த்தேன். இறுதியில் 3 மாதங்களில் போட்டி முடிந்தபோது மருந்துகளைப் பாதியாகக் குறைத்திருந்தேன்.
மருத்துவரிடம் ஆலோசனை கேட்டேன். அவரும் மருந்து உனக்குத் தேவையில்லை என்று தோன்றினால் முற்றாக நிறுத்திக் கொள் என்றார். நானும் மேற்கொண்ட பரிசோதனைகளின்படி 5 நாளைக்கு 1 தடவை 1 மணி நேரம் ஓடினால் முற்றாக மருந்துகளிலிருந்து முற்றாக விடுதலை பெறலாம் என்ற சமன்பாட்டை உறுதி செய்தேன். 

7 மாதங்களாக இதையே கடைப்பிடிக்கிறேன். 

 

உதிரி
எனது இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தூண்டுதல் வர வேறு காரணங்களும் உண்டு. 

- ஓடும்போது மனது ஒருநிலைப்பட்டு இனிமையான எண்ணங்கள் தோன்றும்
- கணுக்காலில் நெடு நாளாகச் சுழுக்கு போன்ற ஒரு சிறிய வலி இல்லாமல் போய்விட்டது
- எல்லையைக் கடக்கும் நிலையில் இருந்த கொலஸ்ரரோலும் சீனியும் முற்றாகக் கட்டுப்பாட்டில் உள்ளன
- சந்தர்ப்பம் கிடைக்கும்போது கொழுப்பான அல்லது இனிப்பான உணவுகளைத் தயக்கமின்றி உண்ண முடிகிறது
- விளையாட்டு என்றாலே எட்டாக் கனியாக இருந்த எனக்கு அரை மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றும் (கடைசி ஆளாக ஓடி முடிக்கினும்) அளவு தைரியம் வந்துள்ளது

முற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

15 வருடங்கள்  மறந்தே போயிருந்த இந்த இழுப்பு வியாதி சில இடங்களில் நின்று இப்ப ventoline ஸ்பிறே இல்லாமல் வெளியே கிளம்புவது கிடையாது அதுவும் ஏப்பிரல் பிறக்கும் நேரத்திலும் -1காட்டும் நாடுகளில் வாழ்வது கொடுமையிலும் கொடுமை .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகம் முழுவதும் இந்த அஸ்மா என்னும் கொடிய நோயினால் மிகவும் அவஸ்தைப்படுகிறார்கள்.பலருக்கு இடம் விட்டு இடம் மாறும் போது இல்லாமல் போகிறது.

           வசந்தகாலம் வரும் போது இலைகள் பூக்கள் வெளி வரும் போது தான் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள்.

          இணையவன் நீங்கள் முற்று முழுதாக குணமடைந்தது மிகவும் சந்தோசம்.உடற்பயிற்சியால் இல்லாமல் போவதென்பது ரொம்ப ஆச்சரியம்.தொடர்ந்தும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

Posted

வாழ்த்துக்கள். Treadmill ல் ஓடுவது எனில் முழங்காலை பாதுகாக்கும் உறை(Knee pad) போட்டு ஓடவும்.

Posted

மிகவும பிரயோசனமான ஒரு அனுபவப் பதிவு. நீங்கள் குணமடைந்தது மட்டுமல்லாமல் என்னும் பலர் பயனடைவார்.  பதிவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். 

Posted

உங்களை போலவே எனக்கும் இந்த தொய்வு வியாதி இருக்கிறது. எனது தந்தையார் இந்த வியாதிக்கு எடுத்த பலவகையான மருந்துகளும் கலந்து அதற்கு பலியானார். அப்போது எனக்கு இருபது வயது கடந்து சொற்ப காலம். 

தொய்வு வியாதி பலருக்கும்  ஒவ்வாமையால் (allergy) வரும் வியாதியாக இருக்கிறது. எனக்கு தூசு நிறைந்த சூடான காலநிலையில் இந்த வியாதி வருக்கிறது என்பதை இளம் வயதிலேயே அறிந்து கொண்டேன்.  அதனால் முடிந்த அளவு குளிரான தூசு குறைந்த இடங்களிலேயே வாழ ஆரம்பித்தென். மேலும் நீண்ட உடற்பயிற்சி, ஓடுதல் ஆகியன பெரும் அளவில் சுவாசப் பையையும் சுவாச குழாய்களையும் விரித்து உதவின.

பல ஆண்டுகள் தொய்வு இல்லாமல் இருந்தென். கடந்த மாதம் யாழ்ப்பாணம் போய் குடும்ப தேவைகளுக்காக அலைந்து திரிந்து வெயில் மற்றும் தூசு காரணமாக மீண்டும் வந்து விட்டது. பல மருந்துகளையும் போட்டு நீண்ட காலத்துக்கு பிறகே அது முடிவுக்கு வந்தது. அங்கே போக இப்போது பயமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 அனுபவ பகிர்வு க்கு  நன்றி . வாசகர் பலருக்கு   உதவியாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் பயனுள்ள அனுபவ பகிர்வு..நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு பதிவு.... உங்களின் அனுபவத்துடன் வருவதால் அதன் வலு மிக அதிகம்......! tw_blush:

எனக்கு சுமார் நான்கைந்து வருடங்களுக்கு முன் டயபடீஸ் (நீரிழிவு) வருத்தம் வந்திருந்தது.எமது பரம்பரையில் யாருக்கும் அது இல்லை. அதனால் metformine  eg  1000  மூன்று நேரம் போடவேண்டும் என்றார்கள். நான் முதல் இரு வாரம் அப்படி போட்டு விட்டு பின்பு இரவில் மட்டும் ஒரு குளிசை போட்டு வந்தேன்.ஆனால் மூன்று மாத இரத்தப் பரிசோதனையில் சீனியினளவு கூடுதலாய் இருந்ததை டாக்டர் பார்த்து விட்டு அதை தொடரும் படி கூறினார். நான் அந்த மாதத்தில் இருந்து சிறிது யோகாசனம் செய்ய ஆரம்பித்தேன்.( சுமார் 30 வருடங்களுக்கு முன் நல்ல ஆதீனத்தில் பழகியது.பின் அதை பழைய காதலிபோல் மறந்து விட்டிருந்தேன்). நினைவில் இருந்ததுடன் யூ டியூபிலும் பார்த்து முக்கியமான ஆசனங்கள் செய்து வந்தேன்.அப்போது அது நல்ல கட்டுப்பாட்டுக்குள் வருவதை தினமும் பரிசோதிக்கும் கருவியில் தெரிந்து கொண்டேன்.அடுத்த டெஸ்ட்டில் இரத்தத்தில் சீனியின் அளவு கணிசமாக குறைந்திருந்தது.பின் அவர் 1000 ஒன்று போடும்படி சொன்னார். நான் மேலும் முயன்று தினமும் அல்லது வாரத்துக்கு இரண்டு தடவையாவது 45 நிமிடத்தில் இருந்து 60 / 75 நிமிடம் வரை யோகா செய்து வருவதன் மூலம் இப்போது metformine 500 ஒரு குளிசை இரவில் மட்டும் பாவிக்கிறேன். சில சமயம் போடாது விட்டாலும் பிரச்சினை இல்லை. அதே நேரத்தில் குளிர்பானங்கள் 90  வீதம் குடிப்பதில்லை. விரும்பிய பழங்கள் ஏதாவது சாப்பிட்ட பின் சாப்பிடுவேன். கண்ட நேரமும் சாப்பிடுவதில்லை.

இன்று காலையின் அளவு....!  tw_blush: 

Image associée

Posted

நன்றி இணையவன் தகவலுக்கு. எனக்கு சோம்பல்/தூங்கி வழியும் வியாதி உண்டு. ஒவ்வொரு நாளும் ஓடுவது இதற்கு சிறந்த மருந்தாக இருக்குமோ என்று எண்ணுகின்றேன். சிறுவயதில் பயங்கர உற்சாகமாக இருப்பேன். அப்போதெல்லாம் நடப்பதே ஓடுவது போன்றுதான். பின்னர் எனது உடல்செயற்பாடுகள் மிகவும் குறைந்துவிட்டது சோம்பலும் நிறைந்துவிட்டது. இப்போது நிச்சயம் ஒவ்வொரு நாளும் ஓடலாமோ என்று திட்டம் இடுகின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி....இணையவன்!

மனித மனமானது...மனித உடலை ஆழ்வதில்..பெரும் பங்கை வகிக்கின்றது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை!

சுவியர் கூறியது போல....யோக ஆசனங்கள்...சலரோகதைக் குறைப்பதில்...பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை விடவும்...யோக ஆசனங்கள் தனது நோயைக் குணப்படுத்தும் எனற அவரது அசையாத நம்பிக்கையே...அவரது நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றது!

உங்கள் விடா முயற்சியைக் கண்டு மிகவும் பெருமையாக உள்ளது! இதனையே எமது முன்னோர்கள்....நோய்க்கு இடம் கொடேல்...என்று கூறியுள்ளார்கள்!

சிறு வயதில்...எனது அம்மா வழிப் பேரனார்...கொஞ்சம் திருநீற்றையும்...வேப்பிலையையும் வைத்துப்....புலிமுகச் சிலந்தி...மற்றும் பாம்புக்கடி போன்றவற்றுக்கு..வைத்தியம் பார்ப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டிருக்கிறேன்! பின்னர்...கொஞ்சம் வளர்ந்த பிறகு...அவரைத் துருவியும், குடைந்தும் கரைச்சல் கொடுத்து...எவ்வாறு அவற்றை உங்களால் குணப்படுத்த முடிகின்றது என்று கேட்ட போது...அவர் ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதை என்று எனக்குச் சொன்ன விஷயம் இது தான்~

பாதிக்கப் பட்டவரின் மனதில்...இந்த விஷம் இறங்கி விட்டது எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதே...முக்கிய நோக்கம்! மந்திரங்களும், வேப்பிலையும், விபூதியும் அந்தக் காரியத்தைக் கச்சிதமாகச் செய்கின்றன! அந்த நம்பிக்கை....பாதிக்கப்பட்டவரிடம்..உறுதியாக ஏற்படுமிடத்து...அவரது நம்பிக்கையே..அவரது விஷத்தை இறக்கி விடும்!

கலைஞன்....சில விடயங்களில் திட்டமிடல்.....சரிப்பட்டு வராது!

சட்டுப் புட்டென்று ...செயலில் இறங்கி விட வேண்டியது தான்~

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸ்த்துமா (இழுப்பு) அப்பாவுக்கு அவர் மத்திய வயதில் இருக்கும்போது முதன்முதலாக வந்தது. ஆனால் சிறிது காலத்திலேயே இல்லாமல் போய்விட்டது. சிறு வயதில் இல்லாத வருத்தம் ஏன் இடையில் வந்தது என்று தெரியவில்லை. இணையவன் குறிப்பிட்டதுபோன்று ஒவ்வாமை காரணமாக வந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Quote

 

இணையவன்,வேற பெயரில் வந்து எழுதி,எழுதி நன்றாக எழுத பழகி விட்டார். வாழ்த்துக்கள்  .:102_point_up_2:

Posted

பயனுள்ள கட்டுரை. நன்றி இணையவன்

நான் கடந்த வருடம் மார்ச் முடிவில் இருந்து டிசம்பர் வரைக்கும் நாளொன்றுக்கு சராசரியாக 10,000 steps நடக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் படி நடக்க தொடங்கி சில நாட்கள் 20,000 steps வரை கூட நடந்து இருக்கின்றேன் (ஒரு கிலோ மீட்டருக்கு கிட்டத்தட்ட 1500 steps தேவைப்படும்). டிசம்பரில் பின்  குளிர் இங்கு கடுமையாக இருப்பதால்  நடையை  6000 steps ஆக குறைத்து நடந்து வருகின்றேன். இந்த April நடுவின்  பின் மீண்டும் 10,000 steps நடக்க ஆரம்பித்து விடுவேன். வீட்டில் treadmill இருப்பினும் அதை பயன்படுத்தும் போது பின் விளைவுகள் இருக்கும் என்பதால் அதில் ஓடுவது இல்லை

இப்படி நடக்க தொடங்கிய பின் தான் உடல் எடையை 5 கிலோவுக்கு மேல் குறைக்க முடிந்து BMI  சுட்டெண்  Normal ஆகியது. அத்துடன் அநேகமாக மனைவியுடன் சேர்ந்து நடப்பதால் இருவரும் மனம் விட்டு உரையாடவும் அதன் மூலம் நல்ல நட்பு தொடரவும் முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தங்கள் நோயை மறைத்து சுகதேசி/பலவான்கள் மாதிரி நடிக்கும் எமது சமுதாயத்தின் மத்தியில்.... நோயையும் கூறி அதன் அனுபவங்களையும் மாற்று நடவடிக்கைகளையும் பகிர்ந்து கொண்ட இணயவனுக்கு நன்றி.
ஒரு சில வருத்தங்களுக்கு இடம்/சூழ்நிலைகளை மாற்றினால் நிவாரணிகள்  உண்டு என பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயனுள்ள பதிவு. என் ஆஸ்மாவுக்கு 37 வயது. என் வாழ்வில் அது வந்த போது என் வயது 20. இரண்டு மில்லிகிராம் Salbutamol எனக்கு தற்காலிகமான தீர்வாய் இருந்து வந்தது. Inhaler பற்றிய விவரமின்மையால் அதன் சகவாசம் சுமார் 34 வயதில் எனக்கு அமைந்தது. அதுமுதல் என் வாழ்வில் Inhalerவாசம்தான். எனது ஆஸ்மா குளிர், வேகநடை, ஓட்டம், காற்று மாசுபடுதல் என அத்தனைக்கும் ஆசைப்படும் ஓர் உயிரிலி எனக் கொள்ளலாம். என் தாய் தந்தை இருவர் வழியிலும் எவருக்கும் இல்லை. எனக்கு மட்டுமே கிடைத்த பேறு ! “உங்களுக்கு மிதமான ஒவ்வாமை ஆதலால் அதிக மூச்சுத்திணறல் ஆபத்து இல்லை” என மருத்துவர் கூறியது சற்றே ஆறுதல். நான் இன்னும் இரண்டு வருடங்களில் பணி ஓய்வு பெற்றதும் இணையவன் கூறியது போல சிறிய அளவில் உடற்பயிற்சி மேற்கொள்ள எண்ணம்; பெரிய அளவில் யாழில் வலம் வர விருப்பம். ஒத்த கருத்துக்களை இணையவனுடன் பகிர்வது போல ஒவ்வாமையையும் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியே !  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, சுப.சோமசுந்தரம் said:

நான் இன்னும் இரண்டு வருடங்களில் பணி ஓய்வு பெற்றதும் இணையவன் கூறியது போல சிறிய அளவில் உடற்பயிற்சி மேற்கொள்ள எண்ணம்; பெரிய அளவில் யாழில் வலம் வர விருப்பம். ஒத்த கருத்துக்களை இணையவனுடன் பகிர்வது போல ஒவ்வாமையையும் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியே !  

உடற்பயிற்சிக்கும் ஓய்வு பெறுதலுக்கும் என்ன தான் சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, ஈழப்பிரியன் said:

உடற்பயிற்சிக்கும் ஓய்வு பெறுதலுக்கும் என்ன தான் சம்பந்தம்?

Treadmill இருந்தால் ஒழுங்காக நடைப்பயிற்சி செய்யலாம் என்று கற்பனை செய்து வாங்கி பத்து நாட்கள் உற்சாகமாய் நடந்து, பின்னர் அந்த சாதனத்தைத் துணி காயப் போட மட்டுமே பயன் படுத்துவதில்லையா ? அதுபோல, பணி ஓய்வு பெற்றால்தான் நிறைய நேரம் கிடைக்கும் (ஏதோ இப்போது பரபரப்பாய் இருப்பது போல), அப்போதுதான் மன அமைதியுடன் உடற்பயிற்சி செய்யலாம் என்று நம்பிக்கைதான். நம்பிக்கைதானே வாழ்க்கை ? ஒன்று மட்டும் புரிகிறது. 'யாழ்'வாசிகளிடம் மிக எச்சரிக்கையாக எழுத வேண்டும் என்பது.

Posted
On 31 mars 2018 at 12:39 AM, பெருமாள் said:

15 வருடங்கள்  மறந்தே போயிருந்த இந்த இழுப்பு வியாதி சில இடங்களில் நின்று இப்ப ventoline ஸ்பிறே இல்லாமல் வெளியே கிளம்புவது கிடையாது அதுவும் ஏப்பிரல் பிறக்கும் நேரத்திலும் -1காட்டும் நாடுகளில் வாழ்வது கொடுமையிலும் கொடுமை .

உங்கள் கருத்துக்கு நன்றி. பரவலாக இப் பிரச்சனை இருந்தாலும் மருந்துகளுடன் பழகிப் போய்விட்டதால் பலருக்கு இது சாதாரணமாகத் தெரிகிறது. 

On 31 mars 2018 at 2:16 AM, ஈழப்பிரியன் said:

உலகம் முழுவதும் இந்த அஸ்மா என்னும் கொடிய நோயினால் மிகவும் அவஸ்தைப்படுகிறார்கள்.பலருக்கு இடம் விட்டு இடம் மாறும் போது இல்லாமல் போகிறது.

           வசந்தகாலம் வரும் போது இலைகள் பூக்கள் வெளி வரும் போது தான் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள்.

          இணையவன் நீங்கள் முற்று முழுதாக குணமடைந்தது மிகவும் சந்தோசம்.உடற்பயிற்சியால் இல்லாமல் போவதென்பது ரொம்ப ஆச்சரியம்.தொடர்ந்தும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

நன்றி ஈழப்பிரியன். 

On 31 mars 2018 at 2:17 AM, nunavilan said:

வாழ்த்துக்கள். Treadmill ல் ஓடுவது எனில் முழங்காலை பாதுகாக்கும் உறை(Knee pad) போட்டு ஓடவும்.

நன்றி நுணாவிலான். நான் Treadmill பாவிப்பதில்லை. உடற்பயிற்சியின்போது உடலுக்குப் பெருமளவில் தேவையான ஒக்சிசனை இயற்கையான பரந்த வெளியில் சுவாசிக்கவே விரும்புகிறேன்.

On 31 mars 2018 at 3:51 AM, சண்டமாருதன் said:

மிகவும பிரயோசனமான ஒரு அனுபவப் பதிவு. நீங்கள் குணமடைந்தது மட்டுமல்லாமல் என்னும் பலர் பயனடைவார்.  பதிவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். 

நன்றி பகலவன்.

Posted
On 31 mars 2018 at 3:51 AM, சண்டமாருதன் said:

மிகவும பிரயோசனமான ஒரு அனுபவப் பதிவு. நீங்கள் குணமடைந்தது மட்டுமல்லாமல் என்னும் பலர் பயனடைவார்.  பதிவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும். 

நன்றி சண்டமாருதன்.

On 31 mars 2018 at 4:13 AM, Jude said:

பல மருந்துகளையும் போட்டு நீண்ட காலத்துக்கு பிறகே அது முடிவுக்கு வந்தது. அங்கே போக இப்போது பயமாக இருக்கிறது.

உங்கள் பதிவுக்கு நன்றி. இப்போது எனக்கு அங்கு போனால் எந்த வருத்தமும் இராது. எந்த மருந்துகளும் பாவிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஒவ்வாமை.

On 31 mars 2018 at 4:20 AM, நிலாமதி said:

 

 அனுபவ பகிர்வு க்கு  நன்றி . வாசகர் பலருக்கு   உதவியாக இருக்கும். 

நன்றி.

On 31 mars 2018 at 7:20 AM, putthan said:

மிகவும் பயனுள்ள அனுபவ பகிர்வு..நன்றிகள்

நன்றி.

Posted
On 31 mars 2018 at 11:54 AM, suvy said:

நான் மேலும் முயன்று தினமும் அல்லது வாரத்துக்கு இரண்டு தடவையாவது 45 நிமிடத்தில் இருந்து 60 / 75 நிமிடம் வரை யோகா செய்து வருவதன் மூலம் இப்போது metformine 500 ஒரு குளிசை இரவில் மட்டும் பாவிக்கிறேன்.

நன்றி சுவி அண்ணா.

நானும் சில நாட்கள் பிரெஞ்சு குரு ஒருவரிடம் யோகாசனம் பயின்றேன். காசு அதிகம் என்பதால் இடையில் விட்டுவிட்டேன். யோகாசனத்தில் பல விதம் உண்டு. நான் பழகியது தசைகளை இழுத்து உடலுக்கு ஒக்சிசனை வழங்கும் கடினமான பயிற்சி. 1 மணிநேரப் பயிற்சி செய்தால் 1 மணி நேரம் ஓடியது போன்று உடல் களைப்பாவும் உற்சாகமாகவும் இருக்கும். 

On 31 mars 2018 at 9:54 PM, கலைஞன் said:

நன்றி இணையவன் தகவலுக்கு. எனக்கு சோம்பல்/தூங்கி வழியும் வியாதி உண்டு. ஒவ்வொரு நாளும் ஓடுவது இதற்கு சிறந்த மருந்தாக இருக்குமோ என்று எண்ணுகின்றேன். சிறுவயதில் பயங்கர உற்சாகமாக இருப்பேன். அப்போதெல்லாம் நடப்பதே ஓடுவது போன்றுதான். பின்னர் எனது உடல்செயற்பாடுகள் மிகவும் குறைந்துவிட்டது சோம்பலும் நிறைந்துவிட்டது. இப்போது நிச்சயம் ஒவ்வொரு நாளும் ஓடலாமோ என்று திட்டம் இடுகின்றேன்.

 

நன்றி கலைஞன்.

ஒரு வாரத்தில் 1 மணி நேரத்தை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஒதுக்க முடியுமா என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். அது படிப்படியாக வழக்கத்துக்கு வந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையானதோர் பதிவு இணையவன். மற்றவர்களாயின் எம் நோயை எப்படி வெளியே சொல்வது என்று தயங்கியிருப்பர். மற்றவர்க்கும் பயன்படட்டும் என்று பொதுவெளியில் எழுதியுள்ள உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

On 02/04/2018 at 5:29 PM, ரதி said:

இணையவன்,வேற பெயரில் வந்து எழுதி,எழுதி நன்றாக எழுத பழகி விட்டார். வாழ்த்துக்கள்  .:102_point_up_2:

புலிகளிக் வேவுப்பிரிவில் இருந்தீர்களா ரதி. இணையத்துக்கு அடிக்கடி வராமலே பல நல்ல தகவல்களைக் கூறுகிறீர்களே.

Posted

இணையவனுக்கு நன்றி.  சுயதரிசனம் எப்பவும் பயன்த்ரும் பங்களிப்புகளாகும். எனக்கும் இப்பிரச்சினை முன்பு தீவிரமாக இருந்தது. இது அப்பா வழிப் பிரச்சினை.

வருடா வருடம்  தை - சித்திரை வரைக்குமான வசந்த காலப்பகுதியில் என்னை முட்டும் இருமலும் பீடித்து ஆட்டும். இறுதியில் இந்த மாதங்கள் இறால் நண்டு கணவாய் மீனும் கதரிக்காயும்  தக்காளிப்பழமும் பெருமளவில் கிடைக்கும் மாதங்கள் என உணர்ந்தேன். பின்னர் மேற்படி உணவுகளும் முட்டை யும் சாப்பிடும் நாட்களில் முட்டுவருவதை பரிசீலித்து அறிந்துகொண்டேன். முட்டையைப் பொறுத்து சிவப்புக்கரு சிக்கலாக இருந்தது.   முட்டை வெள்ளைக்கரு சாப்பிடும்போது சிக்கல் இருக்கவில்லை. இந்த அடிப்படையில் உணவைக் கட்டுப் படுத்தி நோயையும் கட்டுப்படுத்தினேன். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 

அவ்வப்போது குறிப்பாக ஒவ்வமை உணவு சாப்பிட விரும்பும் போது, கிடைக்கிற உணவையே சாப்பிட வேண்டிய கடாயம் ஏற்படும்போது,   தூசியாலோ அதிக மகரந்ததாலோ  மாசுபட்ட  சூழல்களில் முன்னெச்சரிக்கையாக  மொன்ராஸ் எல் சி அல்லது சிற்றிசன் எடுத்துகொள்வதோடு பம்ப் அடிக்கிறேன். நோர்வே செல்லும்போது வசந்தத்தை விரும்பும் எனக்கு மகரந்தம் சிக்கலாவது சாவுக்குகுச் சமன். இதுபற்றிய எனது கவனிப்புகள் பயனுள்ளவை.   எனக்கு புற்கள் பூண்டுகள் மரங்கள் பூக்கும் காலங்களில் சிக்கலில்லை. இடையில் சில பற்றைச் செடிகள் பூக்குக்காலத்தில் மட்டும் மகரந்தம்  தொல்லைதருகிறது. அக்காலக்கட்டங்களில் வர்முன் காக்க முன்னெச்சரிக்கையாக மருந்து அல்லது பம்ப் பயன்படுத்துகிறேன்  கடந்த 30 வருடங்களாக பாதிப்பின்றி வாழ உணவுக்கட்டுபாடும் மாசற்ற சூழலும் உதவுகிறது. தேகப் பய்ற்ச்சி குறிப்பாக யோகாசனத்தில் மூச்சுப் பயிற்ச்சி செய்கிற காலங்களில் மிக ஆரோக்கியமாக உணர்கிறேன். ஒவ்வாமை ஆஸ்மா நோய் இருப்பவர்கள் வைத்தியர் ஆலோசனையோடு கொஞ்சம் பாதிக்கும் கால உணவு  சுற்றுச் சூழல் பற்றிய  கவனிப்புகளோடும் செயல்பட்டால் ஒவ்வாமை ஆஸ்மா என்பவை ஒரு பிரச்சினையே இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.